தவாஃப் (வலம் வருதல்)
மாதவிடாய்ப்பெண் கஃபத்துல்லாவில் பர்லான, நபிலான வலம் வருவது ஹராமாகும். அப்படி வலம் வந்தால் அது கூடாது. ஸபா, மர்வாவிற்கிடையே ஓடுவது, அரபாவிலே தங்குவது, முஸ்தலிபா, மினாவில் இரவு தங்குதல், கல் எரிதல் இவைகளும், இவைகளல்லாத ஹஜ், உம்ராவின் ஏனைய எல்லாச் செயல்களும் அவளுக்கு ஹராமல்ல. இதன் பிரகாரம் ஒருபெண் சுத்தமானவளாக வலம் வந்து முடித்த பின்னாலோ, அல்லது ஸபா, மர்வாவிற்கிடையே ஓடிக் கொண்டிருக்கும் போதோ, மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அதில் எந்த பிரச்சனையும் கிடையாது.
பள்ளியில் தங்குதல்.
மாதவிடாய்ப்பெண் பள்ளியில் தங்கியிருப்பது ஹராமாகும்.
உடலுறவு கொள்ளுதல்.
கணவன் மாதவிடாய்ப் பெண்ணான தன் மனைவியிடம் உடலுறவு கொள்வதும், அவள் அதற்காக சம்மதிப்பதும் ஹராமாகும். உடலுறவைத் தவிர தனது உணர்வை முறித்து விடக்கூடிய ஏனைய முத்தமிடுதல், சேர்த்துக் கட்டுதல், மர்ம உறுப்பு அல்லாததில் சுகம் அனுபவித்தல் போன்றவை அவனுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தலாக் (விவாக விலக்கு).
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் தன் மனைவியை கணவன் தலாக் சொல்வது ஹராமாகும். மாதவிடாயாக இருக்கும்போது தலாக் சொல்லி விட்டால் அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும் அவன் மாறு செய்து விட்டான். இந்நேரத்தில் அவளை அவன் மீட்டிக் கொள்வது கட்டாயமாகும். பிறகு அவன் விரும்பினால் அவளைத் தலாக் சொல்லிக் கொள்ளலாம். அவளுக்கு இரண்டாம் முறை மாதவிடாய் ஏற்படும்வரை விட்டுவிடுவது மிகவும் நல்லது. அவள் சுத்தமாகி விட்டால் அவன் விரும்பினால் அவளை தன்னுடன் வைத்துக் கொள்ளவும் செய்யலாம்.
குளிப்புக் கடமை.
மாதவிடாய்ப்பெண் சுத்தமாகி விட்டால் உடம்பு அனைத்தையும் சுத்தப்படுத்திக் குளிப்பது கடமையாகும். தலைமுடியின் அடிப்பாகத்திற்குத் தண்ணீர் சேராதென பயப்படுமளவிற்கு அழுத்தமான முறையில் கட்டப்பட்டிருந்தாலே தவிர அவளின் தலைமுடியை அவிழ்த்து விடுவது கட்டாயமாகாது. மாதவிடாய்ப்பெண் தொழுகைக்குரிய நேரத்திலேயே சுத்தமாகி விட்டால் தொழுகையை அதற்குரிய நேரத்தில் அடைந்து கொள்வதற்காக விரைவாக குளிப்பது கட்டாயமாகும்.