1180. ‘நபி (ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி (ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி (ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது ‘அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாகி விடும்’ என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்’ என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம்.
1181. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் இப்னு அக்வஃ (ரலி) அவர்களிடம், ‘ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலதை(ப் பாடி) எங்களுக்கு கேட்கச் செய்யமாட்டீர்களா?’ என்று கூறினார். ஆமிர் (ரலி) கவிஞராக இருந்தார்கள். அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காக (பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள். ‘இறைவா! நீ இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். உனக்காக (எங்களை) அர்ப்பணம் செய்கிறோம். (உன் கட்டளைகளில்) எதனை நாங்கள் கைவிட்டு விட்டோமோ அதற்காக எங்களை மன்னிப்பாயாக! நாங்கள் (போர்க் களத்தில் எதிரியைச்) சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக! எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக! (அறவழியில் செல்ல) நாங்கள் அழைக்கப்பட்டால் நாங்கள் (தயாராக) வந்து விடுவோம். எங்களிடம் மக்கள் அபயக்குரல் எழுப்பினால் (உதவிக்கு வருவோம்)” என்று பாடிக் கொண்டிருந்தார்கள். (வழக்கம் போன்று பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடத் தொடங்கின.) அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘யார் இந்த ஒட்டகவோட்டி?’ என்று கேட்டார்கள். ‘ஆமிர் இப்னு அக்வஃ’ என்று மக்கள் பதிலளித்தார்கள். அப்போது, ‘அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள். அந்த மக்களில் ஒருவர், ‘இறைத்தூதரே! (அவருக்கு வீர மரணமும் அதையடுத்து சொர்க்கமும்) உறுதியாகிவிட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக்கூடாதா? என்று கேட்டார்.
பிறகு நாங்கள் கைபருக்கு வந்து, கைபர் வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசியேற்பட்டது. பிறகு உயர்ந்தோனான அல்லாஹ் அவர்களுக்கு எதிராக (எங்களுக்கு) வெற்றியளித்தான். வெற்றியளிக்கப்பட்ட அன்று மாலை, மக்கள் நிறைய நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இது என்ன நெருப்பு? எதற்காக இதை மூட்டியிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘இறைச்சி சமைப்பதற்காக” என்று மக்கள் கூறினர். ‘எந்த இறைச்சி?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘நாட்டுக் கழுதைகளின் இறைச்சி’ என்று மக்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவற்றைக் கொட்டிவிட்டு, அந்தப் பா
த்திரங்களை உடைத்து விடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இறைச்சிகளைக் கொட்டிவிட்டு அதன் பாத்திரங்களை கழுவிக் கொள்ளலாமா?’ என்று கேட்டார். ‘அப்படியே ஆகட்டும்” என்று கூறினார்கள். (அன்றைய தினம் போருக்காக) மக்கள் அணிவகுத்து நின்றபோது ஆமிர் (ரலி) அவர்களின் வாள் குட்டையாக இருந்தது. (அதனால்) அவர்கள் குனிந்து, ஒரு யூதனின் காலை வெட்டப் போனபோது அன்னாரின் வாளின் மேற்பகுதி, அன்னாரின் முழங்காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள். (கைபர் வெற்றிக்குப் பின் மதீனாவை நோக்கி) மக்கள் திரும்பியபோது – ஸலமா (ரலி) கூறினார். ‘என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (என் தந்தையின் சகோதரர்) ஆமிரின் நற்செயல்கள் (அமல்கள்) அழிந்துவிட்டன. (அவர் தம் வாளினால் தம்மைத் தாமே குத்திக் கொண்டு தற்கொலை செய்தார்)” என்று மக்கள் எண்ணுகிறார்கள்.” என்று தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இதைக் கூறியவர் தவறிழைத்துவிட்டவர். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு” என்று கூறியவாறு, தம் இரண்டு விரல்களையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள். (தொடர்ந்து)” அவர் துன்பங்களைத் தாங்கினார்;. (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்து) பூமியில் உலவிய இவரைப் போன்ற அரபுகள் மிகவும் குறைவானவர்களே” என்று கூறினார்கள்.