1301. ‘போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1302. நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, ‘(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)” என்று (அறிவுரை) கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் வாற்கோதுமையில் தயாரித்த ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாரித்த ஒருவகை பானமான ‘பித்உ’வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் விலக்கப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.