1318. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடைய இதே வீட்டில் எங்களிடம் வந்து தண்ணீர் புகட்டும்படி கேட்டார்கள். ஆகவே நாங்கள் எங்களுடைய ஓர் ஆட்டின் பாலை அவர்களுக்காகக் கறந்தோம். பிறகு நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்கு கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களும் எதிரில் உமர் (ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். நபி (ஸல்)அவர்கள் பாலைக் குடித்து முடித்தவுடன் உமர் (ரலி) அவர்கள் இதோ அபூபக்ர் என்று கூறினார்கள். எனினும் நபி (ஸல்) அவர்கள் தமது (பாலின்) மீதத்தை கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு வலப்பக்கத்திலிருப்பவர்களே முன்னுரிமையுடையவர்கள். ஆகவே வலப்ப்பத்திலிருப்பவர்களுக்கே முதலிடம் கொடுங்கள் என்று கூறினார்கள். இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள் அது நபிவழியாகும் அது நபிவழியாகும் என்று மும்முறை கூறினார்கள்
1319. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), ‘சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான்விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், (அந்தப் பாலில்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்துவிட்டார்கள்.