இது அறியாமையினால் கூறப்படும் அர்த்தமற்ற வாதமாகும். இதுபோல் கேட்பது புதிதல்ல. ஸஹாபா பெருமக்கள் காலத்திலேயே இவ்வாறு கேட்கப்பட்டு அதற்கான பதிலும் கிடைத்து விட்டது. கீழ்கண்ட ஹதீஸை கவனியுங்கள்:
‘ஒருமுறை (எனது கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் எனது கழுத்தில் கருப்பு நூல் கயிற்றைக் கண்டு இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நான் இது எனக்காக மந்திரிக்கப்பட்ட கயிறு என்றேன். உடனே அவர்கள் அதைப் பிடித்து அறுத்து விட்டு நீங்களோ (நபித் தோழராகிய) அப்துல்லாஹ்வின் குடும்பத்தார். ஷிர்க்கை விட்டும் மிக அதிகமாக ஒதுங்கியவர்கள். ‘நிச்சயமாக மந்திரித்தல், கஷ்ட நிவர்த்திக்காக கழுத்தில் மணியைக் கோர்த்துக் கட்டுதல், கணவன், மனைவிக்கிடையே நட்பு நீடிப்பதற்காக மந்திர வேலை செய்தல் ஆகியவை ஷிர்க்கின்பால் சேர்க்கக் கூடியவையாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என்றார்கள். அப்போது நான் நீங்கள் என்ன இவ்வாறு கூறுகிறீர்கள்? எனது கண்ணில் வலி ஏற்பட்டு கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. நான் ஒரு யூதரிடம் சென்று அதற்காக அவர் மந்திரித்த போது நீர் வடிதல் நின்று விட்டதே! என்றேன். அவர்கள் இது ஷைத்தானுடைய வேலையாகும். அவன் தனது கையால் கண்களை இடித்துக் கொண்டிருக்கிறான். மந்திரிக்கும் போது அகன்று கொள்கிறான். நீர் இதற்காக நபி (ஸல்) அவர்கள் ஓதியது போன்று ஓதினாலே போதும் என்றார்கள்’ அறிவிப்பாளர்: ஜைனப் (ரலி) நூல்: அபூதாவூத் (3385), இப்னுமாஜா (3521), அஹ்மத் (3433).
நாம் பிற சமுதாயத்து மக்களிடம் அவர்கள் குலதெய்வம் என்று ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தெய்வத்தை வழிபடுவதைக் காணலாம். அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், எங்கள் குலதெய்வம் சக்தி வாய்ந்தது. அது நாங்கள் கேட்பதையெல்லம் கொடுக்கிறது. அதனால்தான் நாங்கள் அதை தொடர்ந்து வழிபடுகிறோம் எனக்கூறுவர். இன்னும் சிலர் அத்தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக அத்தெய்வங்களின் உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கைகளைச் செலுத்துவர். அவர்கள் கூறுவது போன்று அவர்கள் வேண்டிக் கொண்டவைகளில் சில நடைபெறுவதாக தோன்றுவதால் தான் அவர்கள் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். இதைப்போலவே நம் சமுதாயத்து மக்களில் சிலர் அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப பிடித்தமான அவ்லியாக்களை எடுத்துக் கொண்டு அவர்களை தங்களின் குல அவ்லியாவாக? ஆக்கி வைத்துக் கொள்கின்றனர். பிற சமுதாயத்தவர் கூறுவதைப்போல இந்த அவ்லியாக்களும் எங்களின் தேவைகளையெல்லாம் நிறைவேற்றித் தருகின்றனர் எனக் கூறுகின்றனர். நிச்சயமாக இவைகள் எல்லாம் ஷைத்தானின் தீய சூழ்ச்சிகளாகும். அந்த அவ்லியாக்களிடம் நேர்ச்சை செய்தால் நிறைவேறுவதாக தோன்றுவது போல, பிற சமுதாயத்து வழிபாட்டுத் தலங்களிலும் நேர்ச்சை செய்தாலும் தான் அவர்களுக்கு சில நாட்டங்கள் நிறைவேறுவதாக தோன்றுகின்றன. அதற்காக அங்கேயும் செல்வார்களா?
அல்குர்ஆன் (18:39) வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்: “….அல்லாஹ் நாடியதே நடக்கும். அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை….” நமக்கு நடக்கும் நல்லவைகளும் கெட்டவைகளும் அல்லாஹ்வின் நாட்டபடியே நடக்கின்றன என்று நாம் நம்பிக்கை கொள்வோமானால் இணைவைக்கும் இதுபோன்ற செயல்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவான்.
ஆய்வு தொடரும்.