இஸ்லாத்தின் தூண்கள் என்று வருணிக்கப்பட்டுள்ள கடமைகளுள் இறுதியானது ‘ஹஜ்’ எனும் கடமையாகும்.மக்காவிலிருக்கும் ஆதி இறை இல்லமாம் கஃபாவை நோக்கி மேற்கொள்ளப்படும் புனிதப் பயணமே ஹஜ். இந்தப் புனிதப் பயணத்தை வாழ்வில் ஒரு முறையாவது மேற்கொண்டிடுவது, உடல்பலம், மனபலம், பணபலம் இவற்றையுடைய முஸ்லிம்களின் கடமையாகும்.
தனது பொறுப்புக்களை உணருகின்ற வயதுக்கு வந்துவிட்ட முஸ்லிம்கள் (ஆண், பெண் இருபாலரும்) போதிய பணவசதி படைத்தவர்களாயிருந்தால், தங்களது வாழ்வில் ஒரு முறையாவது மக்கா நகருக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும். போதிய அளவு பணவசதி படைத்தவர்கள் என்பதன் பொருள், தங்களுடைய சொந்த செலவுகளுக்கும், தங்களுடைய கடனை தீர்ப்பதற்கும் போதிய அளவு வசதி படைத்தவர்கள் என்பதாகும்.
’ஹஜ்’ எனும் கடமை இஸ்லாத்திற்கே உரித்தானதொரு சிறப்பம்சமாகும். இஃது இறைவனால், பல்வேறு நோக்கங்களுக்காகப் பணிக்கப்பட்டதொரு கடமையாகும். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
1. ஹஜ் ஈமானின் வருடாந்தர மாநாடாகும். அங்கே முஸ்லிம்கள் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்து குழுமுகின்றார்கள். ஒருவரையொருவர் தெரிந்து கொள்கின்றார்கள். தங்களின் பொதுவான பிரச்சனையைச் சிந்திக்கின்றார்கள், விவாதிக்கின்றார்கள். உலக முஸ்லிம்களின் நல்வாழ்வுக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டுகின்றார்கள். மனித வரலாற்றில் எங்கணும் காணவியலாத அளவிற்கு நடத்தப்படும் மிகப்பெரிய அமைதி மாநாடாகும்.
’ஹஜ்’ கடமையின்போது, அமைதியே மிகவும் முக்கியமானதாகும். இறைவனோடு அமைதிப்படுதல், தனது ஆன்மாவோடு அமைதிப்படுதல், சமுதாயத்தின் பிற உறுப்பினர்களோடு அமைதியாக இருத்தல், எல்லா உயிர்களுடனும் அமைதியாக இருத்தல் என்று பொருள்படும் ஹஜ் எனும் கடமை. யாருடைய அமைதியைக் கலைப்பதும் ஹஜ் எனும் புனிதக் கடமையின்போது அனுமதிக்கப்படுவதில்லை.
2. இஸ்லாமெனும் இறைவனின் வழிகாட்டுதல் அகிலத்தின் வாழ் மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்டதே! இதை வெளிப்படையாக எடுத்துக்காட்டும் ஒரு கடமையே ‘ஹஜ்’. மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே, அவர்களுக்குள் எந்த அடிப்படையிலேயும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தும் கடமையே ஹஜ். இஸ்லாம் கற்றுத்தந்த உலக சகோதரத்துவத்தில் விழுமிய எடுத்துக்காட்டே ஹஜ்.
பல்வேறு நிறத்தைக் கொண்ட மனிதர்கள், பல்வேறு மொழிகளைப்பேசும் மக்கள், பல்வேறு தொழில்களைச் செய்யும் மக்கள், பல்வேறு வகுப்பைச் சார்ந்த மக்கள், உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் இவர்கள் அனைவரும் தங்களுக்குள் எந்த வேற்றுமையும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகின்ற உலக மாநாடே ‘ஹஜ்’. இந்த மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளையைப் பணிந்து, ஒரே நோக்கத்தோடு, ஒரே இலட்சியத்தோடு, ஒரே முழக்கத்தோடு, ஒரே விதமான எளிய உடையோடு, ஒரே செயல்முறைகளைப் பின்பற்றி ஏக இறைவன் முன் நிற்கும் அற்புதச் செயலே ‘ஹஜ்’. அவர்கள் அனைவரும் ஏக இறைவனைத் தவிர வேறு யாருக்கும் பணிந்திட மாட்டோம் என முழங்குகின்றனர். அங்கு அத்துமீறிய செயல்களுக்கு இடமில்லை. அன்பு, பணிவு, அடக்கம், இறையச்சம் இவைகள் நிறைந்த ஒரு ஒப்பற்ற மாநாடே ‘ஹஜ்’.
3. முஸ்லிம்கள், இறைவனுக்காக எந்தத் தியாகத்தையும் செய்திட தயங்கிட மாட்டார்கள் என்ற உறுதியை வருடந்தோரும் புதுப்பித்து, புத்துயிர் அளித்திடும் மாநாடே ‘ஹஜ்’. முஸ்லிம்கள் இறைப்பணியில் வரும் இழப்புகளைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்பதைப் பாரறிய, பறையறிவித்திடும் நாளே ‘ஹஜ்’ நிறைவேற்றும் நாள்.
4. இந்தப் புனிதக் கடமையை நிறைவேற்றிடும் முஸ்லிம்கள், இறைவனின் இறுதித்தூதராம் முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்ந்த ஆன்மீகச் சூழ்நிலையோடும், வரலாற்றுச் சூழ்நிலையோடும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றனர். இது அவர்கள், புத்துணர்வு பெற்றிடவும், தங்களது நம்பிக்கையைப் பலப்படுத்திக் கொள்ளவும் கிடைத்த அரிய வாய்ப்பேயாகும். இதிலிருந்து அவர்கள் தாங்கள் மேற்கொண்ட இறைவனின் திருப்பணிகளுக்குத் தேவையான ஊக்கத்தைப் பெறுகின்றார்கள்.
5. நபி இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோர் அன்று நிறைவேற்றி நிறைவடைந்த இறைச்சடங்குகளை நினைவு கூர்ந்து அதே சடங்குகளை நிறைவேற்றிக் களித்திடும் பெருவிழாவாக விளங்குகின்றது ‘ஹஜ்’. இவர்கள் ஏக இறைவனின் ஆதி இறையில்லத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட முதல் மனிதராவார்கள்.
6. இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் முன் இப்படித்தான் மனிதர்கள் அனைவரும் எந்தப் பாகுபாடுமின்றி ஏற்றத்தாழ்வுகளின்றி தங்களது தீர்ப்புகளுக்காகக் காத்திருப்பார்கள் என்பதை நினைவுறுத்தும் செயலாக விளங்குகின்றது ‘ஹஜ்’.
‘இறைவன் ஒருவனே’ என்ற ஏகதெய்வக் கொள்கையின் மையமாக மக்கா நகரையே இந்த உலகில் இறைவன் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்பதையும், நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காலந்தொட்டு, ‘இறைவன் ஒருவனே’ என்ற கொள்கையை பரப்பிடும் மையமாக – இஸ்லாத்தின் மையமாக – மக்கமா நகரே இருந்து வருகின்றது என்பதையும், இனி என்றென்றும் அதுவே இஸ்லாத்தின் மையமாக இருந்து வரும் என்பதையும் வெளிப்படையாக அறிவிக்கும் விதத்தில் அமைந்த கடமையே ‘ஹஜ்’.
‘ஹஜ்’ கடமையை நிறைவேற்றிடும்போது பின்பற்றிட வேண்டிய விதிகளும், சடங்குகளும் சற்று நீளமானவை. ஆதலால் நாம் அவற்றை இங்கு விவரித்திட இயலவில்லை. இவைகளை விரிவாக தெரிந்திட விழைவோர் இது குறித்து தனியான நூல்களைப் பார்த்திட வேண்டுமெனக் கோரப்படுகின்றார்கள்.
ஹஜ் கடமையை நிறைவேற்றிடுவோருக்கு சிறந்த வழிகாட்டிகள் எப்போதும் கிடைப்பார்கள். அவர்கள் மிகவும் தெளிவாக எல்லாச் சட்டங்களையும், சடங்குகளையும் விளக்கிடுவர்.
ஹஜ் முழுவதும் பயணிகளின் சிந்தனை, செயல் இவையாவும் இறைவனைச் சுற்றியே இருக்கும். மக்கமா நகரை நோக்கி முஸ்லிம்கள் இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்வது இறைவனை தொழுவதற்கும் அவனது புகழ் பாடுவதற்குமேயாகும். அல்லாமல், ஏதாவதொரு தனிமனிதனைத் துதிப்பதர்காகவோ, ஏதாவதொரு குட்டித் தேவதையை வழிப்படுவதற்காகவோ அல்ல.
அதுபோலவே அங்கே இருக்கும் கருங்கல்லைத் தொடுவது அல்லது முத்தமிடுவது அவரவரின் விருப்பத்தைப் பொறுத்த செயல். அது கடமையோ, கட்டளையோ அல்ல. அந்தக் கருங்கல்லைத் தொடுபவர்கள் அல்லது முத்தமிடுபவர்கள், அந்தக் கல்லை ஈமான் கொண்டதாலல்ல. அதுபோலவே அவர்கள் அவ்வாறு செய்வது அந்தக் கறுப்புக் கல்லுக்குச் சில சக்திகள் இருக்கின்றன என்ற மௌட்டீகமான கொள்கையைக் கொண்டதாலும் அல்ல. அவர்கள் நம்புவதும் ஏற்றுக் கொண்டதும் அந்த ஏக இறைவனைத்தான். அவர்கள் அவ்வளவு தூரம் பயணம் செய்து வந்திருப்பது அந்த ஏக இறைவனுக்காகவேயாகும்.
அங்கேயிருக்கும், கருங்கல்லை அவர்கள், தொடுவது அல்லது முத்தமிடுவது அல்லது தங்களது கரங்களால் அதை நோக்கிச் சுட்டிக் காண்பிப்பது பெருமானார் (ஸல்) அவர்கள் மீது கொண்ட அன்பின் அறிகுறியாகத்தான்.
இஸ்லாம் வருவதற்கு சற்று முன்னால் ‘கஃபா’ புதுப்பிக்கப்பட்டது. அந்தப் புதுப்பிப்புப் பணியின்போது எந்தக் குலத்தினர், இந்தக் கல்லை கஃபாவில் தூக்கி வைப்பது என்பதில் பல்வேறு குலத்தினர்க்கிடையேயும் ஒரு சர்ச்சை எழுந்தது. இந்தச் சர்ச்சை அங்கே நிலவி வந்த அமைதியைக் கலைத்தது. ஒரு பெரும் பூசலுக்கான புகைச்சல்கள் கிளம்பின.
இந்தக் கருங்கல்லைப் பல்வேறு குலத்தினரும் பெரிதும் மதித்தனர். அவர்கள் இந்தக் கல்லின் மீது அத்துணை மரியாதை வைத்திடக் காரணம் அந்தக் கல் நபி இப்ராஹீம் (அலை) அவர்களோடு சம்பந்தப்பட்டது. அந்தப் புனித இறை இல்லத்தில் ஆதி முதல் இருந்து வருகின்ற கல் என்பதனாலும் அதற்கு அவ்வளவு மரியாதை ஏற்பட்டிருக்கலாம். எது எப்படி இருந்தாலும் அந்தக் கல்லுக்கு இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும், அல்லது முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் எந்தச் சிறப்புமில்லை.
எனினும் இந்தக் கருப்புக்கல்லை யார் கஃபாவில் தூக்கி வைத்திடுவது என்பதில் ஏற்பட்ட பூசல்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை. இறுதியாக ஒருநாள் அடுத்த நாள் யார் முதலில் கஃபாவிற்குள் நுழைகின்றாரோ அவரது சொல்படி செயல்படுவது என்ற முடிவுக்கு வந்தனர். முஹம்மத் (ஸல்) அவர்களே அடுத்த நாள் அதிகாலையில் கஃபாவிற்குள் நுழைந்ததில் முன்னவர். ஆகவே எல்லோரும் அவருடைய முடிவைத் தெரிந்து கொள்ள ஓடிவந்தனர்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் அற்புதமானதொரு அமைதித் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். ஒரு போர்வையில் அந்தக் கல்லை வைத்தார். பின்னர், எல்லாக் குலத்தவர்களையும் போர்வையைப் பற்றிப் பிடித்துக் கல்லைத் தூக்கி கஃபாவில் வைத்திடச் செய்தார். இந்தத் திட்டத்தின் கீழ் எல்லாக் குலத்தவரும் கல்லைத் தூக்குவதில் பங்கு கொண்டனர். பூசல்களும், புகைச்சல்களும் ஒரு முடிவுக்கு வந்தன. அத்தனைக் குலத்தவர்களும் மனம் பூரிக்க, கல் அங்கே வைக்கப்பட்டது.
இதுவே அந்தக் கல்லைச் சுற்றியுள்ள வரலாறாகும்.
ஹஜ் பயணிகள் இந்தக் கல்லை நோக்கி கையை உயர்த்துகிறார்கள் அல்லது முத்தமிடுகிறார்கள் என்றால் அவர்கள் அன்று புத்திசாதுர்யமாக அமைதியை நிலைநாட்டிய முஹம்மத் (ஸல்) அவர்களை நினைவு கூறும் முகமாக அவ்வாறு செய்கின்றனர். இதனை தெளிவுபடுத்திட சில உதாரணங்களை இங்கே தருகின்றோம்.
நாடு கடத்தப்பட்டு, அல்லது தனது தாய் நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, அல்லது எதிரியின் மண்ணிலேயே எதிரியைச் சாய்த்து விட்டு, தாயகம் திரும்பும் ஒரு மாவீரன், அல்லது நாட்டுப்பற்று மிக்கதொரு மனிதன் தன் தாயகத்தினுள் முதலடி எடுத்து வைத்திடும்போது தன் தாய்திருநாட்டின் புனித பூமியை முத்தமிடுகின்ற காட்சியை நாம் மிகவும் சாதாரணமாகச் சந்திக்கலாம். தன்னைப் போன்ற நாட்டுப்பற்று மிக்கதொரு மனிதரைக் கண்டால் அவரை நெஞ்சாரக் கட்டித் தழுவுவதை நாம் பார்க்கலாம். இதை வைத்துக் கொண்டு அந்த வீரன் அல்லது நாட்டுப் பற்றுமிக்க அந்த மனிதன் அந்தப் பூமியை தொழுதான் என்றோ, தான் சந்திக்கும் நாட்டு பற்றுமிக்க மனிதரை தெய்வமாக்கி விட்டான் என்றோ யாரும் சொல்வதில்லை.
கஃபாவிலுள்ள கருப்புக்கல்லைத் தொடுபவர்களை இந்தக் கண்ணோட்டத்தில் தான் பார்த்திட வேண்டும். மக்கமா நகரில் வீற்றிருக்கும் கஃபா இஸ்லாத்தின் ஆன்மீக மார்பீடம். ‘மக்கா’ உலக முஸ்லிம்களின் ஆன்மீகத் தாயகம். பல நூறு மைல்களைக் கடந்து வரும் இறையச்சம் மிக்கதொரு மனிதர் மக்கா நகரில் கஃபா வந்தடைந்ததும் வெற்றி வாகை சூடிவரும் வீரனின் உணர்வைப் போன்றதொரு உணர்வைப் பெறுகிறார்.
இதைப்போன்ற பல வரலாற்றுச் சம்பவங்களை இங்கே நாம் வரையிட்டுக் காட்டிட முடியும்.
இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள், அறியாமை இருளில் அகப்பட்டுக் கிடந்த குறைஷியர்களால் எண்ணற்ற இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டனர். அவர்கள் தங்கள் தாயகத்தை விட்டே துரத்தப்பட்டனர். இவ்வாறு துரத்தப்பட்டவர்கள் வேற்று இடங்களில் பல வருடங்கள் வாழ வேண்டியதாயிற்று. பல ஆண்டுகளாக அவர்கள் கஃபாவிற்குள் சென்று இறைவனை தொழுதிட அனுமதிக்கப்படவில்லை.
அகதிகளாக அகப்பட்டுக் கிடந்த நாடுகளிலேயிருந்து அவர்கள் தாயகம் திரும்பியபோது அவர்களது இலட்சியமாக அமைந்தது ஆதி இறையில்லமாம் கஃபாவேயாகும். அவர்கள் கஃபாவிற்குள் குதூகலத்துடன் நுழைந்தார்கள். அங்கே இருந்த சிலைகளை – ஏக இறைவனுக்கு இணை வைக்கப்பட்டிருந்த சின்னங்களை உடைத்தெறிந்தனர். ‘ஹஜ்’ எனும் புனிதப் பயணம் மேற்கொள்ளுபவர்கள் நிறைவேற்றிடும் சடங்குகளையும் நிறைவேற்றினர். அந்தக் களிப்பிலேதான் அவர்கள் கருப்புக்கல்லைத் தொட்டனர், முத்தமிட்டனர்.
நாம் மேலே தந்துள்ள விளக்கங்களைச் சில பெரிய மனிதர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் உண்மைப்படுத்துகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய எழுத்தாளர், ஒருவர் தன் தாயகம் அன்னியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். நாட்டை விட்டு வெளியேறிய அவர் தன்னுடன் தன் தாயகத்திலிருந்து ஒருப்பிடி மண்ணைக் கையில் எடுத்துச் சென்றாராம். அந்தக் கைப்பிடி மண்தான் அவருக்கு நிம்மதியைக் கொடுத்ததாம். அதைப் பார்த்திடும் போதெல்லாம், நாம் ஒருநாள் சுதந்திரமான நமது தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்வோம் என்ற உணர்வைப் பெறுவாராம்.* (நான் இதை 1950க்கும், 1960க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் படித்தேன். இந்தத் தகவலின் ஆதாரத்தை மறந்து விட்டேன். இந்தத் தகவலின் ஆதாரத்தை தரமுடியவில்லை என்பதற்காக வருந்துகிறேன்.)
இப்படிப்பட்ட மனித இயல்புகளின் அடிப்படையிலேதான் அந்தக் கருப்புக்கல்லைத் தொடுவதையும், முத்தமிடுவதையும் பார்த்திட வேண்டும். சில அசாதரணமான சூழ்நிலையில் மனிதன் நடந்து கொள்ளும் முறையை மனதிற்கொண்டே இதைப் பார்த்திட வேண்டும்.
அத்தியாயம்-3 ன் முடிவுரை:
மதீனாவிலிருக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களின் அடக்க இடத்திற்குப் போய் வருவது ஹஜ் கடமை நிறைவேறிட இன்றியமையாதது அல்ல. ஆனால் மதீனாவுக்கு செல்லுகின்ற பயணிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் அடக்க இடத்திற்குச் சென்று தங்களது மரியாதையைச் செலுத்துவது சிறப்பெனக் கருதப்படுகின்றது. பரிந்துரை செய்யவும் படுகின்றது.
மானிட இனம் உய்ய உற்ற வழிகாட்டியாகவும், இறைவனின் இறுதித் தூதராகவும் இலங்கும் பெருமானார் (ஸல்) அவர்களின் அடக்க இடத்தைப் பார்ப்பது, நாம் நாளும் அவர் வழியில் நடந்திட வேண்டும் என்ற உணர்வை உறுதிப்படுத்துமன்றோ!
ஹஜ் கடமையின் இறுதிக் கட்டம் ஒரு தியாகத்தை (குர்பான்) செய்வதிலேயேதான் முடியும். இது இறைவழியில் இறைவனுக்காக நாம் செய்திட வேண்டிய சிறப்புக் கடமைகளில் ஒன்று. ஹஜ் கடமையை நிறைவேற்றுவதோடு ஏழைகளின் பசியைப் போக்கி அவர்களும் அப்பெருநாளில் களித்திருக்க வகைசெய்கின்றது. தியாகம் (குர்பான்) ஹஜ் பயணத்தை மேற்கொண்டவர்களால் மட்டும்தான் செய்யப்படும் என்றில்லை. இது உலக முஸ்லிம்களின் கடமையாகும்.
கடைசியாக ’குர்பான்’ என்பது எதைக் குறிக்கின்றது என்ற கேள்விக்கு பதில் தந்திடுவோம். பெருநாட்கள் என்ற தலைப்பில் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் குர்பான் செய்யும் மிருகத்தின் இறைச்சியோ, இரத்தமோ அல்லாஹ்வை சென்று சேருவதில்லை. நமது நன்றியுணர்வே அவனைச் சென்று சேருகின்றது. குர்பான் செய்வது நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துவதேயாகும். குர்பான் தருவதன் மூலம் நாம் அவன்பால் கொண்ட நம்பிக்கையை உறுதிபடுத்திக் கொள்கின்றோம்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏக இறைவனின் கட்டளையை ஏற்றுத் தனது புதல்வனை தியாகம் செய்யத் தயாரான அந்த ஒப்பற்றத் தியாக வரலாற்றை நமக்கு நினைவூட்டுவதே குர்பான் எனும் தியாகம்.
இறைவனின் ஆணை என்றவுடன் அதற்குமேல் சிந்திப்பதற்கு ஒன்றுமில்லை என்று தந்தையும் மகனும் தயக்கமின்றி ஏற்றுக்கொண்ட உன்னத இறையச்சத்தை – இறைவனுக்கு பணிந்து நடக்கின்ற பாடத்தை நமக்குக் கற்றுத் தருவதே ஆண்டுதோறும் நாம் செய்யும் குர்பான்.
தந்தை இறைக்கட்டளைகேற்ப தன் மகனை அறுத்திட தயாராக இருந்தபோதிலும் இறுதியில் அல்லாஹ் தன் அளப்பரிய கருணையினால் ஒரு ஆட்டைப் பலியிடச் செய்தான். குர்பான் செய்வது ஒரு வருடாந்திர விழாவாக – இறைவன் அருளியுள்ள கருணைகளுக்கு நன்றி செலுத்துவதாகவே இருக்கின்றது.
அன்று நபி இப்ராஹீன் (அலை) அவர்கள் அறுத்திட தயாரானது இஸ்மாயீல் (அலை) அவர்களையா? இஷ்ஹாக் (அலை) அவர்களையா? என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.
முஸ்லிம்கள் அது இஸ்மாயீல் (அலை) அவர்கள்தான் என்றே நம்புகின்றார்கள். அது இஷ்ஹாக் (அலை) அவர்கள் அல்ல என்பதும் முஸ்லிம்களின் நம்பிக்கை.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் அவர்களின் தவப்புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களும் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்து கடைசி கட்டத்தை அடைந்தபோதுதான் இறைவன் அதை நிறுத்தி ஆடு ஒன்றினைப் பலியிடச் செய்தான்.
மேலே சொன்ன இந்த உண்மையை ஊர்ஜிதப்படுத்த இருபது வலுவான வாதங்கள் இருக்கின்றன. ஆனால் இவைகள் நபி மூஸா (அலை) அவர்களால் இஸ்ரவேலரின் சந்ததியினருக்கு அருளப்பட்ட அருள் உபதேசங்களைக் குறைத்து மதிப்பிடுவதற்காக வந்தவைகளல்ல.
திருக்குர்ஆனில் இந்த உண்மையை நிலைநிறுத்துகின்ற விதத்தில் எண்ணற்ற வசனங்களைக் காணலாம்.
சான்றாக: 2:40,47, 7:137, 17:2, 40:53, 45:16, ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.
இந்த நிகழ்ச்சி குறித்து இஸ்லாம் சொல்லும் சம்பவமே உண்மையென்பதை நிலைநிறுத்தும் வாதங்களில் சிலவற்றை இங்கே தருகின்றோம்.
1. திருக்குர்ஆனில் இதுபற்றி இடம்பெற்றுள்ள குறிப்புகள் அனைத்தும் (37: 101-103) அன்று குர்பானுக்காக தயார் செய்யப்பட்டவர் இஸ்மாயீல் (அலை) அவர்களே என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
2. தற்போது வழக்கிலிருக்கும் பழைய ஏற்பாடு (GEN 21:5) இஷ்ஹாக் (அலை) அவர்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்களது நூறாவது வயதில் தான் பிறந்தார்கள் எனக் கூறுகின்றது. இஸ்மாயில் (அலை) அவர்கள் நபி இப்ராஹீம் அவர்களது 86வது வயதிலே பிறந்ததாகவும் கூறுகின்றது (GEN 21:16). இதை வைத்துப் பார்த்திடும்போது ஏறக்குறைய பதினான்கு வருடங்களுக்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் ஏகப்புதல்வராகவே இருந்து வந்திருக்கின்றார் என்பதையும், இஷ்ஹாக் (அலை) அவர்கள் ஒருபோதும் ‘ஏகப்புதல்வர்’ என்ற நிலையில் இருந்ததில்லை என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
உண்மை இவ்வாறிருக்க பழைய ஏற்பாடு (GEN 22:2) நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இறைவன் “இப்போது உங்கள் ஏகப்புதல்வனான இஷ்ஹாக்கை தியாகம் செய்யுங்கள்” எனக் கட்டளையிட்டதாகப் பதிக்கப்பட்டுள்ளது. மோரியாவின் நாட்டில் சென்று இதனைச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டதாகவும் குறிக்கப்பட்டுள்ளது. இங்கே இஷ்ஹாக் என்ற பெயர் நிச்சயமாகப் புகுத்தப்பட்டதே என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
அதுபோலவே மோரியாவின் நாடு எங்கே இருக்கின்றது என்பதற்கும் தெளிவான விளக்கமுமில்லை. இது மக்காவிலிருக்கும் குன்றான மர்வாவாக இருக்க முடியுமேயல்லாமல் வேறெதுவுமாக இருந்திட முடியாது. இவைகள் முழுக்க முழுக்க இஸ்லாம் சொல்வதே உண்மை என்பதற்குச் சான்றாய் திகழ்கின்றன.
3. இந்த முழு நிகழ்ச்சியும் இடம் பெற்ற இடம் மக்காவேயாகும். இஸ்மாயீல் (அலை) அவர்களும் அவர்களது தாயாருமே நபி இப்ராஹீம் (அலை) அவர்களைத் தொடர்ந்து மக்காவிற்கு வந்தார்கள் என்பதையும் அவர்கள் அங்கு தங்கி கஃபாவின் புணரமைப்பில் ஈடுபட்டார்கள் என்பதையும் நாம் அனைவரும் மிகவும் நன்றாக அறிவோம். அல்குர்ஆன்: 2:124-130, 14:35:40
4. பின்வருவனவும் முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு வலுவூட்டும் விதத்தில் அமைந்துள்ளன.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் கொண்டிருக்கும் கருத்து எண்ணற்ற எதிர்ப்பிற்குரிய முடிவுகளுக்கு இட்டுச் செல்வதாகும்.
அ) இவர்களின் கருத்து இரண்டு சகோதரர்களுக்கிடையே வேற்றுமை பாராட்டுகின்றது. இந்த பாகுபாட்டிற்கு காரணமாகக் காட்டப்படுவது ஒருவர் ஒரு அடிமைப் பெண்ணின் புதல்வர். பிரிதொருவர் சுதந்திரப் பெண்ணின் மைந்தர்.
ஆ) பரம்பரைப் பெருமைகளைக் காரணமாகக் காட்டி ஆன்மீகத்தில் உயர்ந்தவர்கள் என அடம் பிடிப்பது;
இ) அடிமைப் பெண்ணின் குழந்தை என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாலகனது நியாயமான கண்ணியத்தைக் களங்கப்படுத்துவது,
இவைகள் அனைத்தும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு முற்றிலும் மாற்றமானவைகளாகும்.
இவை போன்றவைகள், அல்லது இதைப்போன்ற முடிவுகளுக்கு இட்டுச் செல்பவைகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிரானவைகளாகும். இவைகளை முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறார்கள்.
பிறப்பு, குலம், கோத்திரம், நிறம், மொழி ஆகியவற்றைக் காரணமாகக் கொண்டு மனிதனை மனிதன் அடிமைப்படுத்தினாலும் அநீதியை எதிர்த்து போராட வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். இவற்றின் அடிப்படையில் இறைவன் எந்த ஏற்றத் தாழ்வுகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.