ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-56)

56. அந்த நபி உண்மை பேசுமாறு ஏவுகிறார்!

அபூ ஸுப்யான் (ரலி) அவர்கள் ஹிர்கல் மன்னனின் கதை தொடர்பான தமது நீண்ட செய்தியில் அறிவிக்கிறார்கள்: ‘உங்களுக்கு அவர் அதாவது நபிகளார் (ஸல்) அவர்கள் எதனை ஏவுகிறார்? என்று ஹிர்கல் மன்னர் கேட்டார். நான் சொன்னேன்: அவர் கூறுவது இதுதான்:

அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள். வேறெந்தப் பொருளையும் அவனுக்கு இணையாக்காதீர்கள். மேலும் உங்கள் மூதாதையர் சொல்வதை விட்டுவிடுங்கள். மேலும் தொழுகை, உண்மை, பத்தினித்தனம், பந்தபாசம் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறும் எங்களுக்கு அவர் ஏவுகிறார்!’ (புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

நபிகளார் (ஸல்) அவர்களைப் பற்றி தமக்கும் ஹிர்கல் மன்னனுக்கும் நடந்த உரையாடலை இங்கு நினைவு கூர்கிறார் அபூ ஸுப்யான் (ரலி) அவர்கள்! அப்பொழுது அவர் முஸ்லிமாக இல்லை. அவர் இஸ்லாத்தை ஏற்றது பின்னாட்களில் தான்! அதாவது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கும் மக்கா வெற்றிக்கும் இடைப்பட்ட காலத்தில் தான் அபூ ஸுப்யான் இஸ்லாம் மார்க்கம் ஏற்றார்!

ஹிஜ்ரி 6 ம் ஆண்டு ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற பிறகு நபி (ஸல்)அவர்கள், இஸ்லாத்தை ஏற்குமாறு அண்டை நாடுகளின் மன்னர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதன்படி ரோம் நாட்டு மன்னர் ஹிர்கல் என்பாருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது! அதனைப் படித்துப் பார்த்த பிறகே நபிகளார் (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்கும் எண்ணம் ஹிர்கல் மன்னருக்கு வந்தது!

மக்காவாசியான அபூஸுப்யான் அப்பொழுது வியாபாரம் தொடர்பாக ஷாம் தேசம் வந்திருந்தார். அவருடன் குறைஷிகளின் வாணிபக் கூட்டத்தினர் சிலரும் இருந்தனர். அதே காலகட்டத்தில் ஜெரூஸலம் வருகை தந்த ஹிர்கல் மன்னர், பைத்துல் முகத்தஸில் முகாமிட்டிருந்தார். ஹிஜாஸ் பகுதியிலிருந்து அரபுகள் சிலர் வந்திருப்பதைக் கேள்விப்பட்டதும் அந்த அரபுகளிடம் நபிகளார் (ஸல்)அவர்களைப் பற்றி விசாரிக்கலாமெனக் கருதி அவர்களை அழைத்து வருமாறு மன்னர் கட்டளையிட்டார்! அதன்படியே அபூ ஸுப்யானும் அவருடனிருந்த அரபுகளும் அரச தர்பாருக்கு வந்தனர்.

நபிகளாரைக் குறித்து பல கேள்விகளை அபூ ஸுப்யானிடம் கேட்டார் மன்னர்!. நபியவர்களின் பாரம்பரியம், குணவொழுக்கம், அவர்களின் அழைப்பேற்று இஸ்லாம் மார்க்கம் தழுவும் மக்களின் நிலை, அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு அளிக்கும் கண்ணியம் ஆகியவை பற்றி விசாரித்தார்!

முந்தைய காலத்தில் இறக்கியருளப்பட்ட தௌராத் – இன்ஜீல் போன்ற வேதங்களை ஹிர்கல் மன்னன் கற்றிருந்ததால் நபிகளார் பற்றி அபூ ஸுப்யான் எடுத்துரைத்த ஒவ்வொரு விஷயத்தின்போதும், முந்தைய வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட நபி இவர்தான் எனத் தெரிகிறது என்று கூறிக் கொண்டிருந்தார்! அப்படி நபி(ஸல்) அவர்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் தெரிவித்த ஹிர்கல் மன்னர் இஸ்லாத்தை ஏற்றாரா என்றால் அதுதான் நிகழவில்லை! அதுதான் மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்! ஆட்சியதிகாரத்தின் மீதான மோகம் அவரை ஆட்கொண்டிருந்தது! உண்மையை ஒப்புக்கொண்டு இஸ்லாத்தை ஏற்கவிடாமல் அவரைத் தடுத்து விட்டது அதுவே!

ஆயினும் ஹிர்கல் மன்னன் – அபூ ஸுப்யான் உரையாடலின் மூலம் நபிகளாரின் தூதுத்துவம் உண்மையானதே என்பதற்கான உறுதிமிக்க பல சான்றுகள் உலகிற்குக் கிடைத்துள்ளன! அழகிய பல அறிவுரைகளையும் அது உள்ளடக்கியுள்ளது!

‘அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள்., வேறெந்தப் பொருளையும் அவனுக்கு இணையாக்காதீர்கள்’

நபிகளாரின் போதனைகள் குறித்து அபூ ஸுப்யான் எடுத்துரைத்த முதலாவதும் முக்கியமானதுமானது இதுதான்! அல்லாஹ் அல்லாத எவரையும் எந்தப் பொருளையும் வணங்காதீர்கள் என்பதுதான்! மலக்கையும் நபியையும் கடவுளெனக் கருதக்கூடாது. சூரியனையும் சந்திரனையும் கல்லையும் மண்ணையும் செடியையும் கொடியையும் – எது ஒன்றையும் வழிபடக் கூடாது! வணக்க வழிபாட்டை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டும்! இந்த ஏகத்துவக் கொள்கையைத்தான் உலகில் தோன்றிய இறைத்தூதர்கள் அனைவரும் போதித்தார்கள்! குர்ஆன் ஓரிடத்தில் கூறுகிறது:

‘உமக்கு முன்னர் நாம் அனுப்பிய எந்தத் தூதரிடத்திலும் – நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே என்னையே நீங்கள் வழிபட வேண்டும் என்றே வஹி மூலம் நாம் அறிவித்திருந்தோம்! (21 : 25)

‘மேலும் உங்கள் மூதாதையர் சொல்கிற கருத்துகளை விட்டு விடுங்கள்’

இது, சத்தியத்தைப் பகிரங்கப்படுத்தும் தெளிவான- துணிவான போக்கு மட்டுமல்ல மனிதகுலச் சீர்திருத்தத்திற்கான அடிப்படையே இதுதான்! இதோ! அனைத்திற்கும் முதலில் – மூதாதையர்கள் பின்பற்றி வந்த சடங்கு சம்பிரதாயங்களை விட்டொழியுங்கள் என்கிறார்கள் நபிகளார்! அவை என்ன? சிலைவணக்கமும் அது சார்ந்த சீர்கேடுகளும் மூடப்பழங்கால அநாச்சாரங்களும்தான்! சமூக வாழ்க்கையில் புற்றீசல் போல் பல்கிப் பெருகும் எல்லா அநாச்சாரங்களுக்கும் சீரழிவுகளுக்கும் மூதாதையரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் போக்குதான் மூல காரணம் என்பது பட்டவர்த்தனமான உண்மை!

அதே நேரத்தில் முன்னோர்கள் கடைப்பிடித்து வருவது இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் மேலான குணவொழுக்கங்கள் – நெறிமுறைகள் எனில் அவற்றைப் பின்பற்றலாம். பின்பற்றத்தான் வேண்டும்! அல்லாஹ் குர்ஆனில் கூறுவது போன்று:

‘அவர்கள் ஏதேனும் மானக்கேடான செயலைச் செய்தால் இப்படித்தான் எங்கள் மூதாதையர் வாழ்ந்திடக் கண்டோம் என்றும் இவ்வாறு செய்யுமாறு தான் அல்லாஹ்வும் எங்களுக்குக் கட்டளையிட்டான் என்றும் கூறுகிறார்கள்’
(7 : 28)

அல்லாஹ் அதற்கு மறுப்பளிக்கும் பொழுது கூறுகிறான்:

‘நீர் கூறும்: மானக்கேடானவற்றைச் செய்யுமாறு அல்லாஹ் ஒருபோதும் கட்டளையிடுவதில்லை! … ‘
(7 : 28)

அதாவது, மானக்கேடான, தீய செயல்கள் எப்பொழுதுமே தடை செய்யப்பட்டவைதான்! ஆனால் நல்லொழுக்கம் சார்ந்த செயல்களை மூதாதையர் செய்தால் அவை வரவேற்கப்பட வேண்டியவையே!

ஆக! நபிகளார்(ஸல்) அவர்கள் முற்காலத்து மக்கள் பாரம்பரியமாகச் செய்துவரும் சடங்கு சம்பிரதாயங்களையும் வழிகேடுகளையும் விட்டொழிக்க வேண்டுமென்று பிரத்தியேகமாகக் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.

தங்களது அழைப்பை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு! ‘தொழுகையைக் கடைப்பிடிக்குமாறு எங்களை ஏவினார்!’

மனிதனுக்கும் இறைவனுக்கும் ஓர் வலுவான தொடர்பை ஏற்படுத்தக் கூடியது தொழுகைதான்! இறைவிசுவாசிகள் யார்? இறைமறுப்பாளர்கள் மற்றும் இணைவைப்பாளர்கள் யார் யார் என்று வேறுபடுத்தும் எல்லைக்கோடே தொழுகை! மற்றொரு தடவை நபிகளார்(ஸல்) அவர்கள் அருளினார்கள்:

‘நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசப்படுத்தும் உடன்படிக்கை தொழுகையே! யார் அதை விட்டுவிடுகிறாரோ அவர் நிராகரிப்பாளராகி விட்டார்!’ (நூல்: திர்மிதி, நஸாஈ, இப்னு மாஜா)

ஓர் எடுத்துக்காட்டின் மூலம் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இரு நபருக்குச் சொந்தமான இரு நிலங்களுக்கு மத்தியில் எல்லைக்கோடு ஒன்றிருக்கும். அந்த எல்லைக்கோட்டிற்கு உட்பட்ட நிலம்தான் அவரவருக்குச் சொந்தம்! அதற்கு அப்பாற்பட்ட நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது!

இதேபோன்று இறைவிசுவாசத்திற்குரிய எல்லைக் கோடாகத் தொழுகை திகழ்கிறது! தொழுகையைக் கைவிட்டவன் இறைவிசுவாசத்திலிருந்து வெளியேறி விடுகிறான்! ஏனெனில் தொழுகையை விட்டவன் ஓரிறை நம்பிக்கை எனும் தௌஹீதையே கைகழுவியவன் ஆவான்! ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்த மற்றொரு நபிமொழி இதனையே சுட்டிக்காட்டுகிறது:

‘ஒரு மனிதனுக்கும் நிராகரிப்பு மற்றும் இணைவைப்புக்கும் மத்தியில் எல்லைக்கோடு தொழுகையை விடுவதுதான்!’ (நூல்: முஸ்லிம்)

‘உண்மை, பத்தினித்தனம், பந்தஇணைப்பு ஆகியவற்றை மேற்கொள்ளுமாறும் எங்களுக்கு ஏவுகிறார்!’

உண்மை பற்றிய விளக்கம் முன்னர் விரிவாகச் சென்றுள்ளது. பத்தினித்தனம் என்பது இரண்டு வகையாகும். ஒன்று: மானத்தைப் பாதுகாப்பது! மற்றொன்று: தன்மானத்தைப் பாதுகாப்பது! அதாவது, பிறரிடம் கையேந்தாமல் தன்மானத்துடன் வாழ்வது!

முந்தையது, விபச்சாரமெனும் மானக்கேடான செயலை விட்டும் அதற்குத் தூண்டுகோலாக இருக்கும் நடவடிக்கைகளை விட்டும் விலகியிருப்பதாகும். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

‘மேலும் விபச்சாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள். திண்ணமாக அது மானங்கெட்ட செயலாகவும் தீய வழியாகவும் இருக்கிறது!’ (17 : 32)

விபச்சாரக் குற்றத்திற்கு ஷரீஅத் கடுமையான தண்டனைதான் கொடுக்கிறது! அதாவது, விபச்சாரம் செய்த ஒருவனை நூறு தடவை சாட்டையால் அடிக்கவேண்டும். ஓராண்டு நாடு கடத்த வேண்டும்! இது அவன் மணம் புரியாதவனாக இருந்தால்!  திருமணம் முடித்து மனைவியுடன் வாழ்ந்தவன் விபச்சாரம் செய்தால் அவனைக் கல்லால் அடித்துக் கொன்றிட வேண்டும்!

இத்தகைய கடுமையான தண்டனையை இஸ்லாமிய ஷரீஅத் வழங்குவதன் நோக்கம் என்ன? அருவருக்கத்தக்க – மானக்கேடான இந்த இழிச்செயலில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களை நல்லொழுக்கத்துடன் வாழச் செய்ய வேண்டும் என்பதுதான்! இந்த மாபாதகச் செயல் அவர்களின் ஒழுக்க உணர்வை மழுங்கச்செய்து படுபயங்கரமான சீரழிவையும் நாசத்தையும் சமூகத்தில் ஏற்படுத்தக் கூடியதாகும்! மக்களின் மதநம்பிக்கையையும் மனிதப் பண்பாட்டின் மீதான மரியாதையையும் மதிப்பச்சத்தையும் பலமிழக்கச் செய்யக்கூடிய படுமோசமான செயல் இது! மட்டுமல்ல இந்தக் கேவலமான இழிச்செயல் தான் மிகப் பயங்கரமான – உயிர்க் கொல்லி நோய்கள் பரவுவதற்கும் காரணம்! விபச்சாரமும் ஒழுக்கக் கேடுகளும் மலிந்துவிட்ட இன்றைய சீரழிந்த காலச் சூழ்நிலையில் எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் மிகப்பெரிய அளவில் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பது நிதர்சனமான உண்மையன்றோ!

விபச்சாரமெனும் இந்தக் கொடிய பாவத்தை இஸ்லாம் தடைசெய்து அதற்கான தண்டனையைக் கடுமையாக்கியது மட்டுமல்ல அந்த மானக்கேடான செயலுக்குத் தூண்டுகோலாக உள்ள எல்லாத் தீமைகளைக் களைவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கிறது! பெண்கள் பர்தா அணிந்து உடலை மறைத்துக் கொண்டுதான் வெளியே செல்ல வேண்டுமென்கிற நல்லொழுக்கப் போதனை இந்த வகையைச் சேர்ந்ததே! அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

‘மேலும் உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்சானக் காலத்தைப்போன்று ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக்கொண்டு திரியாதீர்கள்!’ (33 : 33)

ஆம்! ஒருபெண்ணின் நல்லொழுக்கத்திற்குப் பாதுகாப்பு அவள் தனது வீட்டில் தங்கியிருப்பதுதான்! ஏதேனும் தேவையோ நிர்ப்பந்தமோ இருந்தால் மட்டும்தான் அவள் வெளியே செல்ல அனுமதியுண்டு! அப்படி வெளியே செல்லும் பொழுதுகூட – நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியது போன்று – நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தாமல் – ஒழுக்கத்தைப் பேணும் நிலையில்தான் செல்ல வேண்டும்!

இதோ! நபிகளார் (ஸல்) அவர்கள், தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் பெண்களுக்கு என்ன போதிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்!

‘அல்லாஹ்வின் அடிமைகளை (அதாவது பெண்களை) மஸ்ஜித்களுக்குச் செல்ல வேண்டாமெனத் தடுக்காதீர்கள். ஆயினும் அவர்கள் சாதாரண ஆடைகளுடன் வீட்டில் இருந்து வெளியே வரட்டும்’
(அறிவிப்பு: அபூ ஹுரைரா (ரலி) – நூல்: அபூ தாவூத்)

பிறரிடம் தேவையாகாமல் தன்மானத்துடன் வாழ்வதும் இஸ்லாத்தின் நன்நெறிகளுள் மிக முக்கியமானதாகும். அல்லாஹ் கூறுகிறான்:

‘(அவர்களைப் பற்றி அறியாதவர்) அவர்களின் தன்னடக்கத்தைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்றுதான் கருதுகிறார்கள். ஆனால் அவர்களின் முக அறிகுறிகளைப் பார்த்தே அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்! அவர்கள் மக்களிடம் வற்புறுத்திக் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள்!’ (2 : 273)

மக்களிடம் யாசிப்பதை இந்த வசனம் தடுக்கிறது. மனிதன் தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் குறிக்கோள்! ஏனெனில் யாசிப்பது இழிவாகும். யாசிப்பவனின் கரம் தாழ்ந்தது. கொடுப்பவனின் கரம்தான் உயர்ந்தது! எனவே யாரிடமும் எதுவும் கேட்கக் கூடாது. ஆனால் இன்றியமையாத தேவை ஏற்பட்டுள்ளதெனில் – நிர்ப்பந்தமான சூழ்நிலையெனில் யாசிப்பது கூடும். அவ்வாறில்லாத நிலையில் யாசிப்பதென்பது தீயசெயலாகும். தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தன்மானத்திற்கு களங்கம் விளைவிக்கும் இத்தகைய தீயசெயல் குறித்து எச்சரிக்கை செய்யக்கூடிய பல நபிமொழிகள் வந்துள்ளன. ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

‘உங்களில் ஒருவர் தொடர்ந்து யாசகம் கேட்டுக் கொண்டே இருப்பாரெனில், இறுதியில் முகத்தில் சதை இன்றி அலங்கோலமான நிலையில்தான் அல்லாஹ்வை அவர் சந்திப்பார்’! (அறிவிப்பு: இப்னு உமர்(ரலி) – நூல்: புகாரி, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்களின் இத்தகைய அழுத்தமான அறிவுரைகளைச் செவியேற்றதை அடுத்து இதோ! ஸஹாபாக்கள் யாரிடத்திலும் எந்தத் தேவையையும் கேட்க மாட்டோம் என்று சபதமே செய்து கொடுத்தார்கள் என்ற ஹதீஸ் அறிவிப்புகளில் வந்துள்ளது! அதன் பின்னர் எத்தகைய தன்மானமிக்க வாழ்க்கையை அவர்கள் மேற்கொண்டார்களெனில் அவர்களில் ஒருவர் வாகனத்தின் மேலே அமர்ந்திருக்கும் நிலையில் அவரது சாட்டை கீழே விழுந்தால் அதை எடுப்பதற்குக்கூட யாருடைய உதவியையும் அவர் நாடுவதில்லை! அவரே கீழே இறங்கித்தான் அதை எடுப்பார் என்று வரலாற்றில் பார்க்கிறோம்!

‘பந்த பாசத்தை மேற்கொள்ளுமாறும் ஏவுகிறார்!’

அதாவது, எத்தகைய உறவுகளை இணைத்துவைக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அத்தைகய உறவுகளுடன் இணைந்து வாழ வேண்டும்! மிக நெருங்கிய உறவினர்களுக்கு முதலிடம்! பிறகு அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்! இந்த வகையில் முதலில் பெற்றோர்கள்! பிறகு உடன்பிறந்தவர்கள், பிறகு தந்தையின் உடன் பிறந்தவர்கள்! இவ்வாறே அதன் வரிசைக்கிரமம் செல்கிறது! ஏனெனில் குர்ஆன் – ஹதீஸில் பந்துக்கள் எனும் வார்த்தை பொதுப்படையாக வந்தால் வழக்கத்திலுள்ள கருத்தே அதற்குக் கொடுக்கப்படும். அதன்படி பந்துக்களைக் கவனித்தல் என்பது மக்களின் சூழ்நிலை மற்றும் காலங்கள், இடங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப அமைவதாகும்.

அறிவிப்பாளர் அறிமுகம் அபூ ஸுப்யான் (ரலி) அவர்கள்

அபூ ஸுப்யான்(ரலி) அவர்கள் யானை ஆண்டிற்கு பத்து வருடங்கள் முன்பு பிறந்தார்கள். ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்க்கக் கூடியவராக இருந்த அன்னார் இஸ்லாம் மார்க்கம் ஏற்றது, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட இரவில்தான்! அதன் பிறகு இஸ்லாத்தின் வெற்றிக்காகவும் வளர்ச்சிக்காகவும் பல யுத்தங்களில் கலந்து கொண்டார்கள். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஹுனைன் மற்றும் தாயிப் யுத்தங்களாகும்.

அபூ ஸுப்யான் (ரலி) அவர்கள் நபிகளாரின் மனைவி உம்மு ஹபீபா (ரலி) அவர்களுடையவும் வஹி எழுத்தர்களில் ஒருவரான அமீர் முஆவியா (ரலி) அவர்களுடையவும் தந்தை ஆவார்கள்.

நபிகளார் (ஸல்) அவர்கள் அபூ ஸுப்யான் அவர்களை நஜ்ரான் தேசத்தின் கவர்னராக நியமித்திருந்தார்கள், நபியவர்கள் மரணம் அடைந்த பொழுதும் அபூஸுப்யான் அந்தப் பதவியில்தான் இருந்தார்கள்! 88ம் வயதில் மதீனாவில் ஹிஜ்ரி 31 ம் ஆண்டு மரணம் அடைந்த அபூ ஸுப்யானுக்கு உஸ்மான் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்!

கேள்விகள்

1) ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு நபிகளார் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுத்து மன்னர்கள் சிலருக்குக் கடிதம் எழுதி அனுப்பினார்கள்., அவர்கள் யார் யார்?
2) இஸ்லாத்தை ஏற்கவிடாமல் ஹிர்கல் மன்னரைத் தடுத்தது எது?
3) மூதாதையர் சொல்வதை விட்டுவிடுங்கள் என்பதன் விரிவான கருத்து என்ன?
4) பத்தினித்தனம் என்றால் என்ன என்பதைச் சற்று விவரிக்கவும்.
5) அறிவிப்பாளர் பற்றிய விவரத்தைச் சுருக்கமாக எழுதவும்.

This entry was posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) and tagged . Bookmark the permalink.