ஒரு சிலருக்கு தெளிவு ஏற்பட்டாலும் அவரை ஷைத்தான் இவ்வாறு குழப்புவான். ‘தலைமுறை தலைமுறையாக நமது முன்னோர்களும், தாய், தந்தையரும் நல்லடியார்களிடம் பிரார்த்தித்து வந்திருக்கிறார்களே, அவர்கள் செய்தவை அத்தனையும் தவறானவையா? அவர்கள் எல்லோரும் பாவிகளா? அவர்கள் எல்லோரும் நரகத்திற்குத்தான் செல்வார்களா? என்று ஷைத்தான் சிலரின் உள்ளத்தில் முன்னோர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி, அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீதுகள் கூறியவற்றை உதாசீனப்படுத்தி விட்டு, அவர்களின் முன்னோர்களுடைய பாதையை பின்பற்றுமாறு செய்து விடுகிறான். முன்னோர்கள் செய்தது எல்லாம் மார்க்கமாகி விடாது. குர்ஆன், ஹதீஸ் கூறுவதே மார்க்கமாகும். இவ்வாறு முன்னோர்கள் செய்தார்களே, நாமும் செய்தால் என்ன தவறு என்று கேட்பவர்களுக்கு அல்லாஹ்வே தன்னுடைய திருமறையில் பதிலளிக்கின்றான்:
“மேலும், அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்த)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?” (அல்குர்ஆன்: 2:170)
இந்த வசனமும் இன்னும் ஏராளமான வசனங்கள், பார்க்கவும்: 7:27-30, 31:21, 37:69-70, 43:22-24, 10:78, 21:52-54, 11:87, 14:10, 11:109, 5:104. போன்ற யாவும் நாம் நமது மூதாதையர்களையோ, தாய், தந்தையரையோ பின்பற்றக்கூடாது என்றும் அல்லாஹ்வின் திருமறையும், அவனுடைய தூதரின் வழிகாட்டுதலையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. எனவே எங்களின் முன்னோர்கள் நல்லடியார்களிடம் பிரார்த்தித்தார்கள், அதனால் நாங்களும் அவர்களிடம் பிரார்த்திக்கிறோம் என்று எவரேனும் கூறினால், அது நிச்சயமாக வழிகேடேயாகும். ஏனென்றால் அவர்கள் சென்றுபோன சமுதாயம். அவர்கள் செய்தது பற்றி நீங்கள் வினவப்பட மாட்டீர்கள் என்பது அல்லாஹ்வின் கூற்றாகும்.
மேற்கூறப்பட்ட இறைவசனங்கள் எல்லாம் முஸ்லிம்களான நம்மைக் குறித்து இறக்கப்படவில்லை. மாறாக (காஃபிர்கள்) நிராகரிப்பவர்கள் சம்பந்தப்பட்டது – என்று நினைப்போமேயானால் உண்மைதான். ஆனால், இறைவன் தன் அருள்மறையில் நமக்கு முந்தைய சமூகத்தார்களின் வரலாறுகளையும், அவர்கள் (காஃபிர்களாக) நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தினால் அவர்களை அழித்த நிகழ்வுகளையும் கூறுவதோடு அல்லாமல் பின்வருமாறும் கூறுகிறான்.
“இன்னும், நாம் அதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும் பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்” (அல்குர்ஆன்: 2:66)
:நிச்சயமாக அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது….” (அல்குர்ஆன்: 12:111, இன்னும் பார்க்க: 3:13, 29:43, 43:56, 59:2, 79:26.)
போன்ற வசனங்களின் மூலம் முஸ்லிம்களான நாமும் அதுபோன்ற தவற்றை இழைத்து விடக்கூடாது என்று நம்மை எச்சரிக்கின்றான்! நாம் படிப்பினை பெற வேண்டாமா?
ஆய்வு தொடரும்.