கேள்வி எண்: 11. பூமியிலுள்ள மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கக்கூடிய சூரியனின் புற ஊதாக்கதிர்கள் (Ultra Violet Rays) பூமியின் மீது படாதவாறு ஓஸோன் எனும் வாயு மண்டலம் கூரையாக தடுத்துக் கொண்டிருக்கிறது. இது பற்றிய சத்தியத் திருமறையின் கூற்றாகிய “வானத்தை பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம்” என்ற வசனம் திருமறையில் எங்குள்ளது? மேலும் 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் செயற்கை கோள்களில் பொறுத்தப்பட்ட தொலை நோக்கிகள் மூலம் (Telescpoes) கண்டுபிடிக்கப்பட்டது தான் பூமியின் ‘காந்த மண்டலம்’ (Earth’s Magnetosphere) இதைப்பற்றி குர்ஆன் ஏதேனும் கூறுகிறதா?
பதில்: ” “இன்னும் வானத்தை பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம் – எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்” (அல்குர்ஆன்: 21:32)
சிறு விளக்கம்: கேள்வி எண் 8-க்கான விளக்கத்தில் நாம், சூரியன் என்பது நாம் வசிக்கும் பூமியைவிட பல மடங்கு அளவில் மிகப்பெரிய நெருப்புப் பந்து. அதனுள்ளே மிகப்பெரிய அணு உலையே இருக்கின்றது. அதில் வினாடிக்கு 500 டன் எடையுள்ள ஹைட்ரஜன் வாயுக்கள் எரிந்து ஹீலியம் வாயுக்களாக மாறுகிறது. அதனால் படுபயங்கரமான கதிர்கள் சூரியனிலிருந்து ஆகாய வெளியெங்கிலும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது என்று படித்தோம். இந்த பிரமாண்டமான அணு உலையிலிருந்து பாய்ந்து வரும் கதிர்களுள் ‘புற ஊதாக் கதிர்களும்’ ஒன்று. இது மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கும் நாசக்கதிர்களாகும். இக்கதிர்கள் நம்மீது படுமானால் நாம் பல்வேறு கேடுகளுக்கு ஆளாகி அழிவைச் சந்திக்க நேரிடும். சரி அப்படியானால் சூரியனிலிருந்து ஆகாயமெங்கிலும் பாய்ந்தோடிச் செல்லும் இந்த அழிவுக்கதிர்கள் நமது பூமியைத் தாக்குவதில்லையே என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக கண்ணிமைக்கும் நேரம் கூட தவறாமல் பூமியைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தான் படைத்த உயிரினங்களின் மீது அளவற்ற கருணையுடைய இறைவன் அந்த அழிவுக்கதிர்கள் நம்மீது படாதவாறு தடுத்து வானத்தில் ஓர் கூரையை ஏற்படுத்தி இருக்கிறான். இந்தக்கூரை என்னவென்று பார்ப்போம்.
நமது கூரையைச் சுற்றி மேற்பரப்பில் 500 கி.மீ. உயரம் வரை பரவியிருக்கும் இந்த காற்று மண்டலம் (Atmosphere) பல்வேறு அடுக்குகளாக (Layers) அமைந்துள்ளது. இந்த காற்று மண்டலத்தில் நைட்ரஜன் என்ற வாயு பெருமளவும் 78.03%, ஆக்ஸிஜன் 20.99%, ஆர்கான் 0.94%, கார்பன்-டை-ஆக்ஸைடு 0.03%, ஹைட்ரஜன் 0.01% போன்ற வாயுக்களும், இதைத்தவிர நீராவி மற்றும் தூசிகள் போன்ற பொருட்களும் கலந்துள்ளன. இந்த காற்றுவெளி மண்டலத்தின் முக்கிய பணிகள் என்னவெனில்:
இதில் உள்ள ஆக்ஸிஜன் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு சுவாசக்காற்றாக இருக்கிறது.
இதில் உள்ள நைட்ரஜன் பூமியில் உள்ள அனைத்து தாவரங்களும் உயிர்வாழ, வளர உதவுகிறது.
கார்பன்-டை-ஆக்ஸைடு தாவர வர்க்கங்கள் உயிர்வாழ இன்றியமையாததாக இருக்கிறது.
இதில் உள்ள ஓஸோன் என்பது சூரியனிலிருந்து பாய்ந்து வரும் புற ஊதாக்கதிர்களை பூமியைத் தாக்காவண்ணம் காக்கின்றது.
ஓஸோன் வாயு மண்டலம் என்பது, பூமியிலிருந்து இரண்டாவதாக உள்ள Straposphere என்ற அடுக்கில் 16 கி.மீ. வரை பரவியுள்ள மெல்லிய அடுக்காகும். இதற்கு Ozonosphere என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஓஸோன் என்பது பிராண வாயுவின் மூன்று அணுக்களால் ஆன மூலக்கூறு (Molecule) அடங்கிய வாயுவாகும். இந்த வாயு சூரியனிலிருந்து கணநேரம் கூட தவறாமல் பூமியை நோக்கி பாய்ந்து வரும் நாசக்கதிர்களான புற ஊதாக்கதிர்களை உட்கிரகித்துக் கொண்டு, பூமிக்கு ஒரு கூரையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:-
“-இன்னும் வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம் – எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்” (அல்குர்ஆன்: 21:32)
இந்த வசனத்தில் பாதுகாக்கப்பட்ட கூரை எனக் கூறப்படுகிறதே, அப்படியானால் இந்தக் கூரைக்கு ஏதேனும் ஆபத்து காத்திருக்கிறதா என்று கேட்டால் ஓஸோன் என்ற கூரைக்கும் ஆபத்துகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். அவைகளைப் பற்றிப் பார்போம்.
ஓஸோன் வாயுவின் மூலக்கூறு O3 என்பது தாமாகவே சிதைந்து O2 (ஆக்ஸிஜன்) என்னும் மூலக்கூறு ஆக மாறும் தனமையுடையது. இதனால் இந்த ஓஸோன் வாயு மண்டலத்தில் ஏற்படும் O3 வாயுவின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக இறைவன் அதற்கு மாற்று ஏற்பாட்டைச் செய்து அதனைப் பாதுகாக்கின்றான். எப்படியென்றால் பூமியில் எந்த நேரத்திலும் ஏற்படும் இடி, மின்னல்கள் இந்த ஓஸோன் வாயுவை உற்பத்திச் செய்து புதுப்பித்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் மிகத் தூயவன்) இடி, மின்னலுக்கு இப்படி ஒரு ஆற்றலை அல்லாஹ் தந்திருக்கிறான். இடி, மின்னலைக் கண்டு அச்சப்படும் நாம், அதன் மூலம் நமக்கு கூரையாக இருக்கக்கூடிய ஓஸோன் மண்டலத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது என்ற ஆதரவும் ஏற்படுவதால் அந்த இடி, மின்னலின் மீது ஒருவித ஆசையும் ஏற்படுகின்றது. அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:-
“அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை – அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன. நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன” (அல்குர்ஆன்:30:24)
அடுத்ததாக ஓஸோன் மண்டலத்திற்கு மட்டுமல்லாது, நமது பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்திற்கே வரும் ஆபத்து என்னவெனில், காற்று மண்டலத்திற்கு அப்பாலுள்ள எல்லையற்ற ஆகாய வெற்றுவெளியில் இந்த காற்று மண்டலம் முழுவதுமே சிதறுண்டு போகும் அபாயமாகும். இதுநாள் வரையிலும் பூமியின் புவியீர்ப்பு விசையே நமது காற்றுமண்டலத்தை அவ்வாறு சிதறுண்டு போய்விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானிகள் சூரியனின் வெப்பக்கதிர்களால் மிக அதிக அளவில் வெப்பமடையும் இந்த வாயுக்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சக்தி பூமியின் ஈர்ப்புச் சக்திக்குக் கிடையாது என்கின்றனர். அப்படியானால் நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பிராணவாயுவையும் நமக்கு கூரையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓஸோன் வாயு மண்டலத்தையும் இந்த பரந்த ஆகாய வெற்றுவெளியில் சிதறுண்டு போய்விடாமல் பாதுகாக்கும் சக்தி எது என தேடிய விஞ்ஞானிகளுக்கு புலப்பட்டது தான் பூமியின் காந்த மண்டலம் (Earth’s Magnetosphere) 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினால் விண்ணில் செலுத்தப்பட்ட தொழில்நுட்பம் வாய்ந்த தொலைநோக்கிகளினாலும், இன்னும் பல அரிய கருவிகளினாலும் ஆராந்ததில், இந்த வாயு மண்டலத்தை, இந்த பிரபஞ்சத்தின் வெற்றுவெளியில் சிதறாமல் காப்பது பூமியின் மேற்பரப்பில் 70,000 கிலோ மீட்டர் வரை பரவியிருக்கும் பூமியின் காந்த மண்டலமே என்று கண்டறிந்தனர். இதை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
இந்த பிரபஞ்சம் ஈர்ப்பு விசை மற்றும் காந்த விசைப் போன்ற பல சக்திகளைக் கொண்டுள்ளது. அல்லாஹ்வும் தன் திருமறையில் கூறுகிறான்:-
“மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றல் உடையோராவோம்” (அல்குர்ஆன்:51:47)
சூரியன் அதிவேகத்தில் சுழல்வதால் அதிலிருந்து ஏற்படும் காந்தசக்தி ஆகாய வெளியெங்கிலும் பரவியுள்ளது. சூரியனின் காந்த சக்தி எல்லைக்குள் இருக்கும் பூமியும் அதிவேகத்தில் சுழல்வதனால் பூமியைச் சுற்றிலும் காந்தசக்தி ஏற்படுகிறது. இது பூமியிலிருந்து உயரே செல்ல செல்ல குறைந்து கொண்டே வந்து இறுதியில் ஒரு நிலையான காந்தசக்தியைக் கொண்டிருக்கும். பூமியின் காந்தசக்தியின் எல்லைக்கப்பால் இருப்பது சூரியனின் காந்தசக்தியாகும். சரி இனி இந்த காந்தசக்தி பூமியின் காற்று மண்டலத்தை எவ்வாறு பாதுக்காக்கின்றது எனப் பார்ப்போம்..
காற்று மண்டலத்தில் உள்ள வாயுக்களின் அணுக்கள் சூரியனின் வெப்பக்கதிர்களால் தாக்கப்படுவதோடு அல்லாமல், சூரியனின் ஒளிக்கற்றைகளிலிருந்து மின்சாரத்தையும் பெற்று மின்னூட்டம் பெற்ற அணுக்களாகின்றன. (Electrically Charged Particles) மின்னூட்டம் பெற்ற காற்று மண்டலத்தின் இந்த துகள்களை பூமியின் சக்திவாய்ந்த காந்த மண்டலம் தன்வசம் இழுத்து அவைகள் அவைகள் பரந்து விரிந்த ஆகாய வெற்றுவெளியை நோக்கிச் சென்று சிதறுண்டு விடாமல் பாதுகாத்துக் கொள்கிறது. அல்லாஹ்வுக்கு நன்றிகூர்ந்து ச்ந்தித்துப் பாருங்கள்:- “இன்னும் வானத்தை பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம்” என்று கூறி நம்மை பாதுகாக்கும் கருணையுள்ள இறைவனை விட்டுவிட்டு பெரியவர்களையும், வலியுல்லாக்களையும் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்வது அறிவீனமன்றோ?
அல்குர்ஆன் 21:32 வசனத்தில் பொதிந்துள்ள மற்றுமொரு சான்றினைப் பார்ப்போம். இந்த சூரியக்குடும்பம் உருவான காலகட்டத்தில் அவை மிகப்பெரிய நட்சத்திரம் (Parent Star) ஒன்றிலிருந்து வெடித்துச் சிதறி தோன்றியது. அப்போது சூரியன் மற்றும் அதைச் சுற்றிவரும் கோள்களுடன் கோடிக்கணக்கான விண்கற்களும் தோன்றின. அக்கற்களும் சூரியனின் ஈர்ப்புச்சக்திக்கு உட்பட்டு சூரியனைச் சுற்றி வருகின்றன. அவைகளில் சிறியதும் பெரியதுமாக சில மில்லி மீட்டர் முதல் பல கிலோ மீட்டர் விட்டமுடைய கற்கள் இருக்கின்றன. இவைகளில் பெரிதாக இருக்கும் கற்களுக்கு (Asteroids) ஆஸ்டெராயிட்ஸ் என்றும், சிறிய கற்களை (Meteoroids) மீட்டியராய்ட்ஸ் என்றும் அழைக்கிறார்கள். இவைகள் ஒரு பெரும் கூட்டமாக செவ்வாய் கிரகத்திற்கும், ஜுபிடர் என்ற கிரகத்திற்கும் இடையில் ஒரு பெல்ட்டைப்போல இருந்து கொண்டு சூரியனைச் சுற்றி வருகின்றன. இதற்கு ‘ஆஸ்ராயிட்ஸ் பெல்ட்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். சில நேரங்களில் இவைகளிலிருந்து சில கற்கள் விலகிச் செல்கின்றன. இவ்வாறு விலகிச் செல்லும் இக்கற்களை பூமியானது தன்னுடைய ஈர்ப்பாற்றலால் தன் வசம் இழுப்பதால் அக்கற்கள் பூமியை நோக்கி மிக வேகமாக வருகின்றன.
மேலும் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படக்கூடிய Comets சென்ற பாதைகளில் ஏராளமான சிறுசிறு கற்கள் கோடிக்கணக்கில் காணப்படுகிறது. பூமி சுழன்று கொண்டே வால்நட்சத்திரம் கடந்து சென்ற பாதைகளில் நகரும்போது அப்பாதைகளில் உள்ள கோடிக்கணக்கான துகள்களும், கற்களும் பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு ஷவரிலிருந்து கொட்டும் நீரைப்போல பூமியை நோக்கிக் கொட்டுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் மீட்டியர் ஷவர் என்று (Meteor Shower) கூறுவர்.
இவ்வாறு பல வகைகளில் பூமியை நோக்கி பல கோடிக்கணக்கான கற்கள் விழுந்தவண்ணல் இருக்கின்றன. ஒரு ஆண்டிற்கு 215,000 டன் எடையுள்ள கற்கள் பூமியை நோக்கி வருவதாக கணக்கிட்டுள்ளனர். வானத்திலிருந்து கொட்டப்படும் கோடிக்கணக்கான கற்களில் ஒன்றுகூட நம்மீது விழவில்லையே? அவற்றை நம்மீது விழாமல் தடுப்பது எது? என்று ஆச்சரியத்தோடு வினா எழுப்பினால் அதற்கும் விடை தருகிறார்கள் விஞ்ஞானிகள். பூமியைச் சுற்றியுள்ள வழிமண்டலமே கூரையாக அமைந்து அக்கற்கள் நம்மீது விழாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. எப்படி என்கிறீர்களா?
தன் பாதையிலிருந்து விலகிய கற்கள் பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு மிக அதிக வேகத்தில் பூமியை நோக்கிப் பாய்ந்தோடி வரும்போது அவைகள் பூமியின் காற்று மண்டலத்தை கடந்து வரவேண்டியதிருக்கிறது. அதிவேகமாக வரும் கற்கள் காற்று மண்டலத்தில் உராயும்போது ஏற்படும் அளவுக்கதிகமான வெப்பத்தினால் அக்கற்கள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஒரு சில கற்களே பாதி எரிந்தும் பாதி எரியாத நிலையிலும் பூமியை வந்தடைகின்றன. இவ்வாறு பூமியில் விழும் கற்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களின் ஆய்விற்கு பெரிதும் உதவுகின்றன. இப்போது நினைத்துப் பாருங்கள். வருடத்திற்கு 215,000 டன் எடையுள்ள கற்கள் பூமியின் மீது பாய்ந்தோடி வந்து கொண்டிருக்கும் நிலையில் அவைகளிலிருந்து இறைவன் நம்மைக் காப்பதற்காகவும் வளிமண்டலம் எனும் வானத்தை கூரையாக படைத்திருக்கின்றான். மேலும் இறைவன் கூறுகிறான்.
“மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை” (அல்குர்ஆன்: 44:38)
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.