ஸூஃபியிஸம்: ஸூஃபிகள், ஸாதுலிய்யா தரீக்கா, காதிரிய்யா தரீக்கா, நூரிய்யா தரீக்கா என்று பல தரீக்காக்களை உருவாக்கி மார்க்கத்தைப் பல பிரிவுகளாக பிரித்து விட்டனர்.
இஸ்லாம்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” (அல்குர்ஆன்: 42:13)
இன்னும் 42:14, 23:52-53, 3.103, 3:105, 6:159, 30:32 போன்ற வசனங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை பலவாறாக பிரிப்பவர்களை வன்மையாக கண்டிக்கின்றன.
ஸூஃபியிஸம்: இதைப் பின்பற்றக்கூடியவர்கள் தங்களின் ஸூஃபிகள், ஷெய்குமார்கள், பீர்கள், இறைநேசர்கள் ஆகியோர்களைப் பிரார்த்தித்து அழைக்கின்றனர்.
இஸ்லாம்: “அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை” (அல்குர்ஆன்:35:13)
இன்னும் 13:14, 35:14, 35:40, 40:60, 72:20, 25:17-19, 43:86, 40:20, 46:4,5, 28:88, 29:42 போன்ற வசனங்கள் அல்லாஹ்வேயே அழைத்து உதவிதேட வேண்டும் என வலியுறுத்துகினறன.
ஸூஃபியிஸம்: இக்கொள்கையை உடையவர்கள் தங்களின் ஸூஃபிகள், ஷெய்குமார்கள், பீர்கள், குரு ஆகியோருக்கு மறைவான ஞானம் இருப்பதாக நம்புகின்றனர்.
இஸ்லாம்: “(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாக காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்) தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்து விடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்” (அல்குர்ஆன்: 8:43)
நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால், பத்ருபோரில் எதிரிகளின் உண்மையான படைபலம் என்ன என்று அறிந்து தைரியம் இழந்திருக்கக் கூடும். மறைவான ஞானம் இல்லாததால், நபியவர்கள் கனவில் எதிரிகள் பலம் குறைவாகக் காண்பிக்கப்பட்டதை சரி என்று நம்பி தைரியமாக போருக்கு சென்றார்கள் என மேற்கண்ட இறைவசனம் கூறுகிறது.
“(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும். நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம். நீரோ அல்லது உமது கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை. நீரும் பொறுமையைக் கைக்கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்)” (அல்குர்ஆன்: 11:49)
“(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியற்றவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை” (அல்குர்ஆன்: 7:188)
மேற்கண்ட வசனங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதை தெளிவாக உரைக்கும்போது, மற்ற யாருக்குமே இந்த மறைவான ஞானம் இருக்க முடியாது. அவ்வாறு மறைவான ஞானம் இருக்கும் என்று நம்பினால் அவர்கள் மேற்கண்ட இறைவசனங்களை பகிரங்கமாக மறுக்கின்றனர்.
‘மறைவான ஞானம் அனைத்தும் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் கிடையாது’ என்பதை திருக்குர்ஆனின் பல வசனங்கள் வலியுறுத்துகின்றன. பார்க்கவும்: 11:31, 64:4, 27:65, 34:14, 72:10, 2:31-32, 6:59, 27:20-27, 12:102, 33:63.
தொடரும்.