முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இஸ்லாத்தைப் பின்பற்றுவது மற்றும் தீனின்** அடிப்படைகள் என்பது மூன்று விதமான அடிப்படைகளை அடித்தளமாகக் கொண்டுள்ளது. இவைகளில் ஏதாவதொன்றையேனும் யாராவது புறக்கணிப்பார்களென்றால் அவர், இஸ்லாத்தைப் புறக்கணித்தவராவார், அவருடைய இரத்தம் பாதுகாப்பற்றதுமாகும். அந்த அடிப்படைகளாவன: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி பகர்வது, தொழுகையை முறையாகப் பேணிவருவது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது ஆகிய மூன்று அடிப்படைகளுமாகும். அபு யஃலா.
**தீன் என்ற அரபிச் சொல்லுக்கு பொதுவாக, மதம் என்ற பொருளைத் தான் மொழி பெயர்ப்பாளர்கள் கொடுத்து வருகின்றார்கள். இங்கு மதம் என்பது பொதுவாக, ஞாயிற்றுக்கிழமைகளில், அல்லது வெள்ளி போன்ற குறிப்பிட்ட தினங்களில் சர்ச் மற்றும் கோயில்களில் தங்களது சில மணி நேரங்களைச் செலவிடுவதன் மூலம், தாங்கள் அந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற கருத்தை உருவாக்கி,அந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதை அறியத் தருகின்றனர். இத்தகைய மத அனுஷ்டானங்கள் அதைப் பின்பற்றுகின்றவனின் வாழ்க்கையில் எந்தவித மாறுதலையும் ஏற்படுத்தி விடப் போவதில்லை. இங்கு இஸ்லாமிய வழக்கில் தீன் என்பது, அதனைப் பின்பற்றுகின்றவனுடைய முழு வாழ்க்கை முறையையும் குறிக்கக் கூடியதாகும். இதைப் பற்றி நாம் விரிவாகக் கூற வேண்டுமென்றால், தீன் என்பது மத அடிப்படையிலும் அது சார்ந்த கொள்கையிலும், அதன் வணக்க வழிபாடுகளிலும், சமூக பொருளாதார அரசியல் தளங்களிலும், ஒழுக்க மாண்புகளிலும், மற்றும் இவற்றைப் பின்பற்றுவதில் தூய்மையான வாழ்வை மேற்கொள்வது என்பதைக் குறிக்கும். அந்தத் தூய வாழ்வு என்பது, இறைவன் ஏற்றுக் கொண்ட வழிமுறைகளில், அவனுடைய ஏவல்களை ஏற்று மதித்து நடந்தும், அவனது விலக்கல்களை ஏற்று அவற்றிலிருந்து ஒதுங்கி வாழ்வதையும் குறிக்கும். மொத்தத்தில் இறைவனுக்காகவே, இறைவனுடைய திருப்பொருத்தத்திற்காகவே வாழக்கூடிய வாழ்வு, அந்த வாழ்வில் தன்னுடைய மன இச்சையை விட இறைப் பொருத்தமே மேலோங்கியதான வாழ்க்கையே தீன் என்றழைக்கப்படும்.
Tamil Islamic Library