1088. ஒருவர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தம் கையை அவரின் வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன் பற்கள் இரண்டு விழுந்துவிட்டன. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா? (அவர் கடித்துக் கொண்டிருக்கும் வரை அவன் தன்னுடைய கையை அப்படியே வைத்துக் கொண்டிருப்பானா? பல்லிழந்த) உமக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது” என்றார்கள்.
1089. நான் நபி (ஸல்) அவர்களுடன் சிரமமான (தபூக்) போரில் பங்கெடுத்துக் கொண்டேன். அந்தப் போர் என்னுடைய அமல்களிலேயே உறுதிமிக்கதாக எனக்குத் தோன்றியது. என்னிடம் கூலியாள் ஒருவர் இருந்தார். அவர் ஒரு மனிதரிடம் சண்டையிட்டார். அப்போது (அவர்களில்) ஒருவர், மற்றவரின் விரலைக் கடித்துவிட்டார். கடிபட்டவர் விரலை உருவிக் கொண்டு, கடித்தவரின் முன் பல்லை உடைத்தார். பல் கீழே விழுந்தது. பல்லுடைக்கப்பட்டவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள் ‘அதற்கு எந்த நஷ்ட ஈடும் இல்லை!” என்று தீர்ப்பளித்துவிட்டு, அவரிடம், ‘ஒட்டகம் மெல்லுவது போல் நீர் மெல்லுவதற்காக அவர் உம்வாயில் தன் விரலைக் கொடுத்துக் கொண்டிருப்பாரா?’ என்று கேட்டார்கள்.