1262. கைபர் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘முத்அத்துன்னிஸா.”.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.
1263. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள்.
1264. நாட்டுக் கழுதையின் இறைச்சியை உண்ண வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.
1265. கைபர் கோட்டையின் முற்றுகையில் ஈடுபட்டிருந்த நாள்களில் நாங்கள் பசி பட்டினியால் பீடிக்கப்பட்டிருந்தோம். கைபர் போர் தொடங்கிய நாளில் நாங்கள் காட்டுக் கழுதைகளை வேட்டையாடிப் பிடித்து அவற்றை அறுத்தோம். (அவற்றைச் சமைக்கின்ற) பாத்திரங்கள் கொதிக்கத் தொடங்கியபோது அல்லாஹ்வின் தூதருடைய அறிவிப்பாளர், ‘பாத்திரங்களைக் கவிழ்த்து விடுங்கள். கழுதைகளின் இறைச்சிகளில் சிறிதும் உண்ணாதீர்கள்” என்று (உரக்கக் கூவி) அறிவித்தார். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) (தொடர்ந்து) கூறுகிறார்கள்: இந்த அறிவிப்பைச் செவியுற்ற நாங்கள், ‘அதிலிருந்து குமுஸ் – அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரிய ஐந்திலொரு பங்கு நிதி செலுத்தப்படாமல் இருந்ததால் தான் இப்படி அறிவிக்கப்படுகிறது” என்று சொன்னோம். மற்றவர்கள், ‘(அப்படியல்ல) அதை என்றைக்குமாக நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துவிட்டார்கள்” என்று கூறினார்கள்.
1266. (கைபர் போரில்) மக்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு (நாட்டு)க் கழுதைகள் கிடைத்தன. உடனே அவற்றை மக்கள் சமைத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘பாத்திரங்களைக் கவிழ்த்து விடுங்கள்” என்று பொது அறிவிப்புச் செய்தார்.
1267. நாட்டுக் கழுதைகளின் இறைச்சியைப் புசிக்க வேண்டாமென இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தற்குக் காரணம், அது மக்களைச் சுமந்து செல்லும் வாகனமாக இருப்பதனால் (அது உண்ணப்படும் பட்சத்தில்) அவர்களுக்கு வாகனம் இல்லாமல் போய் விடுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள் என்பதாலா? அல்லது கைபர் போரின்போது நாட்டுக் கழுதைகளை (புசிக்க வேண்டாமென) அவர்கள் (நிரந்தரமாகத்) தடைசெய்துவிட்டார்களா என்று எனக்குத் தெரியாது.
1268. நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது நெருப்பு ஒன்று மூடப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே, ‘எதற்காக இந்த நெருப்பு மூட்டப்படுகிறது?’ என்று கேட்டார்கள். ‘நாட்டுக் கழுதை இறைச்சியைச் சமைப்பதற்காக” என்று மக்கள் பதிலளித்தார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘பானைகளை உடைத்து அவற்றிலுள்ள (இறைச்சி, உணவு ஆகிய)வற்றை எறிந்துவிடுங்கள்” என்று உத்திரவிட்டார்கள். மக்கள், ‘அதிலுள்ளவற்றை எறிந்துவிட்டு அவற்றைக் கழுவி விடலாமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(அவ்வாறே) கழுவிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.