வயிற்றில் உள்ள சிசு தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டால்…

1095. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹுதைல்’ குலத்துப் பெண் இருவரின் (வழக்கு) தொடர்பாகத் தீர்ப்பளித்தார்கள். அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருத்தி மற்றொருத்தியின் மீது ஒரு கல்லை எறிய அது அவளுடைய வயிற்றில் பட்டுவிட்டது. கர்ப்பிணியாயிருந்த அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை அவள் கொன்றுவிட்டாள். எனவே, நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் இந்த வழக்கைக் கொண்டு வந்தனர். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுக்காக ஓர் ஆண் அடிமையை, அல்லது பெண் அடிமையை உயிரீட்டுத் தொகையாகத் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். அப்போது குற்றம் புரிந்த அப்பெண்ணின் காப்பாளர் (கணவர்), உண்ணவோ பருகவோ, பேசவோ அழவோ முடியாத ஒரு சிசுக்காக நான் எப்படி அபராதம் செலுத்துவது இறைத்தூதர் அவர்களே! இதைப் போன்றவை தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘இவர் (சாதுர்யமாகவும் அடுக்கு மொழியிலும் பேசுவதில்) குறிகாரர்களின் சகோதரர்களில் ஒருவர்” என்று கூறினார்கள்.

புஹாரி :5758 அபூஹூரைரா (ரலி).

1096. ஒரு (கர்ப்பிணிப்) பெண்ணை (அடித்துக்) குறைப் பிரசவம் ஏற்படவைத்தால் (அதற்குப் பரிகாரம்) என்ன என்பது குறித்து உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அப்போது நான், ‘நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆண் அடிமையை அல்லது ஓர் அடிமைப் பெண்ணை அந்த சிசுவுக்காக (இழப்பீடாக) வழங்கிடுமாறு தீர்ப்பளித்தார்கள்” என்றேன்.

புஹாரி 6905 அல்முகீரா பின் ஷூஃபா (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.