1229. போரிடுவதற்குப் புறப்பட்டுச் சென்றவரைக் கூலியைப் பெற்றவராகவோ, போர் ஆதாயங்களைப் பெற்றவராகவோ திரும்பக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அல்லது அவரைச் சொர்க்கத்தில் சேர்க்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுள்ளான். என்னுடைய சமுதாயத்திற்கு நான் சிரமத்தைக் கொடுத்து விடுவேனோ என்று (அச்சம்) மட்டும் இல்லையானால் (நான்) அனுப்பும் எந்த இராணுவத்திற்குப் பின்னரும் (நானும் போகாமல்) உட்கார்ந்திருக்கமாட்டேன். நிச்சயமாக நான் இறைவழியில் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”
1230. இறைவழியில் போரிடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவன் பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் புகுத்துவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை அவரின் வீட்டிற்குத் திரும்பக் கொண்டு வர அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1231. ‘இறைவழியில் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் ஒவ்வொரு காயமும் ஈட்டியால் குத்தப்படும்போது இருந்தது போல் மறுமை நாளில் அப்படியே இருக்கும். அதிலிருந்து இரத்தம் பீறிட்டு ஒடும். ஆனால் அதன் நிறம் இரத்தத்தினுடைய நிறமாக இருந்தாலும் அதன் வாடை கஸ்தூரி வாடையாகவே இருக்கும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.