ஆழ்கடலின் இருள் & கடலின் உள் அலைகள்

கேள்வி எண்: 12. இன்றைய நவீன கருவிகளின் உதவியோடு கடலில் ஆராய்ச்சி செய்வது போன்று கடல் ஆய்வு செய்திராத அந்த நாட்களில் இறைவனால் இறக்கியருளப்பட்ட விஞ்ஞான உண்மையான “கடலின் அதிக ஆழத்தில் ஒரே இருள்மயமாக இருக்கும்” என்ற திருமறை வசனம் எது?

பதில்: “….அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும். அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை. அதற்கு மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை” (அல்குர்ஆன்: 24:40)

சிறு விளக்கம்: குர்ஆனும் நவீன விஞ்ஞானமும் என்ற தலைப்பில் உறையாற்றிய இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசனின் தலைவர் டாக்டர் ஜாகிர் நாயக் இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்.

கடலியல் (Marine Geology) துரையில் வல்லுனராக இருக்கும் பேராசிரியர் துர்காரோ என்பவர் ஜித்தாவிலுள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரிடம் அல்குர்ஆன் 24:40 வசனத்தைக் கொடுத்து அவரின் கருத்துக்களைக் கூறுமாறு கேட்டதற்கு பின்வருமாறு விளக்கம் கூறினார். குர்ஆனின் இந்த வசனம் சாதாரணக் கடலைப்பற்றி குறிப்பிடவில்லை. இது பெருங்கடலின் ஆழ்கடலைப் பற்றி குறிப்பிடுகின்றது. இன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் பெருங்கடல்களின் அதிக ஆழத்திற்கு சென்ற நம்மால் அங்கே கும்மிருட்டாக இருப்பதைக்காண முடிகிறது. ஏனென்றால் அவ்வளவு ஆழத்திற்கு மனிதனால் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற சாதனங்களின் துணையில்லாமல் செல்ல முடியாமல் இருந்தது. எவ்வித உபகரணமும் இல்லாமல் மனிதனால் 20 அல்லது 30 மீட்டர் ஆழத்திற்கு கீழ் செல்ல முடியாது. அதற்கும் கீழே சென்றால் அவன் இறந்து விடுவான். அப்படியிருக்க ஆழ்கடல் என்று சொல்லப்படக்கூடிய 200 அடி ஆழத்திற்கும் கீழே மனிதன் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற அதிநவீன சாதனங்களின் துணையில்லாமல் செல்ல முடியாது.

இன்றுள்ள நவீன கருவிகளின் துணையுடன் ஆழ்கடலை ஆராய்ந்தபோது அவைகள் இருட்டாக இருப்பதற்கு இரு காரணங்களைக் கூறுகின்றனர். முதலாவது காரணம் என்னவெனில், சூரிய ஒளியில் உள்ள நிறங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கடல் நீரில் உட்கிரகித்துக் (Absorbed) கொள்ளப்படுவதுதான். சூரிய ஒளியில் வயலட், இன்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு போன்ற ஏழு நிறங்கள் இருப்பதை நாம் படித்திருக்கிறோம். இத ஆங்கிலத்தில் Vibgyor என்று கூறுவர். பேராசிரியர் துர்காரோ கூறுகையில், சூரிய ஒளி பெருங்கடலின் மேற்பரப்பிலிருந்து 15 முதல் 20 மீட்டர் ஆழத்திற்கு கடந்து வருகையில் அந்த ஒளியில் இருக்கும் சிவப்பு நிறம் தண்ணீரில் உட்கொள்ளப்படுகின்றது. ஒரு மனிதன் கடல் மட்டத்திலிருந்து 30 மீட்டர் ஆழத்திற்குச் சென்றபின் அவனுடைய காயங்களிலிருந்து இரத்தம் வழிந்தால் அதை அவனால் பார்க்கக்கூட முடியாது. ஏனென்றால் சிவப்பு நிறம் 30 மீட்டர் ஆழத்திற்கு வருவது கிடையாது. மேலும் அந்த சூரிய ஒளி கடலின் ஆழத்திற்குச் செல்ல செல்ல 30 முதல் 50 மீட்டர் ஆழத்தில் சூரிய ஒளியிலுள்ள ஆரஞ்சு நிறம் உட்கிரகித்துக் கொள்ளப்படுகின்றது. சூரிய ஒளி மேலும் கடலின் ஆழத்திற்குச் செல்லும்போது 50 முதல் 100 மீட்டர் ஆழத்தில் மஞ்சள் நிறமும், 100 முதல் 200 மீட்டர் ஆழத்தில் பச்சை நிறமும், 200 மீட்டருக்கும் கீழுள்ள கடலின் ஆழத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நீலம், இன்டிகோ மற்றும் வயலட் போன்ற நிறங்களும் உட்கிரகித்துக் கொள்ளப்படுகின்றன. எனவே கடலில் அடுக்கு அடுக்குகளாக காணப்படும் இருள்கள் சூரிய ஒளியின் நிறங்கள் அந்த அடுக்குகளில் உட்கிரகித்துக் கொள்ளப்படுவதாலேயாகும்.

ஆல்கடல் இருட்டாக இருப்பதற்கு மற்றொரு காரணம் சூரியஒளி கடலின் ஆழத்திற்குச் செல்லாமல் தடுக்கும் தடுப்புகளாகும். சூரியஒளி மேகத்தின் மீது படும்போது அம்மேகத்தினால் அவ்வொளி தடுக்கப்பட்டு சிதறடிக்கப்படுகின்றது. இதனால் மேகத்திற்கு கீழே இலேசான இருள் ஏற்படுகின்றது. பின்னர் சிதறடிக்கப்பட்ட அந்த சூரியஒளி, கடலின் மேற்புறமுள்ள அலைகளில் மோதுகின்றது. இது இரண்டாவது தடுப்பாகும். இந்த அலைகளிலிருந்து பிரதிபலிக்கப்படாத ஒளியானது கடலின் உள்ளே செல்கின்றது. அங்கேயும் ஆழ்கடல் அலைகள் இருப்பதால் அவைகளும் தடுப்பாகச் செயல்படுகின்றன. கடலின் உட்புறம் காணப்படும் இந்த Internal Waves எனப்படும் உள் அலைகளைப்பற்றி தகவல் கி.பி. 1900-க்குப் பின்னரே நமக்குத் தெரிய வந்தது. ஆனால், குர்ஆன் இந்த உள் அலைகளைப்பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறி விட்டது.

இந்த ஆழ்கடலின் இருட்டில் ஒருவன் தன் கையை நீட்டினால் அதைக்கூட அவன் பார்க்க முடியாது என்று திருமறை கூறிய அதே விளக்கத்தையே இன்றைய விஞ்ஞானிகளும் கூறுவது மிகவும் ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் மிகத் தூய்மையானவன்)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.

0 Responses to ஆழ்கடலின் இருள் & கடலின் உள் அலைகள்

  1. jazi says:

    that was good and every and the quran was every nice