தற்காலத்தில் வீட்டிற்குத் தேவையான சாமான்களை விற்பனை செய்யும் கடைகளில் எந்தக் கடையிலும் தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் அல்லது தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் இல்லாமலில்லை. அவ்வாறே செல்வந்தர்களுடைய வீடுகளும், பல ஹோட்டல்களும், இன்னும் சொல்வதானால் இந்த தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிலர், சிலருக்கு வழங்கும் உயர்ந்த அன்பளிப்புப் பொருள்களாகவும் ஆகி விட்டன.
இன்னும் சிலர் தங்களுடைய வீடுகளில் அவற்றை வைத்துக் கொள்வதில்லை. ஆயினும் மற்றவர்களுடைய வீடுகளிலும் அவர்களின் வலிமா-விருந்துகளிலும் கலந்து கொள்ளும்போது அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவையனைத்தும் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட காரியங்களாகும். இப்பாத்திரங்களைப் பயன்படுத்துவது பற்றி நபி (ஸல்) அவர்கள் மூலம் கடுமையான எச்சரிக்கையும் வந்துள்ளது. அவர்கள் கூறியதாவது:
‘நிச்சயமாக தங்கம்,வெள்ளிப் பாத்திரங்களில் உண்பவன் அல்லது பானம் அருந்துபவன் தன் வயிற்றினுள் நரக நெருப்பையே நிரப்புகிறான்’ அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: முஸ்லிம்.
இந்தச் சட்டம் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் எல்லா வகைப் பண்ட – பாத்திரங்களையும் எடுத்துக் கொள்ளும். உதாரணமாக தட்டு, கரண்டி வகைகள், கத்திகள், விருந்தினருக்காகப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் இனிப்புப் பணடங்களை வைக்கப் பயன்படுத்தப்படுகின்ற டப்பாக்கள் போன்றவை.
இன்னும் சிலரோ நாங்கள் இப்பாத்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் கண்ணாடிப் பெட்டிகளில் அழகுக்காக மட்டுமே வைத்துக் கொள்கிறோம் என்கின்றனர். இதுவும் கூடாது. ஏனெனில் இது உபயோகப்படுத்துவதற்கான வழியைத் திறந்து விடும் என்பதற்காக.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.