இஸ்லாத்தில் பெண்களின் நிலை பிரச்சினைக்குரிய ஒரு விவாதமே அல்ல. ஆனால் வேதனைக்குரிய நிலையில் அது ஒரு விவாதப்பொருளாக மாற்றப்பட்டு விட்டது. இதற்குக் காரணம், சில மேலைநாட்டவர்கள் வேண்டுமென்றே தூவிய விஷ வித்துக்களேயாகும்.
இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ன என்பதற்கு திருக்குர்ஆன் தெளிவான விளக்கங்களைத் தந்துள்ளது. அத்துடன் ஆரம்பகால முஸ்லிம்கள் பெண்களை எவ்வாறு நடத்தினார்கள் என்பது ஒரு வரலாற்றுச் சான்றாகும்.
ஆண்கள் எவ்வாறு சமுதாய வாழ்க்கைக்கு முக்கியமானவர்களோ அவ்வாறே பெண்களும் சமுதாய வாழ்க்கைக்கு முக்கியமானவர்கள். பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்களல்ல. அதுபோலவே பெண்கள் இழிந்த பிறப்பினங்களுமல்ல. முஸ்லிம்கள் இதில் மிகுந்த தெளிவுடன் தான் இருந்தார்கள். மேலைநாட்டு நாகரீகம் என்ற மோகம் தாக்காதிருந்தால் அவர்கள் இன்றும் தெளிவுடன் தான் இருந்திருப்பார்கள். அந்நிய கலாச்சாரங்களும், கவர்ச்சிகளும் ஏற்படுத்திய பாதிப்புகளினால் முஸ்லிம்களில் சிலரும், மேலைநாட்டவர்களும் இதை தெளிவு பெறவேண்டிய ஒரு பிரச்சினை என்றாக்கி விட்டார்கள். அன்று பெண்களின் கண்ணியமும், முக்கியத்துவமும் ஆண்களினின்றும் சற்றும் குறைந்ததாகக் கருதப்படவில்லை. ஆகவே அன்று இது பிரச்சினைக்குரிய ஒன்றாக கருதப்படவில்லை.
வேறு எந்த சமுதாய அமைப்பிலும், அல்லது அரசியல் சட்ட அமைப்பிலும் இல்லாத அளவுக்குப் பெண்களுக்கு இஸ்லாத்தில் உரிமையும், கண்ணியமும் தரப்பட்டுள்ளது. இதை நாம் ஒருமுகமாக நின்று ஆராய்ந்திடாமல், இஸ்லாமிய சமுதாய அமைப்பில் பெண்களின் நிலையையும், ஏனைய சமுதாய அமைப்பில் பெண்களின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்திடுவதே சிறந்ததாகும். பெண்களின் உரிமைகள் ஆண்களின் உரிமைக்குச் சமமானதே. ஆனால் சில கடமைகளும், சில பொறுப்புகளும் ஆண்களைப் போன்றதாக இல்லை. சமத்துவம் என்பதை அதற்கே உரிய முறையில் புரிந்திட வேண்டும்.
பெண்கள் எந்த வகையிலும் ஆண்களுக்குக் குறைந்தவர்களல்ல. ஆனால் பெண்களின் அகத்தன்மைகளுக்கும், ஆண்களின் அகத்தன்மைகளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகளை நாம் மிக எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆண்களும், பெண்களும் படைப்பால் – பிறப்பால் சமமானவர்களே! ஆனால் அவர்கள் திறமைகளால், தகுதிகளால் வேறுபட்டவர்களே! இந்த வேற்றுமையை நாம் புரிந்து கொண்டு விட்டால் இது ஒரு பிரச்சினையாகவே ஆகாது. எல்லாப் பெண்களும் தகுதியிலும், திறமையிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அதேபோல் எல்லா ஆண்களும் தகுதியிலும், திறமையிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை.
ஆண்களும், பெண்களும் இறைவனின் உயர்ந்த அழகிய படைப்பினங்கள் என்பதில் அவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை ஒருபுறம். ஆண்கள், பெண்களின் தகுதி, திறன், உடற்கூறுகள் ஆகியவற்றால் வேறுபட்டவர்கள் என்ற வேற்றுமை மறுபுறம். பெண்கள் ஆண்களைப் போன்ற உரிமைகளையும், வாய்ப்புக்களையும் பெற்றவர்கள் என்பதில் ஆண்களோடு “சமத்துவம்” (Equality) கொண்டாடிடலாம். ஆனால் அவர்கள் ஆண்களிலிருந்து எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாவிதத்திலேயும் ஒரே மாதிரியானவர்கள் (Sameness) ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பது உண்மையல்ல.
சமத்துவம் என்பது ஏற்புடையது. நியாயமானது. ஆனால் நிகரானவர்கள் என்பது அப்படியல்ல. மனிதர்கள் படைப்பினங்கள் திறமையால் வேறுபட்ட படைப்பினங்கள். இந்த வேற்றுமையை மனதில் கொண்டுவிட்டால் பின்னர் பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்த படைப்பினங்கள் என்பது உண்மையல்ல என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். அதுபோல் பெண்கள் ஆண்களைவிட குறைந்த அளவே முக்கியமானவர்கள் என்ற எண்ணமும் ஏற்படாது. பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள்தான், அவர்கள் ஆண்களைப் போன்றவர்கள்தான், இருபாலரும் ஒரே மாதிரியானவர்கள்தாம் என்றால் பெண்கள் ஆண்களின் மறுபதிப்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வாறு இல்லை என்பதை நாம் அறிவோம்.
இஸ்லாம் பெண்களுக்கு ஆண்களுக்குச் சமமான கண்ணியத்தையும், வாய்ப்புகளையும் தருகின்றது, அதேநேரத்தில் இந்த இருபாலரும் ஒரே மாதிரியானவர்கள் எனக் கூறுகின்றது. இது இஸ்லாம் பெண்களின் அகத்தன்மைகள் அனைத்தையும் மனதில் கொள்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
பெண்கள், பாவத்தின் வித்துக்கள் என்றோ, தீமைகளின் பிறப்பிடம் என்றோ இஸ்லாம் கூறுவதில்லை. அதுபோலவே பெண்களின் மேல் ஏகபோக ஆதிக்கம் செலுத்திடும் இடத்தில் ஆண்களைத் திருக்குர்ஆன் வைத்திடவும் இல்லை. ஆண்களுக்கு அடிமைப்பட்டு கிடப்பதையன்றி வேறு வழியில்லை என்ற நிலையில் பெண்களை வைத்திடவில்லை திருக்குர்ஆன். பெண்களுக்கென தனியான ஆத்மா ஒன்று இருக்கின்றதா? என்ற கேள்வியை இஸ்லாம் எப்போதும் கேட்டதில்லை. இந்த சந்தேகம் எப்போதும் எழுந்ததில்லை.
பெண்களின் கண்ணியம், அவர்களுக்கிருக்கும் ஆன்மா, இன்னும் இதுபோன்ற ஆன்மீகத் தன்மைகள் இவைகளை முஸ்லிம்கள் ஒருபோதும் மறுத்ததே இல்லை. இவற்றில் முஸ்லிம்களுக்குச் சந்தேகம் கூட வந்ததில்லை. அப்படி முஸ்லிம்கள் ஐயுற்றதாக ஒரு சம்பவத்தையேனும் காண முடியாது.
உலகின் முதல் பெண்மணியான ஹவ்வா அவர்கள்தான் ஆதம் (அலை) அவர்களைத் தடுக்கப்பட்டதைத் தீண்டும்படியாக தூண்டினார்கள். ஆகவே அந்த முதல் பாவத்திற்கு ஹவ்வாவே காரணம் எனப் பரவலாக நம்பப்படுகின்றது. ஆனால் இஸ்லாத்தின் நம்பிக்கை அதுவல்ல. தடுக்கப்பட்டதைத் தீண்டுவதற்கு இருவருமே (சமஅளவில்) தூண்டப்பட்டார்கள் என்பதே இஸ்லாத்தின் கருத்து. இதைத் திருக்குர்ஆன் மிக அழகாகக் கோடிட்டுக் காட்டுகின்றது. அவர்கள் இருவருமே பாவம் இழைத்தார்கள். பின்னர் அவர்கள் இருவரும் இறைவனிடம் மன்னிக்க மன்றாடினார்கள். இறைவன் அவர்கள் இருவரையுமே மன்னித்தான். இறைவன் அவர்கள் இருவருக்குமே அறிவுறை பகர்ந்தான். (சான்றாக 2:35-36; 7:19,27; 20:117-123 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)
இன்று பெண்கள் பாவத்தின் சின்னங்கள் என்ற மனநிலையை உருவாக்கிடுவதற்குக் காரணமாக அமைந்த அந்த முதல் பாவத்தில் ஹவ்வா அவர்களைவிட ஆதம் (அலை) அவர்களே அதிகமாகப் பழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணத்தை நம்முள் தோற்றுவிக்கின்ற விதத்தில் திருமறை இதுகுறித்துப் பேசுகின்றது. அந்த முதல் பாவத்தை பொறுத்தவரை ஹவ்வா அவர்கள் மட்டும்தான் காரணம் என்று கூறுவதற்கில்லை. அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு பெண்களைப் பழிப்பதும், சந்தேகிப்பதும் முறையற்றது எனக் கண்டிக்கின்றது இஸ்லாம். ஏனெனில் ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா அவர்களும் அந்த முதல் பாவத்தில் ஈடுபட்டவர்கள். ஆகவே ஹவ்வா அவர்களை குறை கூறுவதாக இருந்தால் ஆதம் (அலை) அவர்களையும் குறை கூறியே ஆகவேண்டும்.
இஸ்லாத்தில் பெண்கள் நிலை என்பது பல தனித்தன்மைகளைக் கொண்டது. புதுமையானது. வேறு எந்த வாழ்க்கைத் திட்டமும் தராத அளவில் இஸ்லாம் பெண்களுக்குப் பல சிறப்புரிமைகளைத் தந்திருக்கின்றது. கீழ்திசை ‘கம்யுனிஸ்ட்’ பெண்களின் நிலை என்ன என்பதையும், மேல்திசை நாடுகளில் பெண்களின் நிலை என்ன என்பதையும், ஜனநாயக நாடுகளில் பெண்களின் நிலை என்ன என்பதையும் நாம் சற்று உற்று நோக்கினால், அங்கு பெண்களின் நிலை உண்மையிலேயே மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். அங்கெல்லாம் பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமான நிலையிலேயே இருக்கின்றது என்பதே உண்மை. அங்கே பெண்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளை தேடிக் கொள்வதற்குக் கடினமாக உழைத்திட வேண்டியதுள்ளது. அவர்கள் ஆண்கள் செய்கின்ற அதே வேலைகளைச் செய்கின்றார்கள். ஆனால் பல நேரங்களில் ஆண்களுக்குத் தரப்படுவதை விட மிகக்குறைந்த கூலியையே பெறுகின்றார்கள்.
அவளுக்கு ஒருவித சுதந்திரமும் தரப்பட்டுள்ளது. பல வேளைகளில் இது அவர்கள் விருப்பம்போல் செயல்பட தரப்பட்ட அனுமதியாகவே கொள்ளப்படுகின்றது. ஆனால் இதைப் பெறுவதற்கு அவர்கள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற போராட்டங்களை நடத்த வேண்டியதிருந்தது. கல்வி கற்பதற்கான உரிமைகளைப் பெறுவதற்கு அவர்கள் பல பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியதிருந்தது. உழைப்பதற்கான உரிமையைப் பெறுவதற்காகவும், தகுந்த ஊதியத்தைப் பெறுவதற்காகவும் அவர்கள் செய்த தியாகங்கள் ஏராளம். இவைகளைப் பெறுவதற்கு அவர்கள் தங்களுக்கு இயற்கையிலேயே சொந்தமான உரிமைகள் பலவற்றை விட்டுக் கொடுத்திட வேண்டியதாயிற்று. அவர்கள் தாங்களும் மனிதபிறவிகள், தங்களுக்கும் ஓர் ஆத்மா இருக்கின்றது என்பதையெல்லாம் நிலைநாட்டிட பல இன்னல்களையும், இடறுகளையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. பல வருடங்களாக அவர்கள் செய்த தியாகங்களும், எதிர்கொண்ட இன்னல்களும், இடறுகளும் அவர்களுக்கு இஸ்லாம் தந்திருக்கும் உரிமைகளை இதுவரை பெற்றுத் தந்திடவில்லை.
இஸ்லாத்தில் பெண்கள் பெற்றிருக்கும் உரிமைகள் தியாகங்களின் விளைவுகள் அல்ல. இறைக் கட்டளையின் விளைவேயாகும். இன்றைய பெண்கள் பெற்றிருக்கும் உரிமைகள் ஆர்பாட்டங்கள் ஏற்படுத்திய அவசரங்களால் நிர்பந்திக்கப்பட்டு அதனால் தரப்பட்டவைகளே! அவைகள் பெண்களின் உண்மைத் தன்மைகளை ஆண்கள் புரிந்து கொண்டார்கள் என்பதனால் விளைந்ததல்ல. அல்லது இறைக்கட்டளையோ, மதங்கள் தந்த போதனைகளோ பெற்றுத் தந்தவைகளுமல்ல. பெண்கள் போராட்டங்களை நடத்தினார்கள், பல்வேறு சூழ்நிலைகளும் அவர்களின் உதவிக்கு வந்தன, அதனால் சில உரிமைகளைப் பெற்றார்கள்.
போர்க்காலங்களில் ஏற்பட்ட மனிதசக்தியின் (Man Power) இழப்பை ஈடுசெய்ய அவள் உற்பத்திக் கூடங்களுக்கு அழைக்கப்பட்டாள். வீட்டிலேயே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அவள் வெளியே துரத்தப்பட்டாள். இயந்திரப் புரட்சி, அது விளைவித்த தொழிற் புரட்சி மனித சக்தியின் தேவைகளை அதிகரித்தன. ஆண்களை மட்டும் கொண்டு அந்தத் தேவைகளை ஈடுசெய்ய முடியவில்லை. ஆகவே பெண்களும் துணைக்கு அழைக்கப்பட்டார்கள்.
இயந்திரப் புரட்சியும் அது தந்த தொழிற் புரட்சியும் மனிதனின் பொருட் தேவைகளை அதிகப்படுத்தின. குடும்பங்களின் சாதாரண வருமானங்களைக் கொண்டு அதை சரிகட்டிட முடியவில்லை. ஆகவே அதிக வருமானம் பெற ஆண்களோடு பெண்களும் ஆலைகளுக்கு உழைக்க அழைத்து வரப்பட்டார்கள். அங்கே அவர்களை ஆண்களுக்கு நிகராக உழைக்க நிர்பந்திக்கப்பட்டார்கள். முடிவாக அவள் வாழ்க்கை ஓட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஓட வேண்டியதாயிற்று.
மேலே சொன்ன சூழ்நிலைகள் பெண்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்குத் துணையாக அமைந்து அவர்களுக்காக உரிமைகளைப் பெற்றுத்தந்தது. பல நேரங்களில் சூழ்நிலைகள் அவளை கட்டாயப் படுத்தியிருக்கின்றது. சில நேரங்களில் அவள் சூழ்நிலையை பயன் படுத்தியிருக்கின்றாள். தனது தற்போதைய நிலையைப்பெற எல்லாப் பெண்களும் இப்போது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் உரிமைகளில் திருப்தி அடைந்து விட்டார்களா? அல்லது (இந்த நிர்பந்தங்களால்) அதிருப்தி அடைந்தவர்களும் உண்டா? என்பவை இந்த விவாதத்தின் பிறிதொரு பகுதியாகும். எனினும் உண்மையில், தற்காலப் பெண்கள் தாங்கள் பெற்று விட்டதாக கூறிடும் உரிமைகளும் உயர்நிலைகளும் முஸ்லிம் பெண்கள் பெற்றிருக்கும் உரிமைகளுக்கும் உயர்நிலைகளுக்கும் ஒப்பாக மாட்டாது.
பெண்களின் தனித்தன்மைகளுக்குப் பொருத்தமானவை அவர்களின் இயல்போடும் இயற்கையோடும் பொருந்திப் போவது, அவளுக்குத் தகுந்த பாதுகாப்பினை பெற்றுத் தருவது, அவளது அகத்தன்மைகளுக்கு மாற்றமானவற்றிலிருந்து பாதுகாப்புத் தருவது இவைகளைத்தான் இஸ்லாம் பெண்களுக்குப் பெற்றுத் தந்திருக்கின்றது.
தற்போதைய பெண்களின் சமூக அந்தஸ்து என்னவென்பதையும், உரிமை என்ற பெயரால் அவர்கள் என்னென்ன கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதையும் நம்மாள் இங்கு எடுத்துக் காட்டிட முடியும். அதுபோலவே “சுதந்திரம்” உரிமை என்ற பெயர்களில் பெண்கள் வீட்டுக்கு அடங்காமல் வெளியே திரிவதால் உடைந்துபோன குடும்பங்களின் விபரங்களையும் நாம் இங்கே ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டிட முடியும். இவைகள் ‘ஊரறிந்த உண்மை’ என்பதால் நாம் அவற்றை சீண்டாமல் இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை மட்டும் கீழே சில குறிப்புகளாகத் தருகின்றோம்.
1. மனித இனத்தைப் பெருக்கிடச் செய்வதில் ஆண்களைப் போல் பெண்களுக்கும் சரியான பங்குண்டு. அதில் பெண், ஆணுக்கு முற்றிலும் சமமானவள் என்பதை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது. அவன் தந்தை, அவன் தாய். அவர்கள் இருவருமே வாழ்க்கைக்கு இன்றியமையாதவர்கள். அதில் மனைவியின் கடமை கணவனின் கடமைக்குச் சற்றும் சளைத்ததல்ல. அவளுக்கும் சமமான உரிமைகள் உண்டு. அதேபோல் பொறுப்புகளிலும் அவள் சமமாக பங்கேற்பவள். இப்படி கணவனும் மனைவியும் சரிசமமாக ஏற்றுக்கொள்ளும் பொறுப்பினால்தான் மனித இனம் பல்கிப் பெருகுகின்றது.
இறைவன் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்: மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்துதான் சிருஷ்டித்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்…….. (அல்குர்ஆன்: 49:13) இன்னும் 4:1 வசனத்தையும் பார்க்கவும்.
2. தனக்கென இருக்கும் தனிப்பட்ட பொறுப்புகளிலும், குடும்பத்தின் மொத்த பொறுப்புகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களே! அதேபோல் அவர்கள் செயல்களுக்கு உரிய கூலியைப் பெறுவதிலும் அவர்கள் ஆண்களைப் போன்றவர்கள்தான். பெண்களும் மனிதத் தன்மைகளை முழுமையாகப் பெற்ற சுதந்திரமான படைப்பினங்களே! அவர்களுக்கென ஆத்மா உண்டு. ஆன்மீக ஆசைகளும் அவர்களுக்கு உண்டு. மனிதர்கள் என்ற அடிப்படையில் பெண்களின் இயல்புகள் ஆண்களுக்குக் குறைந்ததுமல்ல. ஆண்களிலிருந்து வேறுபட்டதும் அல்ல. இறைவன் திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
ஆதலால் அவர்களுடைய இறைவன், அவர்களுடைய இந்தப் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டதுடன், உங்களில் ஆண் பெண் எவர் நன்மை செய்தபோதிலும், நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிட மாட்டேன். உங்களில் ஒருவர் மற்றவரில் உள்ளவர்தாம்….. (அல்குர்ஆன்: 3:195) அத்துடன் மேலும் பார்க்கவும். ( 9:71, 33:35-36, 66:19-21).
3. கல்வியையும், அறிவையும் தேடிப்பெறுவதில் ஆண்களுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு. கல்வியையும், அறிவையும் முஸ்லிம்கள் அவசியம் தேடிப்பெற்றிட வேண்டும் என இஸ்லாம் கட்டளை இட்டபோது அது ஆண், பெண் இருபாலருக்குமிடையே எந்த பாகுபாட்டையும் பாராட்டவில்லை. இருபாலரையும் இணைத்தே கூறியுள்ளது. இன்றிலிருந்து சுமார் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பெருமானார் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் கல்வியையும், அறிவையும் பெற்றிட வேண்டிய கடமை உள்ளவர்கள் எனத் தெளிவுபடுத்தினார்கள். இப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி அறிவுறுத்தியதை முஸ்லிம்கள் முழுமையாகச் செயல்படுத்திக் காட்டினார்கள்.
4. ஆண்களைப்போல் பெண்களுக்கும் சுதந்திரம் உண்டு. அவளது கருத்துக்களை அவள் பெண் என்பதற்காகக் காரணங்காட்டி புறக்கணித்திட முடியாது. இஸ்லாமிய வரலாற்றில் பெண்கள் தங்களது கருத்துக்களை எந்தக் கட்டுப்பாடுமின்றி வெளிப்படுத்திடும் உரிமை உடையவர்களாய் இருந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்ற எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைக் காணலாம். திருக்குர்ஆனும் இதை மிக அழகாக தெளிவுபடுத்துகின்றது. பெண்கள் தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தினார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் மிகச் சிக்கலான பிரச்சினைகளிலும் கருத்துக்களைப் பரிமாறிடுவதில் பங்கு பெற்றிருக்கின்றனர். பெருமானார் (ஸல்) அவர்களோடும், ஏனைய முஸ்லிம் தலைவர்களோடும் அவர்கள் விவாதங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 58:1-4, 60:10-12 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)
பொதுமக்களிடையே பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற சட்டம் இயற்றும் விவரங்களிலும் பெண்கள் பங்கு பெற்றிருக்கின்றனர். அவர்கள் கலீபாக்கள் எனப்படும் ஆட்சியாளர்களின் கருத்துக்களுக்கு எதிராக வாதிட்டிருக்கின்றனர். முடிவில் கலீபாக்கள் அப்பெண்களின் நியாயமான வாதங்களை ஏற்றுச் செயல்பட்டிருக்கின்றனர். உமர்பின் அல் கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது இதற்கு விளக்கம் தந்தாற்போல் ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
5. ஆரம்பகால முஸ்லிம்களோடு பெண்களும் பொதுவாழ்வில் ஈடுபட்டு இருந்திருக்கின்றார்கள் என்பதற்கு வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன. குறிப்பாக நெருக்கடி காலங்களில் அவர்கள் பொதுவாழ்வில் பங்குகொண்டு பெரும்பணி ஆற்றியிருக்கின்றார்கள். போர்களின்போது முஸ்லிம் பெண்களும் போர்வீரர்களின் துணைக்குப் போவது வழக்கம். களத்திலே அவர்கள், காயமுற்றோருக்கு மருத்துவ உதவி செய்து வந்தார்கள். வீரர்களுக்கான உணவுகளைச் சமைப்பார்கள். இன்னும் இதுபோன்ற ஏராளமானப் பணிகளை செய்து வந்தார்கள். அவர்களை இரும்புத்திரை போட்டு அடைத்து வைக்கவில்லை. அவர்கள் எந்தப் பயனுமற்றவர்கள் என்று புறக்கணிக்கப்படவுமில்லை.
6. ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கும், சம்பாதித்தவற்றை தங்களுக்கென வைத்துக் கொள்வதற்கும் பெண்களுக்கு உரிமையுண்டு. அவர்களின் உயிர், உடைமை, கண்ணியம் போன்றவை, ஆண்கள் உயிர், உடைமை, கண்ணியம் போன்றவற்றைப்போல் புனிதமானவைதான். அதுபோலவே அவர்கள் ஏதேனும் குற்றம் செய்தால், அவர்கள் ஆண்களைப்போலவே தண்டிக்கப்படுவார்கள். ஆண்களுக்கு என்ன தண்டனையோ அதே தண்டனையே அவர்களுக்கும் தரப்படும். அவர்களுக்கு ஏதேனும் இழப்புகள் ஏற்படுத்தப்பட்டால், (ஆண்களுக்கு) அந்நிலையில் என்னென்ன நஷ்டஈடு தரப்படுமோ அதேபோல் அவர்களுக்கும் தரப்படும். (சான்றாக திருமறையின் 2:178, 4:45,92-93 ஆகிய வசனங்களைக் காணவும்.)
7. இஸ்லாம் இந்த உரிமைகளையெல்லாம் பட்டியல் போட்டுக் காட்டிவிட்டு பின்னர் மறந்துவிட்டு செயல்படுவதன்று. அது இந்த உரிமைகள் காக்கப்பட என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்திடுகின்றது. அத்துடன் பெண்களின் உரிமைகள், முஸ்லிம்களின் நம்பிக்கையில் ஒருபகுதி என்ற அளவுக்குக் கருதப்பட்டு நிறைவேற்றவும் படுகின்றன. பெண்களின் பால்மாச்சரியங்களைப் பாராட்டுபவர்களை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேற்றுமைகளை கற்பித்திடுவதை இஸ்லாம் சகித்துக் கொள்வதில்லை. பெண்கள் தங்களைவிடத் தாழ்ந்தவர்களே என எண்ணிச் செயல்படுபவர்களைத் திருக்குர்ஆன் பல இடங்களில் கண்டித்துள்ளது. (சான்றாக திருமறையின் 16:57-59, 42:47-50, 43:15-19, 53:21-23 ஆகிய வசனங்களைக் காணவும்.)
8. பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள், அவர்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு என்பதைக்கூறி, செயல்படுத்திக் காட்டுவதோடு இஸ்லாம் நின்றுவிடுவதில்லை. அது பெண்களுக்கு சொத்திலும் உரிமைகளைத் தந்தது. முன்னோர்களின் சொத்துக்களில் பெண்களுக்கும் பங்கு தரவேண்டும் எனக் கட்டளை இட்டுள்ளது இஸ்லாம்.
இஸ்லாத்திற்கு முன்பு பெண்களுக்குச் சொத்துக்களில் பங்கு கொடுப்பதற்குப் பதிலாக அவர்களை பங்கு போடுவதற்குரிய சொத்தாக கருதினார்கள். பெண்களுக்கும் சொத்துக்களில் பங்கு உண்டு என்பதை தெரியப்படுத்தியதன் மூலம் பெண்களின் மனித மாண்புகளுக்கு இஸ்லாம் அங்கீகாரம் தந்தது.
ஒரு பெண், தாய், மனைவி, சகோதரி, மகள் போன்ற எந்த நிலையிலிருந்தாலும் அவளுக்கு இறந்துபோன உறவினரின் சொத்தில் பங்குண்டு. எவ்வளவு பாகத்தை அவள் பெறுவாள் என்பது அவளுக்கும் இறந்து போனவருக்கும் இடையேயுள்ள உறவின் நெருக்கத்தைக் கொண்டும், எத்தனை வாரிசுகள் இருக்கின்றனர் என்பதைக் கொண்டும் நிர்ணயிக்கப்படும். இப்படிப் பெற்ற சொத்து அவளுக்கே சொந்தம். அதை யாரும் அவளிடமிருந்து அபகரித்திட முடியாது. வேறு ஏதேனும் காரணத்தைக் கொண்டு அந்த உறவினர் சொத்துக்களில் அவளுக்கு உரியதைத் தராமல் வேறு யாருக்கேனும் தர முயற்சித்தால் சட்டம் அதை அனுமதிக்காது.
சொத்துக்களின் சொந்தக்காரர் தன்னுடைய சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை தான் விரும்புபவர்களுக்கு உயில் எழுதித் தரலாம். இது அவர் ஏனைய வாரிசுகளுக்குத் தரவேண்டியதை தடுத்திடாமல் பாதுகாக்கின்றது. கொள்கையளவில் ஆண்களும் பெண்களும் சொத்துக்களில் பங்கு பெறும் உரிமை உடையவர்கள். ஆனால் அவர்கள் பெறும் பங்கின் அளவு சற்று வேறுபடும். சிலநேரங்களில் ஆண்கள் இரண்டு பங்குகளைப் பெறுகின்றனர். பெண்கள் ஒரேஒரு பங்கினை மட்டுமே பெறுகின்றார்கள். இதை பெண்களைவிட ஆண்களுக்கு அதிகமாகத் தரப்பட்ட உரிமையின் அடையாளமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆண்கள் பெண்களைவிட அதிகமான பங்குகளைப் பெறுவதற்கான காரணத்தைப் பின்வருமாறு விளக்கலாம்.
முதலாவது, ஆண்களே குடும்பத்தின் அத்தனை செலவினங்களையும் கவனித்திட வேண்டியவர்களாய் இருக்கின்றனர். ஆண்கள் தங்களது மனைவி, குழந்தைகள், கதியற்ற உறவினர்கள் ஆகியோரது தேவைகளை நிறைவு செய்திட வேண்டும் எனப் பணித்துள்ளது இஸ்லாம். தன்னைச் சார்ந்து வாழ்பவர்களின் தேவைகளை நிறைவு செய்வது சட்டப்படி கடமையாகும். அதுபோலவே சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும் தன்னால் இயன்றதைத் தரவேண்டியது ஆண்களின் மீது கடமையாகும். எல்லாப் பொருளாதார சுமைகளையும் சுமக்க வேண்டியவர்கள் ஆண்களே!
இரண்டாவது, பெண்களுக்கு ஆண்களைப் போன்ற எந்தப் பொருளாதாரப் பொறுப்புமில்லை. அவர்களது சொந்த செலவினங்களும், அவர்கள் ஆடம்பர பொருளில் ஆசைப்படுவதைத் தவிர வேறு எந்த செலவும் அவர்களுக்கு இல்லை. பெண்களின் செலவுகள் அனைத்தையும் ஆண்களே கவனிக்கின்றனர். அவள் ஒரு மனைவியாக இருந்தால், அவளது கணவன் அவளது பராமரிப்பை ஏற்றுக்கொள்கின்றான். அவள் தாயாக இருந்தால் அவளது ஆண்பிள்ளைகள் அவளது பொருளாதார சுமைகளை ஏற்றுக்கொள்வர். மகளாக இருந்தால் தந்தை அவளது பொருளாதார சுமைகளை ஏற்றுக்கொள்கின்றார். சகோதரியாக இருந்தாள் சகோதரன் அவளது செலவினங்களைக் கவனித்துக் கொள்கின்றான். அவள் சார்ந்து வாழ்கின்ற அளவில் ஆண்கள் ஒருவரும் இல்லையென்றால் அங்கு ‘சொத்துக்களில் பங்கு’ என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஏனெனில் அவளுக்காக சொத்துக்களை விட்டுச் சென்றவர்கள் எவருமில்லை. எனினும் பராமரிக்க ஆளேயில்லாத பெண்கள் பராமரிப்பின்றி விடப்படமாட்டார்கள். அதுபோன்ற பெண்களைப் பாதுகாத்து பராமரித்திட வேண்டியது சமுதாயத்தின் ஒட்டுமொத்தமான கடமையாகும், அல்லது அரசின் கடமையாகும். அவள் தனது பராமரிப்பிற்குத் தேவையானதைத் தேடிக்கொள்ள ஏதேனும் உதவியோ, வேலையோ அரசு தரலாம். அப்படி அவள் சம்பாதித்தால் சம்பாதிப்பவை அனைத்தும் அவளுக்கே சொந்தம். அவள் அவளைத் தவிர வேறு யாரையும் பராமரித்திடத் தேவையில்லை. ஆனால் இதே நிலையில் ஒரு ஆண் இருந்தால் அவன் குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் கடமை உடையவனாவான்.
ஆகவே பெண்களின் பொருளாதாரப் பொறுப்புக்கள் மிகவும் குறைவு. ஆனால் ஆண்களின் பொருளாதாரப் பொறுப்புகள் மிகவும் அதிகம். அதனால்தான் சில நேரங்களில் ஆண்கள் சொத்துக்களில் சற்று அதிகமான பங்கினைப் பெறுகின்றார்கள்.
மூன்றாவதாக, ஒரு பெண், ஒரு ஆண் பெறுவதைவிட குறைவான அளவினைப் பெற்றிடும்போது, அவள் தேடிய சொத்தில் இல்லை, அவள் அவ்வாறு பெறுவது. அவள் பங்கு பெறும் அந்தச் சொத்து அவளது உழைப்பால் வந்ததில்லை. வேறு ஒருவர் உழைப்பில் சேர்த்த சொத்துக்களையே இவர்கள் பங்கு வைத்துப் பாகம் பெறுகின்றார்கள். அந்தச் சொத்து, பங்குபெறும் ஆணோ, பெண்ணோ வருந்தி சேர்த்துக் கொண்டதல்ல. வாரிசுரிமை என்பது ஒருவகை உதவியே ஆகும். இதுபோன்ற (சொத்துக்களை) உதவிகளைப் பங்கிட்டுக் கொள்ளும்போது, அதனை பெறுபவர்களின் தேவைக்கும், பொறுப்புகளுக்கும் தக்கப்படியே பங்கிட்டுக் கொள்ளவேண்டும். குறிப்பாக இறைவனின் சட்டத்தின் கீழ் செய்யப்படும் பங்கீடுகள், தேவைகள், பொறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பங்கிடப்பட வேண்டும்.
இப்போது, எல்லா விதத்திலேயும் பொருளாதார சுமையால் தாக்கப்பட்ட ஆண் ஒரு பக்கம், எந்தவித பொருளாதார சுமையும் அல்லது பொறுப்பும் இல்லாத பெண் ஒரு பக்கம். தம்மிடம் சிறிதளவே சொத்து அல்லது பணம் இருக்கின்றது. நாம் பெண்களுக்கு எதுவுமே தரமாட்டோம் என மறுத்து விட்டால் அது நீதிக்குப் புறம்பானதாகும். ஏனெனில் அவளும் சொத்துக்களை அல்லது பணத்தை விட்டுச் சென்றவரின் உறவின் சொந்தக்காரி. அதேநேரத்தில் நாம் ஆண்களைப் போன்றதொரு பாகத்தை அவளுக்குத் தருவோமேயானால் அது அவனுக்கு நாம் இழைக்கும் துரோகமேயாகும்.
இப்படி இருபுறமும் அநீதி இழைப்பதற்குப் பதிலாக இஸ்லாம் ஆண்களுக்கு அவர்கள் ஏற்றிருக்கும் பெரும் பொருளாதாரச் சுமைகளுக்கு ஏற்றவகையில் சற்று அதிகமான பங்கினைத் தருகின்றது. அதே நேரத்தில் இஸ்லாம் பெண்களின் உரிமையை மறந்து விடாமல் அவர்களுக்கு, அவர்களுக்கிருக்கும் மிகச்சிறிய பொருளாதாரச் சுமைகளுக்குத் தகுந்தபடி சற்றுக் குறைத்துத் தருகின்றது. உண்மையைச் சொன்னால், இஸ்லாம் இதில் ஆண்களைவிட பெண்களிடம் அதிகக் கருணைக் காட்டியுள்ளது எனக் கூறலாம். இங்கே பெண்களின் உரிமைப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு ஆண்களைப் போன்ற உரிமைத் தரப்பட்டிருக்கின்றது. ஆனால் அது ஒரே மாதிரியானதாக இல்லை. காரணம், அவர்களின் பொருளாதாரத் தேவைகளுக்கு அதற்கு மேல் தேவையில்லை. (சான்றாக திருமறையின் 4:11-14, 176 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்)
9. சில ஒப்பந்தங்கள் அல்லது உடன்படிக்கைகள் நிறைவேற சாட்சியாக இரண்டு ஆண்கள் தேவை. அல்லது ஒரு ஆணும் இரண்டு பெண்களும் தேவை. இங்கே இதைக் காரணமாகக் கொண்டு பெண்கள் ஆண்களைவிட இழிவானவர்கள் எனக் கணித்திட வேண்டாம். இந்த விதியின் நோக்கம், ஒப்பந்தத்தில் அல்லது உடன்படிக்கையில் சம்பந்தபட்டவர்களின் உரிமையைப் பாதுகாப்பதேயாகும். பெண்கள் (வெளிவிவகாரங்களில்) ஆண்களின் அளவுக்கு அனுபவம் பெற்றவர்களாக இருந்திட முடியாது. பெண்களின் இந்த அனுபவகுறைவு அந்த ஒப்பந்தத்தில் சம்பந்தபட்டவர்களின் உரிமையை பாதித்திடும் அபாயம் உண்டு. ஆகவேதான் சட்டம் இரண்டு ஆண்கள் சாட்சியம் சொல்ல வேண்டும் அல்லது ஒரு ஆணோடு இரண்டு பெண்கள் சாட்சியம் சொல்ல வேண்டும் எனக் கூறுகின்றது. அந்த சாட்சியில் உள்ள பெண்களில் யாரேனும் ஒருவர் எதையேனும் மறந்து விட்டால் அடுத்தவர் அதனை நினைவூட்டி சாட்சியை நிறைவாக்கிடலாம். அல்லது, அனுபவமின்மையின் காரணமாக ஒரு பெண் தவறான ஒன்றைச் சொல்லிவிட்டால் அடுத்தவர் அதனைத் திருத்தி உண்மையை விளக்கிடலாம். இது வியாபார ஒப்பந்தங்களும் ஏனைய உடன்படிக்கைகளும் நேர்மையான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த இஸ்லாம் தரும் முன்னெச்சரிக்கையே ஆகும்.
இங்கே இஸ்லாம் பெண்களுக்கு உடன்படிக்கைகளுக்கு உயிர் தரும் உரிமையைத் தந்திருக்கின்றது என்பதை நாம் நினைவுகூற வேண்டும். நீதியை நிலைநாட்டுவதில் அவர்களுக்கும் வாய்ப்பளித்துள்ளது என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.
எனினும் பெண்கள் அனுபவத்தில் குறைந்தவர்களாக இருக்கலாம் எனக் கூறுவதால் அது அவர்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் என்ற பொருளை நிச்சயமாகத் தராது. ஒவ்வொரு மனிதனும் (ஆணும், பெண்ணும்) ஏதாவது ஒரு விஷயத்தில் குறையுடையவர்களாகவே இருக்கின்றான் அல்லது இருக்கின்றாள். இதை வைத்துக் கொண்டு அவர்களை யாரும் பழிப்பதில்லை. அதுபோல் பெண்களிடம் இருக்கும் குறைகளை காரணங்காட்டி அவர்களைப் பழிப்பதில்லை. (திருமறையின் 2:282 ஆம் வசனத்தைப் பார்க்கவும்)
10. ஆண்களுக்குத் தரப்படாத சில சிறப்புரிமைகள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சில மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற வேண்டியதில்லை. (உதாரணம்) தொழுகை, நோன்பு போன்ற கட்டாயக் கடமைகளை அவள் ‘மாதவிடாய்’ நாட்களிலும், பிள்ளைப்பேறு தீட்டுக் காலத்திலும் நிறைவேற்ற வேண்டாம். வெள்ளிக்கிழமைகளில் நிறைவேற்ற வேண்டிய ‘ஜும்ஆ’ தொழுகை பெண்கள் மீது கடமையல்ல. பெண் எல்லாவிதமான பொருளாதாரப் பொறுப்புக்களிலிருந்தும் அப்பாற்பட்டவளாக இருக்கின்றாள். ‘அன்னை என்ற அளவில் அவள் இறைவனிடம் மிகவும் உயர்ந்ததொரு கண்ணியத்தைப் பெறுகின்றாள். (சான்றாக திருமறையின் 31:14-15, 46:15 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)
தாயின் காலடியில் உங்கள் சுவர்க்கம் இருக்கின்றது என பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்தது பெண்களுக்குச் சூட்டப்பட்ட மிகப்பெரிய மகுடமாகும். மகனின் அன்பிலும், கருணையிலும் முக்கால் பாகத்திற்குறியவள், மீதம் கால்பகுதியை தந்தைக்கு விட்டு விடுகின்றாள். மனைவி என்ற முறையில் அவள் தன் கணவனிடம் ஒரு குறிப்பிட்ட அளவு திருமணப் பணத்தைக் கேட்டுப் பெற்றிடலாம். இந்தத் திருமணப்பணம் அவளுக்குரியதாகவே இருக்கும். அவளது முழுமையான பராமரிப்பிற்கும், பாதுகாப்பிற்கும் கணவனே பொறுப்பு. இது அவளுக்கே உரிய உரிமையுமாகும். குடும்பச் செலவிற்காக தன்னிடமிருப்பதைச் செலவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதுபோலவே குடும்பச் செலவிற்காக பணம் தேடிட வேண்டியதும் அவளது பொறுப்பல்ல.
திருமணத்தின்போது அவளுக்கு ஏதேனும் சொத்துக்கள் சொந்தமானதாக இருந்தால் திருமணத்திற்குப் பின்னும் அது அவளுக்கு சொந்தமானதாகவே இருக்கும். இதில் கணவனோ மற்ற எவருமோ தலையிட முடியாது.
அவள் மகளாகவோ, சகோதரியாகவோ இருந்தால் அவளது பாதுகாப்பும், பராமரிப்பும் தந்தையின் அல்லது சகோதரரின் பொறுப்பாகும். இது அவளுக்கேயுரிய சிறப்புரிமையாகும். அவள் உழைத்திட விரும்பினால் அல்லது தனது பராமரிப்பிற்கான பொருளைத் தானே தேடிட முனைந்தால் அல்லது தனது குடும்பத்தில் சில பொறுப்புகளைத் தானே ஏற்ருக்கொள்ளத் தயாராக இருந்தால் நிச்சயமாக அவள் அவ்வாறு செய்யலாம். ஆனால் அவளது கண்ணியத்திற்கும், பாதுகாப்பிற்கும் குந்தகம் விழைந்திடக் கூடாது.
11. தொழுகையில் பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் நின்று தொழுகின்றார்கள் என்பது அவர்களை ஆண்களினின்றும் தாழ்ந்தவர்களாக ஆக்கிவிடாது. ஏற்கனவே நாம் குறிப்பிட்டதுபோல் பெண்கள் (கூட்டுத் தொழுகையாகிய) ஜும்ஆ தொழுகையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஆண்களின் மீது இது கட்டாயக் கடமையாகும். ஆனால் அவர்கள் கூட்டுத் தொழுகையில் பங்கேற்க விரும்பினால் அவர்கள் ஆண்களுக்குப் பின்னால் அவர்களுக்கென அமைக்கப்பட்ட தனி வரிசைகளில் நின்று தொழுதிடலாம். சாதாரணமாகத் தொழுகையில் எவ்வாறு வயதில் குறைந்த குழந்தைகள் பெரியவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்பார்களோ அதேபோல் பெண்கள் நின்றிடுவர். இது தொழுகையில் கடைப்பிடிக்கப்படும் ஒரு ஒழுக்க முறையேயன்றி முன்னால் நிற்பவர்கள் உயர்ந்தவர்கள் பின்னால் நிற்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்று இனம் பிரித்து காட்டுவதற்கல்ல. ஆண்களின் அணியில் ஆள்பவரும், சாதாரண குடிமகனும் தோளோடு தோள்நின்று தொழுவதை நாம் காணலாம். சமூகத்தில் உயர்ந்தவர்கள் எனக் கருதப்படுபவர்களும் பாமரர்களும் ஒன்றுபோல் நின்று ஏக இறைவனை சிரவணக்கம் (ஸுஜுது) செய்வதைக் காணலாம்.
தொழுகையில் கடைப்பிடிக்கப்படும் அணிவகுப்பு, ஒவ்வொருவரும் தங்களது இறை நினைவில் நிறைந்த கவனம் செலுத்திடும் வகையில்தான் அமைந்திருக்கும். ஏனெனில் இஸ்லாம் வகுத்திருக்கும் தொழுகையின் முறைகள், சில (பஜனைப்) பாடல்களைப் பாடிடுவது போன்றது அல்லது வேறு சில ‘கோரஸ்’ பாடல்களைப் பாடிடுவது போன்றதோ அல்ல. அவை நின்று, குனிந்து, ஆண்டவன் முன் தலைதாழ்த்தி நிறைவேற்றப்படுபவைகள் ஆகும். அங்கே ஆண்களும், பெண்களும் கலந்து நின்றிட்டால் இருபாலாரின் கவனங்களும் திசை திருப்பப்படலாம். தொழுகை நேரத்தில் இருக்க வேண்டிய திடமான மனநிலையில் தடுமாற்றங்கள் ஏற்படலாம் அல்லது தொழுகையோடு முற்றிலும் தொடர்பே இல்லாத வேற்று நினைவுகள் மனதை ஆளலாம். முடிவில் தொழுகையின் நோக்கமே நிறைவேறாது போகலாம். அதுபோலவே கண்கள் தடுக்கப்பட்டவைகள் மீது பாய்ந்திடலாம். இவ்வாறு பாய்ந்திடுமேயானால் அது கண்கள் ஈடுபட்ட கூடாஒழுக்கம் எனக் கொள்ளப்படும். இதயம் செய்யும் கூடாஒழுக்கமாகக் கருதப்படும். இவைகள் அனைத்தும் தொழுகையின் நோக்கத்தை முறித்து விடுபவையாகும்.
தொழுகையின்போது ஒரு பாலரின் உடல் மறு பாலரின் உடலைத் தொட்டிடுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆண்களும், பெண்களும் கலந்து நின்றிடுவதை அனுமதித்தால் ஒருவரின் உடல் அடுத்தவரின் உடல்மீது படுவதைத் தடுத்திட முடியாது. இன்னும் பெண்கள் ஆண்களின் முன்போ, பக்கத்திலோ நின்று தொழுதால் சில குறிப்பிட்ட அசைவிற்குப் பிறகு அவளது ஆடைகள் அசையவோ, நழுவவோ வாய்ப்புண்டு. இது கவனங்களை அலைக்களிக்கும் செயலாக மாறி விடலாம். அத்துடன் அப்பெண் ஒரு பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்படலாம். தனது ஆடை நழுவி விட்டதே என்ற எண்ணம் வேதனையாக மாறி அவளது இறை நினைவைக் கலைத்திடலாம். ஆகவே இதுபோன்ற நிலைகளையெல்லாம் தவிர்ப்பதற்காகவே ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் நின்று தொழுதிடும் முறை வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழுபவர்கள் எந்த விதத்திலும் சிறு தொல்லைகளுக்குக்கூட ஆளாகாவண்ணம் பாதுகாக்கப்படுகின்றது.
இஸ்லாம் வகுத்திருக்கும் இறை வணக்கத்தின் நோக்கம், நெறிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி, ஆரம்ப அறிவைப் பெற்றவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்வர்.
12. முஸ்லிம் பெண்கள் தங்களது பாரம்பரியத்தோடு தொன்றுதொட்டு இருந்து வரும் ‘பர்தா’ (திரை) முறையைப் பெருமையோடு பின்பற்றி வருபவர்கள். பெண்கள் தங்களது கண்ணியம், கௌரவம், தூய்மை, கற்பு ஆகியவற்றை இந்தப் பர்தாவை அணிந்து கொள்வதின் மூலம் காத்துக் கொள்கின்றார்கள். இதனை இஸ்லாம் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தித் தந்துள்ளது.
அடுத்தவர்களின் கவனத்தைத் தன்பால் திருப்புகின்ற விதத்தில் அவர்கள் எந்த சிறு செயலையும் செய்திடலாகாது. கணவனுக்கு மட்டுமின்றி வேறு யாருக்கும் காட்டக்கூடாத அழகை அவர்கள் அணுவளவும் வெளியில் காட்டிடக் கூடாது. அதுபோலவே வீண்வதந்திகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்திடாவண்ணம் அவர்கள் பர்தா அணிந்திடுவது அவர்களின் பெண்மைக்கு அழகு சேர்ப்பதாகும்.
பெண்கள் தாங்கள் அணிந்துகொள்ளும் பர்தாவின் மூலம் தங்களது ஆன்மாவைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். அடுத்தவர்களின் மனதை வீண்குழப்பங்களில் ஆழ்த்திடுவதிலிருந்தும், தாங்கள் சந்தேகங்களுக்கு ஆளாவதிலிருந்தும், தங்களது கண்கள் தேவையற்றவைகளின் மீது பாய்ந்திடுவதிலிருந்தும், அவர்களது தனித்தன்மைகள் பாதிக்கப்படாவண்ணமும் பார்த்துக் கொள்கின்றனர். இஸ்லாம் பெண்களின் பாதுகாப்பிலும், அவர்களின் ஒழுக்கத்தைப் பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்துகின்றது. அப்போதுதான் சமுதாய அமைப்பில் ஒழுக்கம் நிறைவாக நின்று அமைதி நிலவிடும் என்பது இஸ்லாத்தின் கொள்கை. (சான்றாக திருமறையின் 24:30-31 வசனத்தைப் பார்க்கவும்.)
13. இப்போது இஸ்லாத்தில் பெண்களின் நிலை மிகவும் உயர்ந்தது என்பதும், அது முற்றிலும் அவர்களின் இயற்கைத் தன்மைகளுக்கு ஏற்புடையதாகவே அமைந்திருக்கின்றது என்பதும் நன்கு தெளிவாகும். அவர்களுக்கு ஆண்களின் அளவு உரிமைகள் உண்டு. கடமைகளிலும், பொறுப்புகளிலும் உள்ள வேறுபாடுகளை இஸ்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்கின்றது. சிலவற்றில் அவர்களின் பங்கு அவர்களின் பொறுப்புக்குத் தக்கபடி குறைக்கப்பட்டிருந்தாலும், வேறுவகையில் அந்தக் குறைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் ‘பெண்கள்’ என்பதைக் காரணங்காட்டி அவர்களின் கண்னியமோ, அவர்களின் தனித்தன்மைகளோ சற்றும் குறைக்கவோ, பறிக்கவோ படவில்லை. அவர்கள் ’பெண்கள்’ என்ற காரணத்திற்காக அவர்கள் மீது எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. பெண்களுக்கு என்னென்னெ தேவையோ அவை அனைத்திற்கும் இஸ்லாம் வகை செய்தே இருக்கின்றது. அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் உரிமைகள் அவர்களின் கடமைகளோடு இயைந்து போகின்றவையேயாகும்.
பெண்களின் கடமைகளுக்கும் உருமைகளுக்கும் இடையேயுள்ள சமநிலை பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமறையில் இடம் பெற்றிருக்கும் ஓர் இறைமொழி சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றது.
(ஆண்களுக்கு) முறைப்படி பெண்கள் மீது உள்ள உரிமைகள் போன்றதே, (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு. ஆயினும் ஆண்களுக்குப் பெண்கள் மீது ஓர் உயர் பதவி உண்டு. அல்லாஹ் வல்லோனும் நுண்ணறிவு உடையோனுமாய் இருக்கின்றான். (திருக்குர்ஆன்: 2:228)
இது ஆண்களுக்கு பெண்கள் மீது தரப்பட்ட ஏகபோக உரிமை ஆகாது. அடக்கி ஆண்டிடும் அதிகாரத்திற்கு தரப்பட்ட குத்தகையுமல்ல. ஆண்களுக்குப் பெண்களைவிட அதிகமாக இருக்கின்ற பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தரப்பட்டதே அந்த உயர்வு. மேலே சொன்ன திருமறை வசனத்தை திருமறையின் 4:34 வது இறைவசனத்தோடு ஒப்புநோக்கி பொருள் கொண்டிட வேண்டும்.* (*’மனிதனின் குடும்ப வாழ்க்கை’ என்ற பகுதியையும் பார்க்கவும்.)
பெண்களைவிட ஆண்களுக்கு இருக்கும் பொருளாதார சுமைகளை மனதிற்கொண்டே இந்த அதிகமான உரிமை ஆண்களுக்குத் தரப்பட்டிருக்கின்றது. அதை இழிபிறப்பு என பொருள் கொண்டிடக் கூடாது. அல்லது பெண்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் நசுக்குவதற்குரிய அனுமதியாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. இது இறைவனின் அளப்பற்ற அருளிலிருந்து அருளப்பட்ட அருட்கொடையே ஆகும். இறைவன் தனது அருட்கொடைகளை இயற்கையின் தேவைக்கு ஏற்றவகையில் பகிர்ந்தளிக்கின்றான். அந்த இயற்கையைப் படைத்தவனும் அவனே! ஆண்களுக்கு எது சிறந்தது, பெண்களுக்கு எது சிறந்தது என்பதையும் அவன்தான் நன்கறிவான். இதை இறைவன் இந்த இறைவசனம் வழி உறுதி செய்கின்றான்.
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்திச் செய்தான். பின்பு அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்பு அவர்கள் இருவரிலிருந்தும் அநேக ஆண், பெண்களைப் பரவச் செய்தான்…….. (திருக்குர்ஆன்: 4:1)