1208. நான் அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்தி) அமர்ந்திருந்தேன். (ஒரு முறை) அபூ ஹுரைரா (ரலி) கூறினார். ‘பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் உத்திரவிடுகிறீர்கள்?’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, ‘அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்.) அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் கேட்கவிருக்கிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1209. (ஒரு முறை) ‘விரைவில் (அன்சாரிகளான) உங்களை விடப் பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில் அல்லது வெற்றி கொள்ளப்படும் நாட்டின் நிதிகளைப் பங்கிடுவதில்) முன்னுரிமை வழங்கப்படும். இன்னும் நீங்கள் வெறுக்கிற சில காரியங்கள் நடக்கும்.’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உங்களின் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்கள்.
1210. அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இன்னாரை நீங்கள் அதிகாரியாக நியமித்தது போல் என்னையும் அதிகாரியாக நியமிக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘எனக்குப் பிறகு (உங்களை விட) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, (மறுமையில் எனக்குச் சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் ‘ஹவ்ளுல் கவ்ஸர்’ என்னும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்” என்று கூறினார்கள்.