திருக்குர்ஆனில் அல்லாஹ் அண்டை வீட்டார் குறித்து நமக்கு அறிவுரை கூறியுள்ளான்: “மேலும் நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப்போக்கர், மற்றும் உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹ் வீண் பெருமையும் கர்வமும் கொண்டவர்களை நேசிப்பது இல்லை” (அல்குர்ஆன்: 4:36).
அண்டை வீட்டாருக்குத் தொல்லைத் தருவது விலக்கப்பட்ட காரியமாகும். காரணம் அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய உரிமைகள் கடமைகள் மகத்தானவை. அபூஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘அவன் முஃமினாக மாட்டான், அவன் முஃமினாக மாட்டான், அவன் முஃமினாக மாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் தூதரே! யார் அவன்? என்று கேட்கப்பட்டது. அதற்கு, எவனுடைய தொல்லைகளை விட்டும் அவனுடைய அண்டை வீட்டார் நிம்மதியாக இல்லையோ அவனே!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி)
ஒருவர் நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோ நடந்து கொள்கிறார் என்பதற்கு, அவரைப் பற்றி அண்டை வீட்டார் புகழ்ந்துரைப்பதை அல்லது இகழ்ந்துரைப்பதை அளவுகோலாக நபி (ஸல்) அவர்கள் ஆக்கியுள்ளார்கள்.
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோ நடந்து கொண்டேன் என்பதை எப்படி அறிந்து கொள்வது? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ நல்ல முறையில் நடந்து கொண்டாய் என உன்னுடைய அண்டை வீட்டார் கூறுவதை நீ செவியேற்றால் நீ நல்ல முறையில் நடந்து கொண்டவனாவாய். நீ தீய முறையில் நடந்து கொண்டாய் என உனது அண்டை வீட்டார் சொல்வதை நீ கேள்விப்பட்டால் நீ தீய முறையில் நடந்து கொண்டவனாவாய்’ என்று கூறினார்கள். (அஹ்மத்)
அண்டை வீட்டாருக்கு தொல்லை தருதல் என்பதற்கு பல முறைகள் உள்ளன. அவற்றுள் சில: அண்டை வீட்டாருடன் இணைந்த பொதுச் சுவரில் ஒரு கட்டையை நடுவதைத் தடுத்தல், சூரிய வெளிச்சத்தையும், காற்றையும் அவருக்குத் தடுக்கும் வண்ணம் அவரின் அனுமதியின்றி கட்டிடத்தை உயர்த்திக் கட்டுதல், அவர் வீட்டுக்கு நேராக ஜன்னலைத் திறந்து வைத்து அதன் வழியாக அவருடைய வீட்டின் தனிப்பட்ட விஷயங்களை – நிகழ்ச்சிகளை எட்டிப் பார்த்தல், தட்டுதல், கத்துதல் போன்ற இடையூறு தரும் சப்தங்களால் அவருக்குத் தொல்லை தருதல் – குறிப்பாக தூங்கக்கூடிய மற்றும் ஓய்வெடுக்கக்கூடிய நேரங்களில், அல்லது அவருடைய குழந்தையை அடித்தல், அவருடைய வாசலில் குப்பையை வீசுதல் போன்றவற்றால் அவருக்குத் தொல்லைகள் தருதல்.
அண்டை வீட்டார் விஷயத்தில் செய்யும் பாவம் மிகப் பெரிய பாவமாகும். அவ்வாறு செய்பவனுக்கு அதன் பாவம் பன்மடங்காகின்றது. ஒருவன் பத்து பெண்களுடன் விபச்சாரம் செய்வது தனது அண்டை வீட்டாரின் மனைவியிடம் விபச்சாரம் செய்வதை விட குறைந்த குற்றமாகும்…. அது போல ஒருவன் பத்து வீடுகளில் திருடுவது அவனுடைய அண்டை வீட்டில் திருடுவதை விட குறைந்த குற்றமாகும் என்பது நபிமொழி. (அதபுல் முஃப்ராத்).
ஒரு சில துரோகிகள் இரவில் தமது அண்டை வீட்டார் இல்லாத சமயத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவருடைய வீட்டில் நுழைந்து மோசம் பண்ணி விடுகின்றனர். துன்பம் மிகுந்த வேதனையுடைய நாளில் இத்தகையோருக்கு அழிவு இருக்கிறது.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.