குறைத்து தொழுதல்
1. ஒருவர் தனது ஊரிலிருந்து நாற்பத்தெட்டு மைல்கள் அல்லது அதற்கு மேலே தொடர்ந்து செல்லும் எண்ணத்தோடு பயணம் செய்யும்போது அவர் நான்கு ரக்அத்துகள் கொண்ட தொழுகைகளை இரண்டு ரக்அத்துக்களாகக் குறைத்து தொழுது கொள்ள வேண்டும். இந்த சலுகை லுஹர், அஸர், இஷாத் தொழுகைகளுக்குப் பொருந்தும். பஜ்ரு, மஃரிப் ஆகிய தொழுகைகளை குறைத்துத் தொழ முடியாது.
2. அவர் சேர வேண்டிய இடத்தை அடைந்த பிறகும் அங்கு 15 நாட்களுக்குக் குறைவாக தங்கும் எண்ணம் இருந்தால் இதே சலுகையை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் வழக்கம் போல முழுமையாகத் தொழுகையை நிறைவேற்றலாம்.
3. இந்தச் சூழ்நிலைகளில் ஒருவன் பஜ்ருத் தொழுகையின் சுன்னத் தொழுகை, வித்ருத் தொழுகை ஆகியவற்றைத் தவிர மற்ற சுன்னத் தொழுகைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை.
தொழக்கூடாத நேரங்கள்
பின்வரும் நேரங்களில் கட்டாயத் தொழுகையையோ சுன்னத் தொழுகையையோ நிறைவேற்றக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளது.
1. சூரியன் உதிக்கும் நேரம்.
2. சூரியன் நடு உச்சியில் இருக்கும் நேரம்.
3. சூரியன் அடையும் நேரம்.
4. மாதவிடாய் காலம், பிள்ளைப்பேற்றுத் தீட்டுக்காலம்.
5. உடல் தூய்மை இல்லாத நேரங்கள்
தாமதமான தொழுகைக்கு ஈடு செய்தல் (களா)
1. ஆண்களும், பெண்களும் உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். நியாயமான காரணங்களின்றி தொழுகையை தாமதப்படுத்துவது தண்டனைக்குரிய பாவமாகும்.
2. பிள்ளைப்பேற்றுத் தீட்டு இருக்கின்ற பெண்கள், புத்தி சுவாதீனமில்லாதவர்கள், தன்னுணர்வு இழந்தவர்கள் இவர்களை தவிர ஏனையவர்கள் உரிய நேரத்தில் நிறைவேற்றாது விட்ட தொழுகைகளை ஈடு செய்தல் வேண்டும்.
3. தாமதமான தொழுகையை ஈடு செய்யும்போது, குறிப்பிட்ட தொழுகையை எப்படி நிறைவேற்ற வேண்டுமோ அப்படியே நிறைவேற்ற வேண்டும். (உதாரணம்) பிரயாணத்தின்போது விடுபட்ட தொழுகையை ஈடுசெய்ய, குறைந்த ரக்அத்துகளைக் கொண்டு தொழுதால் போதுமானது. தாமதமான தொழுகைகளை வரிசைப்படி நிறைவேற்ற வேண்டும். அதாவது முதலில் விடுபட்டுப்போன தொழுகையை முதலிலும், அடுத்து விட்டுப்போன தொழுகையை இரண்டாவதாகவும் நிறைவேற்ற வேண்டும். விட்டுப்போன தொழுகைகள் அதனுடைய நாளை நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமானவைகளாக இருந்தால், அல்லது விட்டுப்போன தொழுகைகளையும் இப்பொழுது உள்ள தொழுகைகளையும் நிறைவேற்றுவதற்குப் போதிய கால அவகாசம் இல்லாவிட்டால், முதலில் இப்பொழுதுள்ள தொழுகையை நிறைவேற்ற வேண்டும். எவ்வாறாயினும் ஒவ்வொரு முஸ்லிமும் தனது தொழுகைகள் அனைத்தும் விடுபடாமல் நிறைவேற்ற வேண்டும். விட்டுப்போன தொழுகைகளை ஈடு செய்தேயாக வேண்டும்.
தராவீஹ் தொழுகை
தராவீஹ் தொழுகை ரமளான் மாதத்தின் ஒரு சிறப்பம்சமாகும். அவை இஷாத் தொழுகைக்குப் பிறகு நிறைவேற்றப்படுகின்றன. தராவீஹ் தொழுகை எட்டு முதல் இருபது ரக்அத்துகளைக் கொண்டது. இரண்டு, இரண்டு ரக்அத்துகளாக தொழப்படும். தராவீஹ் தொழுகையை கூட்டுத் தொழுகையாக வித்ருத் தொழுகைக்கு முன்னர் தொழுவது நல்லது.
தொழுகையை முறிக்கும் செயல்கள்
பின்வரும் செயல்கள் தொழுகையை முறித்துவிடும்.
1. கூட்டுத் தொழுகையில் (ஜமாஅத் தொழுகையில்) இமாமை முந்தி விடுதல்.
2. தொழுகையின்போது உண்ணுதல், பருகுதல்.
3. தொழும் பொழுது பேசுதல்.
4. கஃபாவை முன்னோக்குவதிலிருந்து வேறு திசைக்கு திரும்புதல்.
5. தொழுகையோடு தொடர்பில்லாத செயல்களைச் செய்தல்.
6. ஒளுவை முறிக்கும் செயல்கள் நிகழ்தல்.
7. தொழுகையின் இன்றியமையாத செயல்களை செய்யத் தவறுதல். அதாவது நிற்கும் நிலை, குர்ஆன் ஓதுதல், ருகூஉ, ஸுஜுது முதலியவைகளை செய்யாது விடல்.
8. தொழுகையின்போது ஆண்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை மூடாதிருத்தல், பெண்களாயின் கைகள், முகம், கால்கள் தவிர உடம்பின் எப்பகுதியும் மூடப்படாதிருத்தல்.
முறிந்துபோன தொழுகையை மீண்டும் நிறைவேற்ற வேண்டும்.