அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (2)

செயல்படச் செய்யும் திருமறை.

திருக்குர்ஆன் தரும் அறிவின் பிரிதொரு தனித்தன்மை செயல்பட வேண்டும் என்ற உணர்வையும், உந்துதலையும் தருவதாகும். அது செயல்படத் தூண்டும் ஆக்கப்பூர்வமான அறிவாகும். அது மனதில் செயல்பட வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்துவது.

திருமறை வசனங்களின் அமைப்பும், அவற்றின் போதனைகளும் எப்படி மனிதர்களை செயல்படும் பேரியக்கங்களாக மாற்றியது என்பதற்கு வரலாறு சான்று பகருகின்றது. அதுபோலவே திருமறையும் பல அத்தாட்சிகளைத் தருகின்றது.

பெருமானார் (ஸல்) அவர்கள் தனது இறைச்செய்தியின்பால் மக்களை அழைத்திடும்போது அவர்களுக்கு இருந்த ஒரே சக்தி திருக்குர்ஆனே ஆகும். அவர்கள் பெற்றிருந்த அறிவெல்லாம் திருமறை தந்த கருத்துக் கருவூலங்களே!
திருக்குர்ஆன் தரும் செயல்திறன் அளப்பரியது. தடுத்து நிறுத்த முடியாதது.

இறைவன் திருக்குர்ஆனை ‘ரூஹ்’ அல்லது உயிர் என அழைக்கின்றான். இறைவனுக்குத் தங்களை அடிமைகளாக்கிக் கொண்டவர்களை நேர்வழியின்பால் நடத்திச் செல்லும் ஒளி எனவும் இறைவன் வர்ணிக்கின்றான். (42:52) மீண்டும் இறைவன் சொல்கின்றான்:

(நபியே!) ஏதாவதொரு மலையின் மீது நாம் இந்த குர்ஆனை இறைக்கி வைத்தால், அது அல்லாஹ்வின் பயத்தால் நடுங்கி வெடித்துப் பிளந்து போவதை நிச்சயமாக நீர் கண்டிருப்பீர். மனிதர்கள் உற்றுணர்ந்து பார்க்கும் பொருட்டு இவ்வுதாரணங்களை நாம் கூறுகின்றோம். (59:21) இங்கே நாம் கவனிக்க வேண்டியது ‘ரூஹ்’ ‘ஸாத்’ என்ற வார்த்தைகளைத்தான். அதாவது இதன் பொருள் திருக்குர்ஆன் உயிரைத் தருகின்றது, அசையாதவைகள், அசைக்க முடியாதவைகள் இவைகளையெல்லாம் அசைத்துக்காட்டி செயலோட்டத்தில் ஓடிடச் செய்கின்றது.

நடைமுறைப் படுத்தத்தகுந்த நற்போதனைகள்.

திருமறையின் பிரிதொரு தனித்தன்மை அதன் போதனைகளில் மிளிரும் நடைமுறை சாத்தியங்கள். அது மனிதனை வெறும் கற்பனை உலகில் உலாவ விடுவதில்லை. அது சாதிக்க முடியாதவைகளை போதித்து விட்டு வெறுமனே இருந்து விடுவதில்லை.

திருக்குர்ஆன் மனிதனை தூக்கத்திலிருந்து தட்டியெழுப்பி அவனை அவனால் சாதிக்க முடிந்தவற்றையெல்லாம் சாதிக்கப் போதிக்கின்றது. அது மனிதனை ஒரு திக்கற்றப் படைப்பினமாகவோ அல்லது ஒரு உதவியற்ற படைப்பினமாகவோ பார்ப்பதில்லை. மனிதன் பாவத்திலே பிறந்து பாவத்திலே வளர்ந்து, பாவத்திலேயே மடிகின்றான். ஆகவே அவன் பாவத்தின் சின்னம் எனக்கூறி அவனை முடக்கிப் போடுவதில்லை. கருவறையிலிருந்து கடைவழி வரை அவன் கதியற்றவனே என்று அவனைக் கைவிட்டு விடுவதுமில்லை திருக்குர்ஆன்.

திருக்குர்ஆன், மனிதன் கண்ணியம் நிறைந்த ஒரு உயர்ந்த அழகிய சிறந்த படைப்பினம் எனக் கூறுகின்றது. அவனிடத்தில் அழகிய செயல்களை எதிர்பார்க்கின்றது.

திருக்குர்ஆனின் போதனைகள் அனைத்தும் நடைமுறைக்கு ஏற்றவை, சிறந்தவை என்பதற்கு பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையும், அவர்களைத் தொடர்ந்து வந்த முஸ்லிம்களின் வாழ்க்கையும் சான்றாய் அமைகின்றது. திருமறை மேற்கொள்ளும் அணுகுமுறையின் சிறப்புத்தன்மை, அதன் போதனைகள் அனைத்தும் மனித இனத்தின் பொதுவான நலத்தைக் கருத்தாகக் கொண்டிருப்பதுதான். இன்னும் அது மனிதர்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம், அவனது சக்திக்கும், இயல்புக்கும் சாத்தியமானவைகளைத்தான்.

சமநிலை (MODERATION)

திருமறையின் மூன்றாவது தனித்தன்மை அது வெளிப்படுத்தி வழிபடச் செய்யும் சமநிலை. அது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துகின்றது. உலகியல் வாழ்வுக்கும் ஆன்மீக வாழ்வுக்கும் இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தித் தருகின்றது. தனிமனிதனின் வாழ்வுக்கும் சமுதாய வாழ்வுக்கும் இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தித் தருகின்றது.

திருக்குர்ஆன் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் போதிய கவனம் செலுத்துகின்றது. அதுபோலவே வாழ்வின் எல்லாத் தேவைகளையும் மனதிற் கொள்கின்றது. வாழ்வின் எல்லாத் துறைகளையும், மனிதனின் எல்லாத் தேவைகளையும் அவன் வாழ்வின் இறுதி இலட்சியத்தைஅடைந்திடும் வகையில் முறைப்படுத்தித் தருகின்றது திருமறை! திருக்குர்ஆன் முஸ்லிம்களை ’நடுநிலையுள்ள’ ஒரு சமுதாயம் என அழைக்கின்றது. (2:143) இந்த சமநிலை அல்லது நடுநிலையை அவர்கள் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் கடைபிடித்து மற்றவர்களும் பின்பற்றத்தக்க முறையில் அவர்கள் வாழ்ந்து காட்டிட வேண்டும். இந்த அடிப்படையில் அவர்கள் இருக்கின்ற சமுதாயங்களிலெல்லாம் சிறந்த சமுதாயமாவார்கள். அவர்கள் நன்மையை ஏவிடுவர், தீமையைத் தடுத்திடுவர், இறைவனை நம்பிடுவர். (3:110)

திருக்குர்ஆன் மனிதனுள் ஏற்படுத்தும் அறிவு மூன்று விதங்களில் செயல்படுகின்றது. (1) அது மனிதனின் அகத்தே புகுந்து அகத்தை தூய்மைப்படுத்தி செயல்பட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகின்றது. (2) அவனது புறச்செயல்களை துரிதப்படுத்துவதோடு, தூய்மைப்படுத்தவும் செய்கின்றது (3) அவனை எல்லாவிதத்திலேயும் முன்னேற்றத்தின்பால் இட்டுச்செல்கின்றது.

திருக்குர்ஆன் தரும் அறிவு அல்லது ஞானம் மனிதனின் அகத்தே புகுந்து அவனது உயிரோடு கலந்து விடுகின்றது. அதன் நோக்கம் உள்ளே ஆரோக்கியமான சிந்தனைகளைக்கொண்ட ஒரு மனிதனாக அவனை உருவாக்கிடுவதேயாகும். உலக வழக்கில் இருக்கும் வேறு எந்த அரசியல் சட்டமும், ஒழுக்க நியதியும் ஏற்படுத்த முடியாத அளவில் ஒரு ஆழமான பாதிப்பைத் திருமறையின் போதனைகள் ஏற்படுத்தி விடுகின்றன. ஏனெனில் திருக்குர்ஆன் இறைவனின் பெயரால் பேசுகின்றது. எல்லாப் பிரச்சினைகளையும் இறைவனின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றது.

திருக்குர்ஆன் மனிதனின் புறத்தன்மைகளில் புகுந்து தூய்மைப்படுத்தும் என்பதை இங்கு சற்று விரிவாகவே பார்ப்போம். திருக்குர்ஆன் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவி நிற்பது. அது தனி மனிதனின் இரகசியமான வாழ்க்கை பிரச்சினையிலிருந்து ஆரம்பித்து உலகளாவிய பிரச்சினைகள் வரை அனைத்திற்கும் வழிகாட்டுகின்றது. இன்று வழக்கிலிருக்கும் கொள்கைகள், கோட்பாடுகள், ஒழுக்க நெறிகள், மதங்கள் இவையாவும் எண்ணிக்கூட பார்த்திட முடியாத அளவிற்கு திருக்குர்ஆன் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவி நிற்கின்றது. திருக்குர்ஆன் மனிதனின் பிரச்சினைகளுக்கு ஒரு தெய்வீக அணுகுமுறையை மேற்கொள்கின்றது. ஒழுக்கத்தை எல்லா நிலைகளிலேயும் நிலைநாட்டிட விழைகின்றது. மனிதனின் எல்லா செயல்களையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற நினைவை மனிதனுள் ஏற்படுத்துகின்றது திருக்குர்ஆன். அவன் செய்யும் ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் இறைவனை முன்னிருத்தியே செய்கின்றான். அந்த இறைவனைத்தான் இலக்காகக் கொண்டு செயல்படுகின்றான். இறைவனே மனிதனின் முதல் வழிகாட்டி, இறுதி இலட்சியம் இந்த உணர்வை மனிதனுள் ஏற்படுத்துவது திருக்குர்ஆன் செய்யும் மகத்தான மாற்றமாகும். மனிதனின் ஆன்மீக வழிகாட்டியாகவும், அவன் அடிபணிந்து நடக்கும் சட்டமாகவும், அவனது ஒழுக்க ஆசானாகவும், இவைகளுகெல்லாம் மேலாக வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும், எல்லாத் துறைகளிலுமுள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் நிறைவான வழிகாட்டியாகவும் இலங்குகின்றது திருக்குர்ஆன்.

மனிதனை முன்னேற்றத்தின்பால் இட்டுச்செல்கின்ற பணியில் திருக்குர்ஆன் மனிதனின் கவனத்தை அந்த ஒப்புவமையில்லா ஏக இறைவனின் பக்கம் திருப்புகின்றது. கடந்த காலத்தில் நிகழ்ந்தவை, நிகழ்காலத்தில் நடப்பவை, எதிர்காலத்தில் நடக்க இருப்பவை இவையாவும் இறைவனின் விருப்பப்படி அவனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே நடக்கின்றன, நடக்கவிருக்கின்றன. இறைவன் உலகில் நிகழ்பவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பவனல்ல. அவன் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருப்பவன் ஆவான். மனிதன் இறைவனின் படைப்பில் சிலவற்றைச் செல்வமாக பெற்றிருக்கின்றான். அந்தச் செல்வம் அவன் இறைவனிடமிருந்து அமானிதமாகப் பெற்றவையே! தன்னை வணங்கிடத்தான் மனிதனைப் படைத்தான் இறைவன். மனிதனுக்கு இறைவன் உயிரையும் வாழ்வையும் தந்திருப்பதன் நோக்கம் வாழ்க்கையை மனிதன் துறந்திடுவதற்கல்ல. வாழ்க்கை ஒட்டத்தில் கலந்திடாமல் ஒதுங்கி நின்றிடுவதற்குமல்ல. மனித வாழ்க்கை ஓட்டத்தில் கலந்து இறைவன் தந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி, அவன் தந்திருக்கும் அருட்கொடைகளை அள்ளிப்பருகி தான் இறைவனின் உயர்ந்த படைப்பினம் என்பதை நடப்பில் காட்ட இறைவன் விடுக்கும் அழைப்பே உலகமும் வாழ்க்கையும். இதில் மனிதன் மேலும், மேலும் முன்னேறிட வேண்டும்.

திருக்குர்ஆன், மனிதன் இறைவனை முன்னிருத்தி தன் வாழ்வில் முனைந்து முன்னேறிட வேண்டும் என அழைத்திடுவதன் மூலம், மனிதனின் சிந்தனையை குறுகிய வட்டங்களிலிருந்து மீட்டு விசாலமான இலட்சியங்களை நோக்கி இட்டுச் செல்கின்றது. இறைவனை மனிதனுக்கு எல்லா நிலைகளிலேயும் நினைவுறுத்திடுவதன் மூலம் அவன் உயர்ந்த ஒழுக்க நிலைகளை நோக்கி உயர்த்திடுகின்றது. அவனை இறைவன் என்ற நிரந்தர நிம்மதியின் இருப்பிடத்தோடு தொடர்புடையவனாக ஆக்கி விடுகின்றது.

இறைவனே மனிதனின் இறுதி இலக்கு, என்ற எண்ணத்தையும், அதில் ஆழமானதொரு பிடிப்பையும் ஏற்படுத்துவது மனிதனின் சாதாரண சிந்தனை ஓட்டத்திலிருந்து மாறுபட்ட ஒரு புரட்சியே ஆகும். இந்தப் புரட்சியின் நோக்கம் மனிதனின் மனதை சந்தேகங்களின் பிடியிலிருந்து விடுவிப்பது, ஆத்மாவை பாவங்களிலிருந்து பாதுகாப்பது, மனசாட்சியையும், சிந்தனையையும் எல்லாவிதமான அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது.

இப்படி எல்லாவிதத்திலேயும் திருக்குர்ஆன் தரும் அறிவும், ஆக்கமும் பூரணமானவை. அது உடலை வருத்தி ஆன்மாவை அரங்கேற்றுங்கள் என அழைப்பதுமில்லை, ஆன்மாவை மறந்து விட்டு உலகியலில் மூழ்கிடுங்கள் என்றும் பணிக்கவில்லை.

திருக்குர்ஆன் இறைவனை “மனிதனின்” கைகளில் ஒப்படைக்கின்ற அளவுக்கு இறைவனைத் தாழ்த்திடவில்லை. அதேபோல் மனிதனை இறைவன் என்று கூறுவதுமில்லை. இறைவனுக்கு அவனுக்கே உரிய இடத்தையும், மனிதனுக்கு அவனுக்கே உரிய இடத்தையும் தருகின்றது திருக்குர்ஆன். இன்னும் உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு படைப்பையும் அவற்றிற்கே உரிய இடத்தில் வைத்தே பார்க்கின்றது திருக்குர்ஆன். செயல்கள், அவற்றிற்கான சன்மானங்கள், வழிகள், அவைகள் இட்டுச் செல்லும் இலக்குகள் இவைகளுக்கிடையில் நேரடியான தொடர்பு உண்டு எனக் கூறுகின்றது இஸ்லாம். இந்தக் காரணங்களால் விளையும் காரியங்கள், செயல்களால் விளையும் பலன்கள் இவை தகுந்த விகிதாச்சாரங்களின் அடிப்படையில் அமையும் எனக் கூறுகின்றது திருக்குர்ஆன்.

திருக்குர்ஆன் வெளிப்படுத்தும் தெளிவான அறிவு, செயல்பட வைப்பது. சிறந்த விளைவுகளை ஏற்படுத்திடுவது. இறைவனின் அருளுக்குள்ளானவர்கள், அருளுக்குள்ளாக விரும்புபவர்கள் அனைவரும் அதை விரும்பி வரவேற்பார்கள்.

திருக்குர்ஆன் வெளிப்படுத்தும் திவ்விய ஞானம் சிந்தனையில் உண்மையும், செயலில் பக்தியையும், நோக்கத்தில் ஒருமையும், எண்ணத்தில் நன்மையும் வேண்டும் என வேண்டுகின்றது.

இது வேதநூல். இதில் சந்தேகமே இல்லை. பயபக்தியுடையவர்களுக்கு (இது) நேரான வழியை காட்டும். (அல்குர்ஆன்: 2:2)

இது வேத நூல். இதனை நாமே உம்மீது அருட் செய்கின்றோம். மனிதர்களை அவர்களின் இறைவனின் கட்டளைப்படி, இருள்களிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்தின்பால் (நபியே!) நீர் கொண்டு வருவீராக!……. (அல்குர்ஆன்: 14:1)

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.