எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. அவன் தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை! அவனை வழிபடுவது, அமல் புரிவோர்க்குச் சிறந்ததொரு சம்பாத்தியமாகும். அவனுக்கு அஞ்சுவது பயபக்தியாளர்களின் உன்னதப் பாரம்பரியம் ஆகும்.
தன்னுடைய நேசர்களின் உள்ளங்களை-தன் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் தயார்படுத்தியவன் அவனே! அவ்வாறே அவர்களின் விதியிலும் எழுதினான்! இறைவழிபாட்டில் எல்லாக் கஷ்டத்தையும் களைப்பையும் அவர்களுக்கு இலகுவாக்கினான். ஆகையால் அவர்கள், இறைப்பணி செய்யும் வழியில் எவ்விதச் சோர்வையும் உணரவில்லை!
துர்ப்பாக்கியமுடையவர்கள் மீது – அவர்கள் வழிபிறழ்ந்து சென்ற பொழுது – துர்ப்பாகியத்தை விதித்தான். அவர்கள் அல்லாஹ்வைப் புறக்கணித்தார்கள். அவனை நிராகரித்தார்கள்! ஆகையால் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் அவர்களைப் புகுத்தினான்.
அல்லாஹ்வை – அவன் வழங்கிய அருட்கொடைகளுக்காக நான் புகழ்கிறேன். நான் சாட்சி சொல்கிறேன்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாரும் – எதுவும் நிகரில்லை! எதிரிப் படைகளைத் தோல்வியுறச் செய்தான்! அவனே வென்றான்! மேலும் முஹம்மது நபி, அவனுடைய அடியார்- பிரத்தியேகமாகத் தேர்வு செய்யப்பட்ட திருத்தூதர் என்றும் நான் சாட்சி சொல்கிறேன்!
நபியவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! சிறப்புகளிலும் அந்தஸ்துகளிலும் மிகைத்தவரான நபித்தோழர் அபூபக்ர் மீதும் – எவரைக் குறித்து ஷைத்தான் பயந்து விரண்டோடினானோ அப்படிப்பட்ட உமர் மீதும்- பயபக்தியாளரும் தூய்மையாளரும் குலச்சிறப்புக்கு உரியவருமான உஸ்மான் மீதும் – நபியின் மருகனும் பெரிய தந்தையின் மகனுமாகிய அலீ மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! மேலும் இறைமார்க்கத்தில் உன்னதப் பெருமையையும் லாபத்தையும் சம்பாதித்துக் கொண்டவர்களான நபித்தோழர்கள் அனைவர் மீதும் – வாய்மையுடன் அவர்களைப் பின்பற்றியவர்கள் மீதும் – தாரகைகள் உதித்து மறைந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் ஸலவாத் பொழிந்து கொண்டிருப்பானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
அன்புச் சகோதரர்களே! திண்ணமாக ரமளான் மாத நோன்பு இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகவும் அதன் முக்கியமான அடித்தளமாகவும் திகழ்கிறது!
அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாய்த் திகழக் கூடும்! (நோன்பு நோற்பது) குறிப்பிட்ட சில நாட்களிலேயாகும். ஆனால் அந்நாட்களில் உங்களில் எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) வேறு நாட்களில் கணக்கிட்டு நோற்கட்டும். நோன்பு நோற்க சக்தி பெற்றிருப்பவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால் அவர்கள்) மீது ஃபித்யா – பரிகாரம் கடமை. (ஒரு நாளைக்குரிய) அந்தப் பரிகாரம், ஓர்ஏழைக்கு உணவளிப்பதாகும். ஆனால் எவரேனும் விரும்பி அதிக நன்மைகள் செய்தால் அது அவருக்குச் சிறந்ததாகும். ஆனால் நீங்கள் அறிவுடையோராய் இருப்பின் நோன்பு நோற்பதே உங்களுக்குச் சிறந்தது.
ரமளான் (நோன்பு) மாதம் எத்தகையதெனில், அதில் தான் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. அது மனிதர்களுக்குத் முழுமையான வழிகாட்டியாகவும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதாகவும் திகழ்கிறது!
எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்றிட வேண்டும் ஆனால் எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்கட்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகிறான். அவன் உங்களுக்குக் சிரமம் தர விரும்பவில்லை! (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்காகவும் அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனது மேன்மையைப் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (இவ்வழி காண்பிக்கப்படுகிறது) (2:183- 185)
மேலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இஸ்லாம் ஐந்து அடித்தளங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் முஹம்மத் நபி, அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி சொல்வது. தொழுகையை நிலைநாட்டுவது. ஜகாத் கொடுப்பது. கஅபாவை ஹஜ் செய்வது. ரமலான் நோன்பு நோற்பது – (நூல்: புகாரி, முஸ்லிம்) – ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில்: ரமளான் நோன்பு நோற்பது, கஅபாவை ஹஜ் செய்வது என்று உள்ளது.
ரமளான் நோன்பு கடமை என்பதன் மீது முஸ்லிம்கள் அனைவரும் உறுதியான, ஏகோபித்த கருத்து கொண்டுள்ளார்கள்! அது இஸ்லாமிய மார்க்கத்தின் நடைமுறைகளில் தெளிவாக அறியப்பட்ட விஷயமாகவும் உள்ளது.
எனவே யார் இதன் கடமையை மறுக்கிறாரோ அவர் நிராகரிப்பளர் ஆகிவிடுகிறார்! அதிலிருந்து பாவமன்னிப்புத் தேடி திருந்திவிடுமாறு அவரிடம் சொல்லப்பட வேண்டும். அப்படிப் பாவமன்னிப்புத் தேடி நோன்பு ஒரு கடமையே என ஒப்புக் கொண்டாரெனில் சரி! இல்லையெனில் இஸ்லாத்தை விட்டும் விலகிச்சென்றவர் – நம்பிக்கை கொண்ட பின் நிராகரித்தவர் எனும் முறையில் அவரைக் கொன்றிட வேண்டும். பிறகு அவரைக் குளிப்பாட்டவோ கஃபன் – துணி பொதியவோ ஜனாஸா தொழுகை நடத்தவோ கூடாது! இறைவனிடம் அருள் வேண்டி அவருக்காகப் பிரார்த்தனை செய்யவும் கூடாது! முஸ்லிம்களின் அடக்கத்தலத்தில் அவரை அடக்கம் செய்யவும் கூடாது! காரணம், அவரது துர்வாடையினால் மக்களுக்குத் துன்பம் ஏற்படலாகாது. அவரைப் பார்த்து அவருடைய குடும்பத்தினர் சிரமப்படக் கூடாது என்பதற்காக!
ரமளான் மாத நோன்பு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒன்பது ஆண்டுகள் நோன்பு நோற்றார்கள்.
இந்த நோன்பு இரண்டு கட்டங்களாகக் கடமையாக்கப்பட்டது. ஒன்று: விரும்பினால் நோன்பு நோற்கலாம். இல்லை எனில் அதற்குப் பதிலாக உணவளித்துப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் எனும் நிலை. ஆனால் உணவு அளிப்பதைவிட நோன்பு நோற்பதே சிறந்தது.
இரண்டு : இந்த விருப்பநிலை மாற்றப்பட்டுப் கட்டாயமாக நோன்பு நோற்க வேண்டுமென கட்டளையிடப்பட்டது! நபித் தோழர் ஸலம் பின் அக்வஃ (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: ‘நோன்பு நோற்க சக்தி உள்ளவர்கள் (விட்டு விட்டால் அவர் கள்) மீது ஃபித்யா-அபராதம் கடமை. அது ஏழைக்கு உணவு அளிப்பதாகும் – என்கிற வசனம் இறக்கியருளப்பட்ட போது, நோன்பு நோற்க விருப்பமில்லாதவர் அதற்குப் பரிகாரமாக உணவு அளித்துக் கொண்டிருந்தார். இந்த வசனத்திற்குப் பின்னுள்ள வசனம் இறங்கும் வரை இந்நிலை நீடித்தது. அந்த வசனம் இறங்கியதும் அது, இந்தச் சட்டத்தை மாற்றி விட்டது!
பின்னுள்ள வசனம் இதுவே: ‘இனி உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்றிட வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளிகவோ பயணத்திலோ இருந்தால் அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்’
இதன் பிறகு – விரும்பினால் என்றில்லாமல் ஒவ்வொருவரும் கட்டாயம் நோற்கவேண்டுமென அல்லாஹ் கட்டளை யிட்டான்!
ரமளான் மாதம் வந்துவிட்டதென உறுதியானாலே தவிர நோன்பு கடமையாகாது. எனவே அதற்கு முன் யாரும் நோன்பு நோற்கக் கூடாது! ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள்.
ரமளானுக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக உங்களில் யாரும் நோன்பு நோற்க வேண்டாம். ஆனால் ஒருவர் வழக்கமாக நோன்பு நோற்று வந்தாலே தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்!’ (நூல்: புகாரி)
ரமலான் மாதம் வந்துவிட்டதாக – இரண்டு விஷயங்களில் ஒன்றைக் கொண்டுத் தீர்ப்பளிக்கப்படும். ஒன்று: அம்மாதத்தின் பிறையைப் பார்ப்பது! ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் :
இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்’
மேலும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
நீங்கள் பிறை பார்த்தீர்களாயின் நோன்பு வையுங்கள்’(புகாரி)
ஒவ்வொருவரும் பிறை பார்த்தாக வேண்டும் என்பது நிபந்தனை அல்ல. எவரது சாட்சியத்தின் மூலம் ரமளானின் வருகை உறுதியாகுமோ அவர் ஒருவர் பார்த்தாலே எல்லோர் மீதும் நோன்பு கடமையாகி விடும்!
பிறை பார்த்ததாகச் சொல்லும் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நிபந்தனை: பார்த்தவர் பருவ வயது அடைந்த, புத்தி சீர்நிலை உள்ள முஸ்லிமாக இருக்க வேண்டும். சொல்லும் செய்தியில் நம்பிக்கை ஏற்படும் அளவு நம்பிகைக்குரியவராகவும் கண்பார்வை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
எனவே சிறுவர் சொல்லும் சாட்சியத்தைக் கொண்டு ரமளானின் வருகை உறுதி செய்யப்படமாட்டாது. ஏனெனில் சிறுவனின் செய்தியில் நம்பிக்கை கொள்ள முடியாது. பைத்தியக்காரனின் பேச்சை ஏற்க முடியாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை!
இறைநிராகரிப்பாளனின் சாட்சியத்தைக் கொண்டும் ரமளான் மாதம் உறுதியாகாது. ஏனெனில், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் ஓர் அறிவிப்பு இவ்வாறு வந்துள்ளது :
நாட்டுப்புற மனிதர் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சொன்னார்: ‘நான் (ரமலான்) பிறை பார்த்தேன். அதற்கு நபியவர்கள்- வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று நீ சாட்சியம் அளிக்கிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு அவர், ஆம் என்றார், நபியவர்கள் கேட்டார்கள்: முஹம்மத், அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் அளிக்கிறாயா? அதற்கும் அவர், ஆம் என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள்: பிலாலே! மக்களுக்கு அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் நாளை நோன்பு நோற்கட்டும் என்றார்கள். (புகாரி. முஸ்லிம், திர்மதி, அபூ தாவூத், நஸஈ, இப்னு மாஜா) (இப்னு ஹுஸைமாவும் இப்னு ஹிப்பானும் இதனை ஸஹீஹ் என்று சொல்லியுள்ளார்கள். ஆயினும் ஸஹாபியின் பெயர் விடுபட்டது என்று குறை உள்ளது.)
ஒருவர் பொய் சொல்பவர் என்றோ எதையும் அவசரப்பட்டு முடிவு செய்கிறவர் என்றோ மக்களிடையே அறியப்பட்டிருந்தால் அல்லது பிறையைப் பார்க்க முடியாத அளவு பார்வை குன்றியவராக இருந்தால் – இந்நிலைகளில் அவரது சாட்சியத்தைக் கொண்டு ரமளானின் வருகை உறுதி செய்யப்பட மாட்டாது. ஏனெனில் அவர் சொல்வது உண்மையா என்பதில் ஐயம் உள்ளது. மேலும் அவரது சொல் பொய்த்துவிடலாம் என்கிற நிலை மேலோங்கியுள்ளது!
ரமளானின் வருகை மட்டும்தான் ஒரே ஒரு மனிதனின் சாட்சி கொண்டு உறுதி செய்யப்படும்! ஏனெனில் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
மக்கள் அனைவரும் பிறை பார்ப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். அது எனக்குத் தென்பட்டது. நபி(ஸல்) அவர்களிடம் அறிவித்தேன்.அதன்படி நபியவர்களும் நோன்பு நோற்றார்கள் மக்களையும் நோன்பு நோற்க ஏவினார்கள’ (நூல்:அபூ தாவூத் ஹாகிம்)
பிறை பார்த்த ஒருவர் அதில் உறுதியாக இருக்கிறார் எனில் அதிகாரிகளிடம் அதனைத் தெரிவிப்பது அவர் மீது கடமையாகும். ஏனெனில் அவரது செய்தியைக் கொண்டே நோன்பைத் தொடங்குதல், நோன்பை முடித்துவைத்தல், ஹஜ் கடமைகளைத் தொடங்குதல் – யாவும் தீர்மானிக்கப்படுகின்றன! ஒரு கடமையான காரியம் நிறைவு பெறுவதற்கு துணையாக உள்ளதும் கடமையே!
தூரமான ஓர் இடத்தில் ஒருமனிதர் மட்டும் பிறையைப் பார்த்தார் என்றால்-அதிகாரத்தில் உள்ளவர்களிடம் அறிவிப்பது அவரால் இயலாதிருந்தால் அவர் மட்டும் நோன்பு வைப்பார். மேலும் அவரால் முடிந்த அளவு அந்தச் செய்தியை அதிகாரத்தில் உள்ளவர்களிடம் சேர்த்திட முயற்சி செய்வார்!
மாதத்தின் வருகை உறுதியாகி விட்டதாக அரசாங்கத்கின் சார்பில், தொலைக்காட்சி, வானொலி போன்ற சாதனங்கள் மூலம் அறிவிப்புச் செய்யப்பட்டால் அதன்படி அமல் செய்வது கடமையாகும். மாதத்தின் தொடக்கம்- முடிவு பற்றிய அறிவிப்பானாலும் சரி ரமளான் அல்லது இதர மாதங்கள் பற்றிய அறிவிப்பானாலும் சரி! ஏனெனில் அரசாங்கத்தின் சார்பில் இப்படி அறிவிப்புச் செய்வது சட்ட ரீதியிலான சான்றாகிவிடும். அதன்படி அமல் செய்வது கடமையே!
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் வருகை உறுதியாகி விட்டதென எல்லோருக்கும் தெரியப்படுத்தும் வகையில் மக்களிடையே பொது அறிவிப்புச் செய்யுமாறு பிலால் (ரலி) அவர்களை ஏவினார்கள். மாதத்தின் வருகை நபி (ஸல்) அவர்களிடத்தில் உறுதியாகி விட்டிருந்தது. ஆகையால் தான் நோன்பைக் கடைப்பிடிக்குமாறு மக்களை வலியுறுத்துவதாக அந்த அறிவிப்பு அமைந்தது!
மாதத்தின் வருகை சட்ட ரீதியில் உறுதியாகி விடும் போது சந்திரனின் (தேய்தல்- வளர்தலின்) நிலைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு கடமை எனும் சட்டத்தைப் பிறை பார்ப்பதுடன் இணைத்தார்களே தவிர அதன் தோற்ற நிலைகளுடன் இணைக்கவில்லை! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிறை பார்த்தீர்களானால் நோன்பைத் தொடங்குங்கள். பிறை பார்த்தீர்களானால் நோன்பை விட்டுவிடுங்கள்’ (புகாரி, முஸ்லிம்)
மேலும் சொன்னார்கள் : ‘முஸ்லிம்கள் இருவர் சாட்சியம் அளித்தால் நோன்பைத் தொடங்குங்கள் – நோன்பைவிட்டு விடுங்கள்’ (முஸ்லிம், அஹ்மத்) (இதன் அறிவிப்புத் தொடர் பரவாயில்லாதது. அதில் கருத்து வேறுபாடு இருப்பதுடனேயே! அபூ தாவூது, தாரகுத்னி ஆகியோரிடம் – சான்று அறிவிப்புகள் இதற்கு உண்டு. தாரகுத்னி சொல்லியுள்ளார்கள்: இதன் அறிவிப்புத் தொடர் தடைபடாதது. ஆதாரப்பூர்வமானது.)
இரண்டாவது: மாதம் தொடங்கிவிட்டதெனத் தீர்ப்பளிப்பதற்கான இரண்டாவது காரணம் முந்தைய மாதத்தை 30 நாட் களாக நிறைவுபடுத்துவதாகும்.
ஏனெனில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட ஒருமாதம் என்பது 30 நாட்களாகவோ 29 நாட்களாகவோ தான் இருக்க முடியும். 30 ஐ விடஅதிகமாகவோ 29 ஐ விட குறைவாகவோ இருக்க முடியாது. சில சமயம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தெடர்ந்து 30 நாட்களாக இருக்கும். சில சமயம் இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து 29 நாட்களாகவும் இருக்கும். ஆனாலும் பெரும்பாலும் ஓரிரு மாதங்கள் 30 நாட்கள் நிறைவாக இருக்கும் மூன்றாவது மாதம் குறைவாகவே இருக்கும்.
எனவே எப்போது முந்தைய மாதம் 30 நாட்களாக நிறைவு அடைகிறதோ அப்போது புதிய மாதம் பிறந்துவிட்டதாகச் சட்டப்படித் தீர்மானிக்கப்படும். பிறை காணப்படவில்லை என்றாலும் சரியே! ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் சொன்னார்கள் :
பிறை பார்த்து நோன்பைத் தொடங்குங்கள். பிறை பார்த்து நோன்பை முடியுங்கள். அந்த மாதம் உங்களால் பிறை பார்க்க முடியாத அளவுக்கு மேகமூட்டமாக இருந்தால் 30 நாட்களை எண்ணுங்கள். (நூல்: முஸ்லிம்) மேக மூட்டமாக இருந்தால் எனும் இடத்தில் ஃகும்மிய என்பதற்குப் பதிலாக ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ஃகுப்பிய என்றுள்ளது. இரண்டும் ஒரே பொருள்தான்.
வானம் உங்களுக்கு மந்தாரமாக இருந்தால் ஷஅபான் மாதத்தை 30 நாட்களாக நிறைவுபடுத்துங்கள்.
ஆயிஷா(ரலி) அவர்களின் அறிவிப்பில், நபியவர்கள் ஷஅபான் மாதத்தின் நாட்களை ஏனைய மாதங்களை விடச் சரியாக நினைவில் வைத்துக் கொள்பவர்களாய் இருந்தார்கள், பிறகு ரமளானின் பிறையைப் பார்த்து நோன்பு நோற்பார்கள். அம்மாதம் அவர்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் 30 நாட்களை நிறைவுபடுத்துவார்கள்., பிறகு நோன்பு நோற்பார்கள்’ (நூல்: இப்னு ஹுஸைமா, அபூ தாவூது, தாரகுத்னி)
இந்த நபிமொழி அறிவிப்புகளின் மூலம் தெரியவருகிறது: பிறை காணும் முன்பு ரமளான் நோன்பு தொடங்கப்பட மாட்டாது. பிறை தெரியவில்லையெனில், ஷஅபான் மாதம் 30 நாட்களாக நிறைவுபடுத்தப்படும். ஷஅபான் 30 வது நாளில் நோன்பு நோற்கப்பட மாட்டாது. அந்த இரவு தெளிவாக இருந்தாலும் சரி மந்தாரமாக இருந்தாலும் சரியே! ஏனெனில் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
எந்நாள் குறித்து (ரமலானை சேர்ந்ததா, ஷஅபானை சேர்ந்ததா) என்று சந்தேகம் உள்ளதோ அந்நாளில் நோன்பு நோற்பவன் நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறியவன் ஆவான்’ (நூல்: அபூ தாவூத், திர்மிதி, நஸஈ) – இமாம் புகாரி அவர்கள் இதனை ஸனது இன்றி கூறியுள்ளார்கள்.
யா அல்லாஹ், நேர்வழியைப் பின்பற்றி வாழ்ந்திட எங்களுக்கு நல்லுதவி செய்வாயாக! அழிவு மற்றும் துர்ப்பாக்கியத்தின் காரணிகளை எங்களை விட்டும் அகற்றுவாயாக! எங்களின் இம்மாதத்தை – நன்மை மற்றும் பாக்கியத்தின் மாதமாக ஆக்குவாயாக! இம்மாதத்தில் உனக்குக் கீழ்ப்படிந்து வழிபட எங்களுக்கு உதவி புரிவாயாக! உனது கட்டனையை மீறிச் செயல்படும் வழிகளை எங்களை விட்டும் அகற்றுவாயாக! எங்கள் குற்றங்களையும் எங்கள் பெற்றோரின் குற்றங்களையும் அனைத்து முஸ்லிம்களின் குற்றங்களையும் மன்னித்தருள்வாயாக!
மூல நூலாசிரியர் – மேன்மைமிகு ஷைக் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்)
தமிழில் – கே. ஜே. மஸ்தான் அலீ பாகவி, உமரி, (அபூ காலித்) இஸ்லாமிக் சென்டர், உனைஸா, சவூதி அரேபியா