ஷாம் (ஸிரியா, லெபனான்) பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டபோது முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு பிராத்தித்து மழைத் தேடினார்கள். துஆவின் போது: இறைவா! எங்களின் மேன்மைக்குரியவரைக் கொண்டு வஸீலா தேடுகிறோம் என்று பிரார்த்தித்து விட்டு, யஸீதே! உங்கள் கையை உயர்த்தி எங்களுக்காகப் பிரார்த்தியும் என்றார்கள். உடனே யஸீதும், அவருடன் இருந்தவர்களும் தத்தம் கரங்களை ஏந்தி மன்றாடினர். பிறகு மழை பெய்தது. இதை அடிப்படையாக வைத்து அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பக்தியும், நேர்மையும் நிரம்பிய நல்லவர்களைக் கொண்டு குறிப்பாக அஹ்லுல் பைத் (நபியின் சந்ததியைச் சார்ந்தவர்களைக்) கொண்டு மழை தேடிப் பிரார்த்தித்தல் மிக ஏற்றமாகும்.
நபிகளுடைய காலத்தில் தண்ணீரின்றி வறட்சி ஏற்பட்ட வேளையில் நபியவர்களிடம் ஒரு காட்டரபி வந்து இந்த வறட்சியை எடுத்துச் சொல்லி முறையிட்டார். ‘யா ரஸூலுல்லாஹ்! மழையில்லாமல் எங்களுடைய ஆடு, மாடு, ஒட்டகைகள் எல்லாம் அழிந்து நாசமாகி விட்டன. நடை பாதைகளெல்லாம் துண்டிக்கப்பட்டு விட்டன. எங்களுக்கு தண்ணீர் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் இரு கரங்களையும் உயர்த்தி ‘இறைவா! எங்களுக்கு மழையைத் தந்தருள்’ என்று பிரார்த்தித்தார்கள். பிரார்த்திக்கும் போது வானில் மேகங்களின் அடையாளங்களே இல்லை. பிரார்த்தித்து முடிந்ததும் கடல் திசையிலிருந்து மேகங்கள் உருவாயின. பிறகு ஒருவார காலம் ஓயாத மழை கொட்டியதுடன் கதிரவனும் இந்நாட்களில் தலை காட்டவில்லை.
இதைக் கண்ட அம்மனிதர் (அல்லது மற்றொருவர்) ‘நாயகமே! அதிகமான மழையினால் வழிகள் அனைத்தும் துண்டித்துப் போய் விட்டன. கட்டிடங்கள் இடிந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்த மழை நிற்க அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்’ என்றார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் தம் திருக்கரங்களை உயர்த்தி ‘இறைவா! இந்த மழையை எங்கள் சுற்றம், சூழவுள்ள தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தச் செய்வாயாக! எங்களுக்குப் பாதகமாக இதை ஆக்கிவிடாதே. விளை நிலங்களிலும், மலைகளிலும், குன்றுகளிலும், மலை இடுக்குகளிலும், பள்ளத்தாக்குகளிலும் எல்லாம் பெய்யச் செய்வாயாக!’ என்று பிரார்த்தித்ததும் மேகங்கள் மதினாவை விட்டும் அகன்று விட்டன. இது புகாரியிலும், முஸ்லிமிலும் கூறப்பட்டுள்ள பிரபலமான ஹதீஸாகும்.
இத்தகைய ஹதீஸ்களிலிருந்து நபி (ஸல்) அவர்கள், ஸஹாபிகள் ஆகியோரின் உரைகளில் மனிதரைக் கொண்டு ஷபாஅத்து தேடுவதென்றால் அதன் தாத்பரியமே அவருடைய துஆவைக் கொண்டு ஷபாஅத் தேடுவதாகும் என்று விளங்குதல் வேண்டும். அவரையே பொருட்டாகக் கொண்டு பிரார்த்தனையும், சிபாரிசும் தேடப்பட மாட்டாது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். (தாத்தை) அவரையே பொருட்டாகக் கொண்டு ஷபாஅத் தேடுதல் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ‘நபியே! நாங்கள் உங்களைக் கொண்டு அல்லாஹ்விடம் ஷபாஅத்து தேடுகிறோம். அல்லாஹ்வைக் கொண்டு உங்களிடமும் ஷாஅத்தைக் கேட்கிறோம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைத் துதித்து விட்டு ஆச்சரியத்தோடு ‘அட நாசமே, அல்லாஹ் என்றால் யார் என்று உமக்குத் தெரியுமா?’ என்று வினவியதன் பின் ‘அல்லாஹ்வைக் கொண்டு அவன் படைப்புகளில் யாரிடமும் சிபாரிசு செய்யப்பட மாட்டாது’ என்று விளக்கம் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் தன்மை இதைவிட எல்லாம் மிக மேலானது’ என்றும் கூறினார்கள்.
நபிகளுடையவும், ஸஹாபாக்களுடையவும் உரைகளில் சிருஷ்டியின் துஆவையும், ஷபாத்தையும், பொருட்டாகக் கொண்டு கேட்பதையே கருதப்படும். மாறாக சிருஷ்டியை மட்டுமே பொருட்டாகக் கொண்டு கேட்பதை நாடப்பட மாட்டாது. சிருஷ்டிகளை பொருட்டாகக் கொண்டு கேட்கிற ஷபாஅத்தின் தாத்பரியம் அவர்களையே வைத்து கேட்பதாகும். (அவர்களின் பிரார்த்தனையைக் கொண்டல்ல) என்றிருந்தால் அல்லாஹ்வைக் கொண்டு படைப்புகளிடத்தில் ஷபாஅத் கேட்கலாம் என்பது அனுமதிக்கப்படுவதாக இருக்க வேண்டும். ஆனால் நபியவர்கள் அதைத் தடுத்திருக்கிறார்கள். அல்லாஹ்வைக் கொண்டு சிருஷ்டிகளிடம் சிபாரிசு கேட்கக் கூடாது என்றார்கள்.
ஏனெனில் ஷபாஅத் தேடுவதைக் கொண்டு கருத்து: நபியின் துஆவைக் கொண்டு ஷபாஅத் தேடுதலாகும். அவர்களைக் கொண்டல்ல. நபியின் துஆவைக் கொண்டு நபிகள் சிபாரிசு செய்வதற்கு அவர்களிடம் கேட்கலாம். நபியவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்து நம் தேவைகளை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொடுத்தார்கள். இந்த ஷபாஅத்திற்கு நல்ல பொருந்தக்கூடிய அர்த்தம் இருக்கிறது. ஆனால் அல்லாஹ் யாருக்காக எவனிடம் துஆச் செய்ய முடியும். அல்லாஹ்வுக்கு மேலானவர் யார் இருக்கிறார்? எனவே அல்லாஹ்வை சிபாரிசு செய்பவனாக ஆக்கக் கூடாது.
சிபாரிசுக்குக் குறைந்தது மூன்று பேர் வேண்டும். சிபாரிசு செட்கிறவர் (ஷஃபீஉ-நபி), சிபாரிசு செய்யப்படுகிறவன் (மஷ்ஃபூஉ இலைஹி-அல்லாஹ்), சிபாரிசை தேவைப்படுகிறவன் (மனிதன்). தன் சிருஷ்டிகளின் பாவங்களை மன்னிக்கவோ அல்லது அவற்றின் தேவைகளை நிறைவேற்றவோ யாரிடம் சென்று அல்லாஹ் பிரார்த்திக்கப் போகிறான்? எனவே சிபாரிசுக்கு மூவர் வேண்டுமென்ற விதி அல்லாஹ்வுடன் அந்த ஷபாஅத் சேர்க்கப்படும் போது சிந்தனைக்கு எட்டாததாக மாறி விடுகிறதல்லவா? சிபாரிசின் மூன்று அம்சங்களில் ஒன்றை (மஷ்ஃபூஉ இலைஹி) இழக்க நேரிடுகிறது. இது எதைக் காட்டுகிறது என்றால் ஷபாஅத்தும் (சிபாரிசும்), வஸீலாவும் (இறை நெருக்கத்தைத் தேடுவதும்) நபியைக் கொண்டு கேட்கப்பட மாட்டாது. மாறாக அவர்களின் துஆவைக் கொண்டுதான் கேட்கப்படும் என்பதைக் காட்டுகிறது.
எல்லாம் வல்ல இறைவன் என்ற அனைத்து இறைக் கொள்கைக்காரர்களை சார்ந்த ‘இத்திஹாதிய்யா’ பிரிவினர்களில் சிலரும், இன்னும் கவிஞர்களில் சிலரும் தான் அல்லாஹ்வைக் கொண்டும் நபியிடம் சிபாரிசு வேண்டியதாகக் குறிப்பிடுகின்றனர். இவர்களின் கூற்று தவறு. வழி கெடுப்பதாகும். சிபாரிசு கேட்கப்படக் கூடியவனும், பிரார்த்திக்கப்படுபவனும் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. வானங்கள், பூமியில் உள்ள அனைத்து சிருஷ்டிகளும் அவனையே கெஞ்சி நிற்கின்றன. அப்படியிருக்க இறைவன் தன் சிருஷ்டிகளிடம் பிரார்த்தித்தல் சாத்தியமாகுமா? அவன் தன் அடியார்களை ஏவுகிறான். அவர்கள் அவனுக்குக் கீழ்படிந்து விடுகின்றனர். அவனுக்கு கட்டுப்பட்டு வழிபட்டு நடப்பதை சிருஷ்டிகள் தத்தம் கட்டாய கடமையாக ஏற்றுக் கொள்கின்றனர். ரஸூல்மார்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மனிதர்களுக்கு சேர்த்து வைப்பார்கள். அவர்களுக்கு வழிபடுவதன் தாத்பரியமும் அல்லாஹ்வுக்கு சிரம் சாய்ப்பதாகும். திருமறையில் “நாம் அனுப்பிய எந்த தூதரும் அல்லாஹ்வின் அனுமதியுடன் மக்கள் அவருக்கு வழிபட வேண்டுமென்றே அனுப்பியுள்ளோம்” (4:64) என்று அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் கூறுகிறான்: “ரஸூலுக்கு வழிபட்டவன் அல்லாஹ்வுக்கு வழிபட்டவனாகிறான்” (4:80). சமூகத் தலைவர்களின் கட்டளைகளுக்கு வழிபடுவதும் கூட அவர்கள் அல்லாஹ், ரஸூலுக்கு வழிபட வேண்டுமென்று பணித்தாலே கடமையாகிறது. நபி (ஸல்) அவர்கள் ‘முஸ்லிமான மனிதன் வாழ்விலும், தாழ்விலும், தூக்கத்திலும், விழிப்பிலும் தலைவர்களால் பணிக்கப்பட்டதற்கொப்ப கேட்டு வழிபட்டு நடக்க வேண்டும். ஆனால் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வேண்டுமென்று பணிக்கப்பட்டால் இங்கே கேட்பதோ, வழிபாடோ இல்லை’ என்று கூறிவிட்டு, ‘படைத்தவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் சிருஷ்டிகளுக்கு வழிபடக் கூடாது’ என்று கூறி முடித்தார்கள்.
பரிந்துரைப்பவனின் பரிந்துரையை ஏற்று அதற்கொப்ப வழிபடுதலும் கடமை (வாஜிப்)யொன்றுமில்லை. எத்தனை பெரிய மனிதர் சிபாரிசுக்கு வந்தாலும் சரியே. பரீரா என்ற அடிமைப்பெண் உரிமை விடப்பட்டதற்குப் பின் அவளுடைய அடிமை கணவரைப் பிரியும் விஷயத்தில் தன் இஷ்டம்போல செய்ய வேண்டுமென்று கூறி நபி (ஸல்) அவர்கள் அவளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவளுடைய அடிமைக் கணவர் அவளை மிகவும் விரும்பியிருந்தார். தன் மனைவி தம்மை கைவிடப் போவதாகத் தெரிந்ததும் கணவர் அழுது விட்டார். இது தெரிய வந்ததும் அந்தக் கணவரை பிரியாமலிருக்கவும், தம் அடிமைக் கணவருடன் கூடி வாழ வேண்டுமென்றும் நபியவர்கள் பரீராவிடம் கூறியபோது, ‘நபியே! இது விஷயத்தில் எனக்குக் கட்டளை இடுகிறீர்களா?’ என வினவினாள். அதற்கு நபியவர்கள் ‘இல்லை. கட்டளையிடவில்லை. சிபாரிசு செய்கிறேன்’ என்று பரீராவுக்கு பதிலளித்தார்கள். கட்டளை இடுகிறீர்களா என ஏன் வினவினார் என்றால் சிபாரிசுக்கொப்ப செயல்பட தேவையில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாக இருக்கலாம். ஆனால் நபிகள் கட்டளையிட்டு விட்டால் அதற்கொப்ப செயல்பட்டுத்தான் ஆக வேண்டும். அது வாஜிப் (கடமை) என்பதும் முஸ்லிம்களுக்கு இடையில் நன்கு தெரிந்திருக்கும். எனவேதான் நபியவர்கள் ‘நான் பணிக்கவில்லை. சிபாரிசு செய்கிறேன்’ என்றார்கள்.
இதிலிருந்து ஷபாஅத்தை ஏற்று அதற்கொப்ப செயல்படுதல் வாஜிபில்லை என்று புலனாகிறதல்லவா! மனிதரிடம் நபிகள் வேண்டுகிற ஷபாஅத்தாயினும் சரியே. ஏனெனில் நபியவர்கள் தம் ஷபாஅத்தை பரீரா ஏற்றுச் செயல்படாததினால் நபியவர்கள் அவளைக் குற்றம் கூறவில்லை. இதிலிருந்து மனிதன் இன்னொரு மனிதனுக்காக ஷபாஅத்துச் செய்தால் அதை ஏற்க வேண்டுமென்பது அவசியமில்லை என்று தெரிகிறது. விரும்பினால் ஏற்கலாம். இல்லையென்றால் புறக்கணித்து விடலாம். அல்லாஹ்வைப் பொருத்தவரை அவனுடைய அனுமதியின்றி எவருக்கும் ஷபாத்துச் செய்வதற்கு அனுமதியில்லை.
இதைத் திருமறையும் விளக்குகிறது: “அர்-ரஹ்மான் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று கூறினர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். மலக்குகள் (அவனது சந்ததிகள்) அல்லர். அவர்கள் அவனுடைய கண்ணியமிக்க அடியார்களே இ(வான)வர்கள் (அவன் முன்னிலையில்) யாதொரு வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவனிட்ட கட்டளையையே செய்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு முன்னிருப்பவற்றையும், இவர்களுக்குப் பின்னிருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களுக்கன்றி மற்றவருக்கு இவர்கள் சிபாரிசு செய்ய மாட்டர்கள். அவனுக்கு பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள்” (21:26-28).
நபி (ஸல்) அவர்களிடமிருந்து இம்மையிலும், மறுமையிலும் சிபாரிசு தேடப்படும் என்பதை முன்னர் எடுத்துக் காட்டப்பட்ட ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன. மறுமையில் ஷபாஅத் தேடுவது என்றால் சிருஷ்டிகள் அன்று நபி (ஸல்) அவர்களிடம் சென்று தத்தம் தீர்ப்புகளை முடித்து சுவனத்தில் பிரவேசிப்பதற்கு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யுமாறு நபிகளை வேண்டிக் கொள்வார்கள். தம் உம்மத்துகளில் பெரும் பாவம் புரிந்தவர்களுக்கும் ஷபாஅத்துச் செய்வார்கள். நரகத்துக்குச் செல்ல இருக்கின்றவர்களில் சிலருக்கும் ஷபாஅத்துச் செய்து அங்கு செல்ல விடாமல் தடுப்பார்கள். நரகில் நுழைந்தவர்கள் சிலரை அதை விட்டும் வெளியேற ஷபாஅத்துச் செய்வார்கள். உலகில் இறைவனுக்குக் கீழ்படிந்து நடந்து நன்மைக்குரியவர்களாக வந்தவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் ஷபாஅத்துச் செய்வதாக அதிகமான இமாம்கள் அபிப்பிராயப் படுகின்றனர்.
ஆனால் முஃதஸிலாக்கள், கவாரிஜ்கள், பித்அத்காரர்களில் பெரும்பாலோர் அஹ்லுல்கபாயிர் எனும் பெரும் பாவிகளுக்கு நபியின் ஷபாஅத்து இல்லையென மறுத்துக் கூறுகின்றனர். பெரும் பாவிகளுக்காக நபி (ஸல்) அவர்கள் ஷபாஅத்துச் செய்ய மாட்டார்களாம். பெரும் பாவம் செய்தவனின் குற்றத்தை இறைவன் மன்னிக்க மாட்டான். பெரும் பாவிகள் நரகில் புகுவார்கள். நரகத்தில் புகுந்தால் சிபாரிசினாலும் சரி, மற்ற எந்த காரணத்தினாலும் அதை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பது இவர்களின் கொள்கை.
ஆனால் ஸஹாபாக்களும், தாபியீன்களும் மேலும் மத்ஹபுடைய இமாம்கள் அனைவரும் பொதுவாக ஸுன்னத் வல் ஜமாஅத்தாரும் நபி (ஸல்) அவர்கள் பெரும் பாவிகளுக்கு சிபாரிசு செய்வார்கள் என்று கூறியிருக்கிறார்கள். ஈமான் கொண்டிருந்த ஒரு மனிதன் நரகில் காலமெல்லாம் கிடக்க மாட்டான். எவரது இதயத்தில் அணுவளவு ஈமான் இருக்கிறதோ அவர் நரகத்தை விட்டும் வெளியேறி விடுவார் என்று கூறுகின்றனர். ஆனால் நபியவர்களிடம் இந்த சிபாரிசைத் தேடுவதும் மேலும் நபிகளைக் கொண்டு வஸீலா தேடுவதுமெல்லாம் அவர்கள் வாழ்ந்திருக்கும் போது ஆக வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…