9. திருக்குர்ஆனே இஸ்லாமிய நாட்டின் அமைப்பு நிர்ணயச்சட்டம். எனினும் முஸ்லிம்கள் தங்களுடைய பொதுவான விவகாரங்களில் ஒருவரை ஒருவர் கலந்தாலோசித்தே செயல்பட்டிட வேண்டும். இது சட்டம் இயற்றும் சபைகளும், ஆலோசனை அவைகளும் ஏற்பட வழிவகுக்கின்றது. இந்த சபைகளும் அவைகளும் வட்டார, தேசிய, சர்வதேசிய அளவில் அமைந்திடலாம். இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் குடிமக்கள் ஒவ்வொருவரும் பொதுப்பிரச்சினைகளில் தங்களது சிறந்த ஆலோசனைகளை வழங்கிட வேண்டும். அவ்வாறு வழங்கிடும் உரிமை அனைவருக்கும் உண்டு. இந்தக் கடமையை ஒவ்வொரு குடிமகனும் நிறைவேற்றிட வகைசெய்யும் வகையில் ஆட்சியாளர் எல்லாப் பிரச்சினைகளிலும் நாட்டிலே இருக்கும் அறிஞர்களின் கருத்துக்களைக் கோரிப்பெற்றிட வேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளார். அறிஞர்கள் அனுபவம் மிக்கவர்கள், இவர்களின் கருத்துக்கள் ஆட்சியாளருக்குப் பலன் பல பயக்கும். இப்படிக் கூறுவதனால் சராசரி குடிமகனுக்குத் தன் கருத்துக்களை வழங்கிடும் உரிமையில்லை என்று பொருள் கொண்டிடக் கூடாது. சூழ்நிலை வாய்க்கும் போதெல்லாம் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திடும் உரிமையும் கடமையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.
ஆலோசனைகள், கருத்துக்கள் அனைத்தும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளோடு ஒத்துப் போகின்றவைகளாக இருந்திட வேண்டும். இஸ்லாத்தின் போதனைகளுக்கோ, இஸ்லாம் பொதுவாக வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கோ எதிராக அல்லது ஒத்துப்போகாத எதுவும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
இதனால் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொதுப்பிரச்சினைகளில் ஏதேனும் ஒரு வகையில் ஒரு தொடர்பு ஏற்படுகின்றது. ஒரு கடமை பிறக்கின்றது. குடிமக்களில் யாரும் எந்த விஷயத்திலும் அக்கறை அற்றவர்களாக இருந்திட முடியாது.
இஸ்லாத்தின் வரலாற்றில் ஆட்சியாளர்கள், ’கலீபா’ எனப்பட்ட தலைமை ஆட்சியாளர்கள் இவர்களெல்லாம் குடிமக்களால் கேள்வி கேட்கப்பட்டிருப்பதையும், ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதையும், தவறியபோது திருத்தப்பட்டிருப்பதையும் ஏராளமாகக் காணலாம். இதில் அறிஞர்கள், அனுபவம் முதிர்ந்தவர்கள், சாதாரண குடிமக்கள் ஆண், பெண் அனைவரும் நிறைவாக தங்களது உரிமையைப் பயன்படுத்தி கடமையைச் செய்திருக்கின்றார்கள்.
ஒருவரையொருவர் கலந்தாலோசித்து செயல்பட்டிட வேண்டும் என்ற கொள்கை இஸ்லாத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்றால், கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கிட வேண்டும் என்பதோடல்லாமல், அவற்றைப் பொதுமக்களின் நலனிற்காகச் செயல்படுத்திட ஒவ்வொருவரும் தீவிரமாக உழைத்திடவும் வேண்டும். அரசியல் கருத்துக்களை பரிமாறி, ஆலோசனைகள் வழங்கி செயல்பட்டிடும்முறை ஒரு ஜனநாயகவிதி என்பது மட்டுமல்ல, ஆள்பவர்களும், ஆளப்படுபவர்களும் பின்பற்றிட வேண்டிய மார்க்கக்கட்டளை, ஒழுக்கநியதி. இறைவனின் தூதரவர்கள் ‘கலந்தாலோசித்தல்’ என்ற கொள்கையைப் பின்பற்றி வந்தார்கள். அத்துடன் நல்ல ஆலோசனை வழங்கிட வேண்டியது மார்க்கத்தின் முக்கியமான பகுதி எனக் குறிப்பிட்டார்கள்.
ஆலோசனை வழங்கிடுவதின் நோக்கம் இறைவனின் சட்டத்தை எல்லோரும் பின்பற்றுகிறார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்வதேயாகும். அத்துடன் மக்களின் உரிமைகள் மதிக்கப்படுகின்றன, அவர்களின் கடமைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பவற்றை உறுதி செய்வதற்கேயாகும்.
சூழ்ச்சி அரசியலில் ஈடுபடாமல் மக்களைத் தடுத்திடவும், சந்தர்ப்பவாதங்களில் மக்கள் இறங்கிடாமல் அணை போட்டிடவும், இறைவனின் தூதரவர்கள் ’ஆலோசனை வழங்குபவர்களோ, கருத்துக்களைத் தெரிவிப்பவர்களோ நேரானவற்றையே பேசுங்கள், நல்லனவற்றையே சொல்லுங்கள், அல்லது வாய்மூடி பேசாதிருந்து விடுங்கள்’ என எச்சரித்துள்ளார்கள். இது ஆலோசனை வழங்கிடுபவர்களும், ஏனையவர்களும் சுயநலம், தற்பெருமை போன்றவற்றிற்கு பலியாகிட வேண்டாம் என எச்சரிப்பதற்கேயாகும். மேலும் இது ஆலோசனைகள் தூய்மையான எண்ணங்களோடும், பொதுமக்களின் நலனையே குறிக்கோளாக கொண்டதாகவும் இருந்திட வேண்டும் என்பதனை உறுதி செய்வதற்கேயாகும். ஏனெனில் ஆலோசனைகள் இறைவன் தந்த உரிமையின் கீழ் வழங்கப்படுகின்றன. இறைவனால் அங்கீகரிக்கப்பட்டவை, அவனுக்காக செயல்படுத்தப்படுபவை, பொதுநலத்தை நோக்கமாகக் கொண்டவை.
ஆட்சியாளர்கள் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுவதோ, மக்கள் ஆலோசனைகளை வழங்கிடுவதோ அவரவரின் விருப்பத்தைப் பொறுத்ததல்ல. அது ஈமானின் (நம்பிக்கையின்) ஒரு பகுதியாகும். ஒரு இஸ்லாமிய கடமை. இந்தப் பொதுவிலக்கு பெருமானார் (ஸல்) அவர்களே கூட ஒரு விதிவிலக்கல்ல. இறைவன் அவர்களுக்குப் பின்வருமாறு அறிவுறுத்தின்றான்.
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர். (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள். எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்தி விடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, (யுத்தம், சமாதானம் முதலிய) சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன்:3:159)
நம்பிக்கைக் (ஈமான்) கொண்டவர்களின் நற்பண்புகளை விளக்கிடும்போது திருக்குர்ஆன் ஒருவரை ஒருவர் கலந்தாலோசிப்பதை நம்பிக்கையின் ஒருபகுதியெனக் குறிப்பிடுகின்றது.
அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் – அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர். மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள். அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். (அல்குர்ஆன்: 42:37,38,39)
10. இஸ்லாத்தின் அரசியல் அமைப்புப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் நம்பிக்கை சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவை உண்டு. ஒவ்வொருவரும் தன்னுடைய திறமைகளை வளர்த்துத் தன்னை இயன்றவரை உயர்த்திக் கொள்ளும் உரிமையும் சுதந்திரமும் உண்டு. உழைத்திடவும், உழைப்பிலும், தொழிலிலும் போட்டியிடவும், பொருளீட்டிடவும், ஈட்டியதைத் தனக்கென வைத்துக் கொள்ளவும் உரிமையுண்டு. தான் விரும்பியதை ஏற்றிடவும், தனக்கு பிடிக்காததை நிராகரித்திடவும் உரிமையுண்டு. ஆனால் இந்த உரிமைகள் குழப்பங்களையும், கொந்தளிப்புகளையும் ஏற்படுத்திட தரப்பட்டிருக்கும் ‘அனுமதி’ எனக் கருதிடக் கூடாது.
மேலே குறிப்பிட்ட உரிமைகள் அனைத்தும் இறைவனின் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டவையாகும். இந்த உரிமைகளை முறைப்படுத்திடுவதும், கண்காணிப்பதும் அந்த இறைச் சட்டமேயாகும். இந்த உரிமைகள் இறைவனின் சட்டத்தின்படி செயல்படுத்தப்படும்வரை, அவை குடிமக்களின் சொத்து எனக் கருதப்படும். இறைச் சட்டத்தின் வரையறைகள் மீறப்படுமேயானால் அல்லது இறைச் சட்டத்திற்கு எதிராக செயல்படுமேயானால் அல்லது பொதுமக்களின் நலன் பாதிக்கப்படுமேயானால் அது உரிமை மீறல் எனக் கொள்ளப்படும். அதனால் கட்டுப்படுத்தப்படும்.
தனிமனிதன் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாவான். இந்த பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தி இயக்கி வருவது இறைவனின் சட்டமேயாகும். ஆகவே இந்த பிரபஞ்சத்தில் ஒரு பகுதியாகிய மனிதன், இந்த பிரபஞ்சத்தை இயக்கிவரும் இறைவனின் சட்டதிட்டங்களுக்குத் தக்கபடியே இயங்கிட வேண்டும். அத்துடன் தனிமனிதன் தான்வாழும் சமுதாயத்தின் ஒரு அங்கம், தான் வாழும் நாட்டின் பலனுள்ள குடிமகன். ஆகவே அவன் தனது உரிமைகளை, அடுத்தவர்களோடுப் பொருந்திப்போகின்ற வகையிலேயும், அடுத்தவர்களுக்கு நன்மை பயக்கின்ற விதத்திலேயும் பயன்படுத்திட வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு பிரச்சினையில் தனிமனிதன் தன் விருப்பப்படி ஒரு முடிவினை எடுத்திடும்போது பெரும்பான்மையான மக்கள் வேறொரு முடிவினை எடுத்துவிட்டால் தனிமனிதனும் பெரும்பான்மையாரோடு ஒத்துப்போவதே சிறப்பு. ஆனால் பெரும்பான்மையினரின் முடிவு இறைவனின் சட்டத்திற்கு முரணானதாக இருக்கக்கூடாது.
எனினும் பொதுமக்களின் கருத்தை தயார் செய்வதில் தனிமனிதன் தனது கருத்தின் வலிவை எடுத்துச் சொல்லி மக்களை ஏற்றிடச் செய்யும் பூரண உரிமையைப் பெற்றவன். ஆனால் அவன் இதில் குழப்பங்களை ஏற்படுத்திடவோ அவதூறுகளைப் பரப்பிடவோ கூடாது. பெரும்பான்மையோர் வேறொரு முடிவைத்தான் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பது தெளிவான பிறகு அவனும் தனது முடிவைத் திருத்திக் கொள்வதே நலம். ஏனெனில் பொதுப் பிரச்சினைகளின் முடிவுகள் தனிமனிதனோடு மட்டும் சம்பந்தப்பட்டவையன்று. அவை அனைத்து மக்களையும் தழுவியது. அனைவரிடையேயும் அமுல்படுத்திடுவது. (சான்றாக திருமறையின் 3:102-105, 8:16 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்)
11. இஸ்லாமிய நாட்டின் ஆட்சி என்பது இறைவனின் வார்த்தையின் கீழும் பொதுமக்களின் ஒப்புதலின் கீழும் ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருளாகும். ஆட்சியின் ஏகோபித்த அதிகாரியாக இறைவனே இருந்திடும்போது நிர்வாகத்திற்காக அமர்த்தப்படும் அதிகாரிகள் தங்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்திருக்கும் இறைவனிடம் நம்பிக்கையுடன் நடந்திட வேண்டும். அத்துடன் அவர் இறைவனை உண்மையாக ஈமான் (நம்பிக்கை) கொண்டவராகவும் இருந்திட வேண்டும். குடிமக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்களாக இருப்பதனால் (ஆட்சித்) தலைவர் அல்லது ‘கலீபா’ முஸ்லிமாகத்தான் இருந்திட முடியும். இந்த அடிப்படைகளெல்லாம் குறிப்பிடுவதின் காரணம், பொதுமக்களின் நன்மையை பாதுகாத்திடவும், இறைவனுக்கும் குடிமக்களுக்கும் அரசு தான் ஆற்றிட வேண்டிய கடமைகளை நிறைவேற்றிடவுமேயாகும். இன்னும் இஸ்லாமிய ஆட்சியின் எல்லைக்குள் வாழ்ந்திடும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மதிக்கவுமேயாகும்.
இன்று நிலவும் மிகவும் துர்பாக்கியமான நிலை என்னவென்றால் இஸ்லாம் சொல்லும் இந்த அரசியல் கொள்கை மிகவும் தவறாகவே மக்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்திடும் நாட்டின் ஆட்சித்தலைவர் முஸ்லிமாகவே இருந்திட வேண்டும். அதே நேரத்தில் அவர் சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்துப் பாதுகாத்திட வேண்டும் எனக்கூறுவது சிறுபான்மையினரிடம் மாச்சரியங்களோடு நடந்திட வேண்டும் என்பதற்கல்ல, மாறாக அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் சட்டத்தைக் கீழ்படிந்து நடந்திட விரும்புவோர் அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகின்றார்கள். அவர்கள் ஏனைய பொறுப்புள்ள குடிமக்களைப்போல் எல்லா உரிமைகளுக்கும் உரியவர்களாவர். அவர்கள் நாட்டின் சட்டத்தை மதித்து நடந்திடும்வரை அவர்கள் முஸ்லிமல்லாதவர்கள் என்பதற்காக இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட மாட்டார்கள். அல்லது புறக்கணிக்கப்பட மாட்டார்கள். உதாரணமாக அவர் விரும்பினால் ஜகாத் கொடுத்து, அதுபோன்று அரசை நடத்துவதற்கான ஏனைய வரிகளையும் கொடுத்து முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் அத்தனை உரிமைகளையும் பெறலாம். அதாவது அவரது பாதுகாப்புப் போன்று ஜகாத் கொடுப்பதால் ஏற்படும் அத்தனை நன்மைகளையும் பெறலாம். ஆனால் அவர் இஸ்லாமிய மார்க்கம் ஏற்படுத்திய ஜகாத்தைக் கொடுப்பது, தான் ஒரு முஸ்லிமல்லாதவராக இருப்பதால் தன்னுடைய கண்ணியத்திற்கும், உணர்வுகளுக்கும் ஊனமானது என எண்ணிடுவாரேயானால் அவர் தனது வரியை வேறு பெயரில் அல்லது ‘ஜிஸ்யா’ என்ற வகையில் தந்திடலாம். இதன் மூலம் அவர் தனது விருப்பத்தை, தனது உணர்வுகளை ஊனப்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இதுபோன்றதொரு வாய்ப்பு ஏனைய மதத்தவர்களால் ஆளப்பட்டபோது முஸ்லிம் சிறுபான்மையினருக்குத் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரியைத் தருகின்றவர்களுக்கு முழுமையான பாதுகாப்புத் தந்திட வேண்டியது இஸ்லாமிய அரசு, இஸ்லாமிய சமுதாயம் ஆகியவற்றின் கடமையாகும்.
இருப்பினும் முஸ்லிமல்லாத ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்வை (உதாரணம்: திருமணம், விவாகரத்து, உணவின் முறைகள், வாரிசுரிமை போன்றவற்றை) இஸ்லாத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்ள விழைந்திடுவாரேயானால் அவரது ஆசையை அங்கீகரித்திட வேண்டும். அவரது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அவர் தான் பின்பற்றும் மதத்தின்படியே வாழ்ந்திட விரும்புவாரேயானால், அவரது உரிமையில் யாரும் குறுக்கே நின்றிட முடியாது. ஆகவே அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வைப் பொறுத்தவரை தனது சொந்த விருப்பத்தைப் பின்பற்றிடலாம். அல்லது பொதுவாகப் புழக்கத்தில் இருக்கும் (இஸ்லாமிய) நெறிகளைப் பின்பற்றலாம். ஆனால் பொதுவாழ்வில் – பொதுவிவகாரங்களில் – அவர் நாட்டின் சட்டத்தை அதாவது – இறைவனின் சட்டத்தைத்தான் பின்பற்றிட வேண்டும். அவர் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அவர் ஏனைய குடிமக்களைப்போல பாதுகாக்கப்பட வேண்டும். இதில் அவரின் உரிமை ஏனைய மக்களின் உரிமைகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல.
இவைகளெல்லாம் ஏதோ கற்பனை உலகின் கனவுகளல்ல. இவை திருமறையின் போதனைகள், பெருமானால் (ஸல்) அவர்களால் நடத்திக் காட்டப்பட்டவை. இஸ்லாமிய வரலாறு சான்று பகரும் சரித்திர உண்மைகள்!
ஒருமுறை ஹஜரத் உமர் இப்னு அல்-கத்தாப் (ரலி) அவர்கள் (இஸ்லாத்தின் இரண்டாவது கலீபா) தான் கடந்து சென்ற பாதையில் வயோதிக யூதர் ஒருவர் மிகவும் பரிதாபகரமான நிலையில் கிடக்க கண்டார்கள். மிகவும் இறங்கிய குரலில் அந்த வயோதிகரிடம் ‘உங்களுடைய நிலை என்ன?’ என்று கேட்டார்கள். அத்துடன் ‘உங்களுக்கு முடிந்தபோது நாங்கள் உங்களிடம் வரிகளை வசூலித்தோம். இப்போது நீங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளீர்கள்.’ ’உமர் எத்துணை அளவுக்கு உங்களிடம் அநீதமாக நடந்து கொண்டார்.’ எனக் கூறினார்கள். அதே நிமிடத்தில் அந்த வயோதிகருக்கு ஓய்வுத்தொகை ஏற்பாடு செய்யப்பட்டது. வழங்கப்பட்டது.
உமர் (ரலி) இன்னும் அவர்களைப் போன்றோர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து தங்களது அரசியல் பாடத்தைப் பெற்றவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனால் கற்பிக்கப்பட்டவர்கள். இந்தப் பயனுள்ள அரசியல் பாடங்கள் பின்வருவது போன்ற திருமறை வசனங்களில் பதியப்பட்டுள்ளது.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து யுத்தம் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளிப்படுத்தாதவர்களுக்கும் நீங்கள் நன்றி செய்ய வேண்டாமென்றும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்துகொள்ளக் கூடாதென்றும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான். அல்லாஹ் உங்களைத் தடுப்பதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களுடன் யுத்தம் புரிந்தவர்களுடனும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளிப்படுத்தியவர்களுடனும், உங்களை வெளிப்படுத்துவதில் உதவி செய்தவர்களுடனும் நீங்கள் சினேகிதமாக இருக்கக்கூடாது என்பதுதான். ஆகவே எவர்கள் அவர்களுடன் நட்பு பாராட்டுகின்றார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள்தாம். (அல்குர்ஆன்: 60:8,9)
இறுதியாக, ஒரு இஸ்லாமிய அரசை ஒரு மதசார்பற்ற அரசோடு ஒப்பிட்டிடுவது மிகப்பெரிய தவறாகும். இஸ்லாமிய அரசில் ஒரு முஸ்லிம்தான் ஆட்சியாளராக இருக்க முடியும். சமய சார்பற்ற அரசில் சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் ஆட்சிபொறுப்பிற்கு வந்திடும் வாய்ப்பினைப்பற்றிப் பேசிட முடியும். ஆனாலும் இவ்விரண்டையும் ஒப்பிடுவது பல காரணங்களால் தவறானதாகும்.
முதலாவதாக மதசார்பற்ற அரசு என்னதான் குறைகள் இருந்தாலும் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இஸ்லாத்தின் அரசியல் கொள்கைகளைவிட சிறந்ததாகத் தோன்றிடும். ஆனால் அது உண்மையல்ல.
இரண்டாவது, இஸ்லாமிய அரசில் ஆட்சித்தலைவரின் கடமைகளும் பொறுப்புகளும் மதசார்பற்ற அரசின் ஆட்சித்தலைவருக்கு இருக்கும் பொறுப்புகளுக்கு முற்றிலும் மாறுபட்டது.
மூன்றாவதாக, மதசார்பற்ற அரசில் சிறுபான்மைச் சமுதாயத்தவர் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திடலாம் என்பது உண்மையேயாயினும் அவர் ஒரு பெரும்பான்மை (அரசியல்) கட்சியை சேர்ந்தவராக இருந்திட வேண்டியதிருக்கின்றது. இங்கே மதத்தின் அடிப்படையில் உள்ள பெரும்பான்மைக்குப் பதிலாக அரசியல் பெரும்பான்மை அங்கீகரிக்கப்படுகின்றது அவ்வளவுதான். இதையொரு பெரிய மாற்றம் எனச் சொல்லிடுவதற்கில்லை. இன்னும் மதசார்பற்ற அரசு ஆட்சிப்பொறுப்பை ஒரு சிறப்புரிமை எனக் கருதுகின்றது. அதைப் பொறுப்பு என்பதைவிட ‘பவிசு’ என்றே கருதுகின்றது. இது ஒரு தனிமனிதனுக்குத் தரப்படலாம் அல்லது மறுக்கப்படலாம். ஆனால் இஸ்லாமிய அரசியல் ஆட்சித்தலைவரின் பொறுப்பும் ஆட்சியை அணுகிடும் முறையும் முற்றிலும் வித்தியாசமானது. இஸ்லாத்தில் ஆட்சி என்பது முதலில் ஒரு பொறுப்பு. சோதனைகள் நிறைந்த ஒரு கடமை. மிக்க கவனத்துடன் கவனித்திட வேண்டிய சுமையுமாகும். இப்படிப்பட்டதொரு பொறுப்பை முஸ்லிமல்லாதவர்களின் தலையில் ஏற்றிடுவது நியாயமாகாது.