1066. (என் தந்தை) உமர் (ரலி) கூறினார்: என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்” என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும் போதும் சரி; பிறரின் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை.
1067. (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம் செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருந்துவிடட்டும்’ என்று கூறினார்கள்.