யூதர்களை நாடு கடத்தியது.

1153. நாங்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ‘யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். உடனே நாங்கள் அவர்களுடன் புறப்பட்டுச் சென்று ‘பைத்துல் மித்ராஸ்’ எனுமிடத்தை அடைந்தோம். அங்கு நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு, ‘யூதர்களே! இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (இவ்வுலகிலும் மறு உலகிலும்) நீங்கள் சாந்தி அடைவீர்கள்” என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அதைக் கேட்ட யூதர்கள், ‘அபுல் காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள்” என்று கூறினார்கள். ‘இ(ந்த ஒப்புதல் வாக்குமூலத்)தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு மீண்டும் (இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்து) அவ்வாறே கூறினார்கள். அப்போதும் யூதர்கள், ‘அபுல் காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள்” என்று கூறினர். பிறகு மூன்றாம் முறையும் (அவ்வாறே) நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களை (இந்த ஊரிலிருந்து) நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் யார் தம் (அசையாச்) சொத்துக்கு பதிலாக ஏதேனும் (விலையைப்) பெற்றால் அச்சொத்தை அவர் விற்று விடட்டும். இல்லையேல், பூமியானது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” என்றார்கள்.

புஹாரி :6944 அபூஹூரைரா (ரலி).

1154. பனூ நளீர் குலத்தாரும் பனூ குறைழா குலத்தாரும்; (நபி – ஸல் அவர்களின் மீது) போர் தொடுத்தனர். எனவே, பனூ நளீர் குலத்தாரை நபி (ஸல்) அவர்கள் நாடு கடத்தினார்கள். (பனூ) குறைழா குலத்தார் (வருத்தம் தெரிவித்ததால் அவர்கள்) மீது கருணை காட்டி (மன்னித்து) அவர்களை அங்கேயே (வசிக்க) விட்டுவிட்டார்கள். (ஆனால், பனூ) குறைழா குலத்தினரும் போர் தொடுத்தபோது அவர்களின் ஆண்களைக் கொலை செய்தார்கள். மேலும், அவர்களின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும், அவர்களின் உடைமைகளையும் முஸ்லிம்களுக்கு மத்தியில் (போர்ச் செல்வமாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்ட (பனூ குறைழாக்கள்) சிலருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்க அவர்கள் இஸ்லாத்துக்கு மாறிவிட்டனர். அப்துல்லாஹ் இப்னு சலாம் (ரலி) அவர்களின் குலத்தாரான ‘பனூ கைனுகா’ கூட்டத்தாரையும் பனூ ஹாரிஸா (குலத்தாரான) யூதர்களையும், மதீனா நகரத்தைச் சேர்ந்த யூதர்கள் அனைவரையும் (ஆக) மதீனாவிலிருந்த எல்லா யூதர்களையும் நாடு கடத்திவிட்டார்கள்.

புஹாரி :4028 இப்னு உமர் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , , . Bookmark the permalink.