1246. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம் (ரலி), உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே நபி (ஸல்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, சிரித்துக் கொண்டே கண் விழித்தார்கள். உம்மு ஹராம் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் வீரர்களாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டார்கள். அவர்கள் இந்தக் கடலின் முதுகில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் மன்னர்களாக அல்லது கட்டில்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப் போல்… ஏறிச் செல்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு உம்மு ஹராம் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர் (ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, தம் தலையை(த் தலையணையில்) வைத்(து உறங்க ஆரம்பித்)தார்கள்; பிறகு, சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது உம்மு ஹராம் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் புரிபவர்களாக எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர்..” என்று முன்பு போன்றே கூறினார்கள். உம்மு ஹராம் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் (அறப்போருக்காகக் கடலில்) முதன்முதலாகப் பயணிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (சைப்ரஸ் தீவின் மீது அறப்போர் புரியச் சென்றவர்களுடன் உம்மு ஹராம் (ரலி) அவர்களும் கடல் பயணம் செய்து கடலிலிருந்து (தீவின் ஒரு பகுதிக்குப்) புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்கள்.
கடற்பயண அறப்போர்.
புஹாரி : 2788- 2789 அனஸ் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged அறப்போர், அல்லுஃலுவு வல்மர்ஜான், கடல், கனவு, சைப்ரஸ், வீரர். Bookmark the permalink.