50. உமர்(ரலி) அவர்களின் உயர் பண்பு!
ஹதீஸ் 50. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘உயைனா இப்னு ஹிஸ்ன் என்பார் (மதீனா) வந்து தன்னுடைய சகோதரர் மகனாகிய ஹுர்ரு பின் கைஸ் என்பாரிடம் தங்கியிருந்தார். உமர்(ரலி) அவர்கள் யார் யாரையெல்லாம் தங்களது அவையில் நெருக்கமான அந்தஸ்தில் வைத்திருந்தார்களோ அத்தகைய நபர்களுள் ஹுர்ரும் ஒருவர். குர்ஆனை கற்றறிந்த அறிஞர்கள்தான் உமர்(ரலி) அவர்களது அவைத் தோழர்களாகவும் ஆலோசகர்களாவும் இருந்தனர். அவர்கள் பெரிய வயதுடையவர்களாயினும் இளைஞர்களாயினும் சரியே! தன் சகோதரர் மகனிடம் உயைனா சொன்னார்: ‘மகனே! இந்த அமீரிடத்தில் உனக்கு செல்வாக்குள்ளது. எனவே அவரைச் சந்திப்பதற்கு எனக்கு அனுமதி வாங்கிக் கொடு!’அவ்வாறே அவர் அனுமதி கேட்டார். உமர்(ரலி) அவர்களும் அனுமதி கொடுத்தார்கள்.
உமர்(ரலி) அவர்களின் சமூகத்தில் உயைனா வந்தபொழுது சொன்னார்: ‘இதோ! கத்தாபின் மகனாரே! நீர் எங்களுக்கு அதிக மானியம் கொடுப்பதில்லை. மேலும் எங்களிடையே நீதியுடன் தீர்ப்பு அளிப்பதில்லை!’ (இதனைக் கேட்டதும்) உமர்(ரலி) அவர்கள் அதிகஅளவு கோபம் கொண்டு அவரைத் தண்டிக்கவே முனைந்து விட்டார்கள்!
அப்பொழுது உமர்(ரலி) அவர்களிடம் ஹுர்ரு சொன்னார்: ‘அமீருல் முஃமினீன் அவர்களே! (குர்ஆனில்) அல்லாஹ் தன்னுடைய நபியை நோக்கிக் கூறுகிறான்: (நபியே! மக்களிடத்தில்) மென்மையையும் மன்னிக்கும் போக்கையும் மேற்கொள்வீராக! நன்மை புரியுமாறு ஏவுவீராக. மேலும் அறிவீனர்களை விட்டும் விலகியிருப்பீராக! (7 : 199) – இந்த மனிதரும் அறிவீனர்களில் ஒருவர்தானே!’ – அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த வசனத்தை அவர் ஓதிக்காட்டியபொழுது உமர்(ரலி) அவர்கள் அதை மீறிச் செல்லவில்லை! அவர்கள் இறைவேதத்தின் வரம்புக்குக் கட்டுப்படுபவர்களாய்த் திகழ்ந்தார்கள்!’ நூல்: புகாரி
தெளிவுரை
இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்களைப் பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்நிகழ்ச்சியை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பொறுமை பற்றிய இந்தப் பகுதியில் கொண்டு வந்துள்ளார்கள்!
நீதிக்கும் நேர்மைக்கும் புகழ் பெற்றவர்கள் உமர்(ரலி) அவர்கள்! சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் பண்பும் அதன் முன் பணியும் இயல்பும் அவர்களிடம் மிகுந்திருந்தன! அவர்களது வாழ்க்கை வரலாற்றில் பல்வேறு நிகழ்ச்சிகள் இதற்குச் சான்று பகன்று கொண்டிருப்பதைக் காணலாம்! ஒரு தடவை ஒருபெண்மணி குர்ஆனின் வசனத்தை ஓதிக்காட்டி நினைவூட்டியபொழுது உடனே உமர்(ரலி) அவர்கள் அதன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள் எனும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதே! அத்தகைய சான்றுகளுள் ஒன்று தான் இங்கு கூறப்பட்ட இந்நிகழ்ச்சியும்!
உயைனா பின் ஹிஸ்ன் என்பவர் தம் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த தலைவர்தான். ஆனாலும் அவர் நாட்டுப்புறத்தவர் என்பதால் நாகரிமற்றவராக இருந்தார். இதோ! கத்தாபின் மகனாரே! என்று அவர் தனது பேச்சைத் தொடங்கியது எவ்வளவு அநாகரிகமானது! பண்பாடற்றது! அதைத்தொடர்ந்து அவர் சொன்ன வார்த்தைளும் அப்படிப்பட்டவைதானே!
‘நீர் எங்களுக்கு அதிக மானியம் வழங்குவதில்லை. மேலும் எங்களிடையே நீதியுடன் தீர்ப்பு அளிப்பதில்லை!’
பார்த்தீர்களா எப்படிப் பொறுப்பின்றி – வாய்க்கு வந்தபடி பேசுகிறார் என்பதை! நீதிமிக்க ஆட்சிக்குப் புகழ்பெற்ற கலீஃபா உமர்(ரலி) அவர்களது நடவடிக்கை நீதி அல்ல என்கிறார்! அதாவது கலீஃபா உமர் அவர்கள் அரசாங்கப் பணத்தை அதிக அளவு அவருக்கு அள்ளிக் கொடுக்காததை அநீதி என்று கூறுகிறார்! அதுவும் மரியாதைக் குறைவான முறையில் சுட்டிக் காட்டுகிறார்! பண்பாடற்ற அவரது பேச்சுதான் உமர்(ரலி)அவர்கள் அதிகம் கோபம் கொள்ள காரணமாயிற்று! உடனே அவரைப் பிடித்துத் தண்டிக்கவே முனைந்து விட்டார்கள்! இதனைக் கண்டதும் அருகில் நின்று கொண்டிருந்த ஹுர்ரு என்பார் கலீஃபா அவர்களைச் சமாதானப்படுத்தினார்! மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
அவர் எவ்வாறு சமாதானப்படுத்தினார் என்பதுதான் இங்கு நமக்கு நல்லதொரு பாடம்! அதாவது, உடனே – மேலே சொன்ன குர்ஆன் வசனத்தை அவர் ஓதிக் காண்பித்தார்! இறைவனின் அறிவுரையைக் கேட்டவுடனேயே உமர்(ரலி) அவர்கள் அமைதியாகி விட்டார்கள். குர்ஆனுடன் அவர்களுக்கிருந்த ஈடுபாடு எத்தகைய ஆழமானது என்பதையே இது காட்டுகிறது! நபிகளாரிடம் பெற்றிருந்த நல்லொழுக்கப் பயிற்சி உமர்(ரலி) அவர்களது இதயத்தை அந்தஅளவுக்கு பண்படுத்தி – பக்குவப்படுத்தி இருந்தது என்பதே உண்மை!
அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனுக்கு நபித்தோழர்கள் அளித்துவந்த மரியாதையைப் பாருங்கள். இது அல்லாஹ் அருளிய வேதத்தின் கட்டளை என்று அவர்களுக்கு நினைவூட்டியதுமே அதற்குக் கட்டுப்பட்டார்கள்.
இன்று நாமும்தான் அந்த வேதத்தின் மீது விசுவாசம் கொண்டுள்ளோம். அதன் கட்டளைகளைத் தினமும் செவிமடுக்கிறோம். ஆனால் குர்ஆனுக்கு உரிய மரியாதை தருகிறோமா? அதன் ஆணைகளுக்குக் கீழ்ப்படிகிறோமா? நம்முடைய வாழ்க்கையில் அதுதான் கேள்விக் குறியாக உள்ளது! கலீஃபாக்களின் வாழ்வில் நடைபெற்ற இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் அத்தகைய பயிற்சியையும் பக்குவத்தையும் நாமும் பெற முயற்சி செய்ய வேண்டும் என்பதே நாம் பெற வேண்டிய பாடம்!
மேலேசொன்ன வசனத்தின் முதல்கட்டளை மென்மையையும் மன்னிக்கும் போக்கையும் மேற்கொள்வீராக என்பதாகும்! இதற்கு அரபியில் பயன்படுத்தப் பட்டுள்ள வார்த்தை (خذ العفو) கருத்துச் செறிவானது! அதாவது, உலகில் மக்களிடம் இணைந்து வாழும்பொழுது சிலர் உங்களிடம் மனம் நோகும்படிப் பேசிடலாம். முறைகேடாக நடந்திடலாம். அதற்கெல்லாம் முழு அளவில் பழிவாங்கியே தீருவது என்பது கூடாது. அந்த மனிதர்களின் குணங்களில் – செயல்களில் எது இலகுவானதோ அதை ஏற்றுக்கொண்டு அவர்களை நீங்கள் மனம் பொறுத்திட வேண்டுமே தவிர, உரிமை முழுவதையும் எதிர்பார்க்க முடியாது. அது உங்களுக்குக் கிடைக்காது!
இதேபோல் உங்களிடம் கடன் பெற்ற ஒருமனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் கடும் நஷ்டத்திற்குள்ளாகி வறுமைக்கோட்டின் கீழ்த் தள்ளப்பட்டு விடலாம். அப்பொழுது அவன் தர வேண்டிய பணத்தை முழுமையாக நீங்கள் எதிர்பார்க்காதீர்கள்! உங்களது உரிமை முழுவதையும் கேட்காதீர்கள். அது உங்களுக்குக் கிடைக்காது!- இவ்வாறாக மன்னிக்கும் மனப்பான்மையை – மேலான பண்பாட்டைத் தன் தூதருக்கு அல்லாஹ் போதிக்கிறான்!
மேலும் நன்மை புரியுமாறு ஏவுவீராக ( وأمر بالعرف ) என்பதுதான் இரண்டாவது கட்டளை. மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அல் உர்ஃப் என்பதன் பொருள் நன்மையான சொல் – செயல் அனைத்தையும் உள்ளடக்கும். அறியப்பட்டது – பழக்கமானது என்கிற அதன் அகராதிப் பொருளோடு அதற்குள்ள கருத்துப் பொருத்தம் என்னவெனில், அத்தகைய சொல், செயல்களை ஷரீஅத்தும் நன்மை என்று கருதும். மக்களின் கருத்தும் அதுவாகவே இருக்கும்! அந்த வகையில் நன்மையைக் கொண்டு ஏவுதல் என்றால் எது நன்மை என்று ஷரீஅத்தும் மக்களும் அறிந்திருக்கிறார்களோ அதனைச் செயல்படுத்தும்படி ஏவுவீராக! முன்கர் – منكر எனும் தீமையைக் கொண்டும் ஏவாதீர்கள். நன்மை அல்லாததைக் கொண்டும் ஏவாதீர்கள்! -அதாவது, ஷரீஅத்திலும் மக்களிடத்திலும் நன்மை என்று அறிமுகமில்லாததை ஏவாதீர்கள்! ஏனெனில் விஷயங்கள் மொத்தம் மூன்று வகைதான்:
1) தீமை – இதைத் தடுப்பது கடமை.
2) நன்மை – இதைக் கடைப்பிடிக்குமாறு ஏவிட வேண்டும்!
3) தீமையாகவும் நன்மையாகவும் இல்லாதது- இதனை ஏவுதல் என்பதும் இல்லை. தடுத்தல் என்பதுமில்லை.
அதாவது சில விஷயங்கள் உள்ளன. முந்தைய எந்த வகையிலும் சேராதவை! அவற்றைச் செய்வதால் நற்கூலி – புண்ணியம் கிட்டும் என்பதில்லை! அவை ஆகுமான காரியங்கள். செய்யவும் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். அப்படி இருக்கும்பொழுது அவற்றைச் செயல்படுத்துமாறு ஏவுவதற்கு என்ன இருக்கிறது?
ஆனால் அறிவுரையின் அடிப்படையில் சொல்வதாயின் எது நல்ல வார்த்தையோ அதைத் தவிர வேறெதையும் யாரும் பேசவேண்டாம் என்று சொல்லலாம். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘யார் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் விசுவாசம் கொண்டுள்ளாரோ அவர் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்!’ (புகாரி,முஸ்லிம்)
‘மேலும் அறிவீனர்களை விட்டும் விலகியிருப்பீராக!’
இதன் கருத்து: யார் உங்கள் மீது அபத்தமாகவும் வரம்பு மீறியும் நடக்கிறாரோ அவரை விட்டும் விலகி விடுங்கள். அப்படி விலகிச் செல்வது இழிவாகவோ அடங்கிப் போவதாகவோ இல்லாதபட்சத்தில் விலகிச் செல்வதையே மேற்கொள்ளுங்கள்! இந்த நிகழ்ச்சியில் உமர்(ரலி) அவர்களின் செயல்பாடே நமக்கு முன்மாதிரி! அறிவீனர்களை விட்டும் அவர்கள் விலகியது இழிவாகவும் இல்லை. கீழடங்கியதாகவும் இல்லை! ஏனெனில் அப்படி அபத்தமாகப் பேசிய மனிதரைத் தண்டிக்கும் ஆற்றலை அவர்கள் பெற்றிருந்தார்கள். ஆனாலும் இறைக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவ்வாறு அவர்கள் தண்டிக்கவில்லை!
இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள அல் ஜாஹிலீன் என்பதன் வேர்ச் சொல்லான الجهل என்பதற்கு இரண்டு பொருள்கள் உள்ளன. 1) அறியாமை 2) அபத்தமாக-வரம்பு மீறி நடந்துகொள்வது. ஒரு கவிஞன் பாடினான்:
எங்கள் மீது யாரும்
அபத்தமாக நடந்திட வேண்டாம்!
அறிந்திடவும்! -அப்படி
நடப்பவர்களிடம் – அதற்கும் மேலாக
நாங்கள் அபத்தமாக நடப்போம்!
– ஆனால் இது அறியாமை காலத்து வைராக்கியமாகும். இஸ்லாமியப் பண்பாடு என்னவெனில், அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
‘(நபியே) நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையைத் தடுப்பீராக! அப்பொழுது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கூட உற்ற நண்பராய் ஆகிவிடுவதைக் காண்பீர்’ (41 : 34)
உங்களது இப்பண்பாட்டால் எத்தகைய தலைகீழ் மாற்றம் விளைகிறது. பாருங்கள்! உங்களிடம் தீவிரமான பகைமை பாராட்டிக் கொண்டிருப்பவர் உற்ற தோழராய்-நெருங்கிய நண்பராய் மாறிவிடுகிறார்! இது உங்களது நயமான நடவடிக்கையின் நல்ல விளைவுதானே! இவ்வாறு கூறுவது யார்? இதயங்களைப் புரட்டிக் கொண்டிருக்கக்கூடிய பேராற்றல் கொண்ட இறைவனாகிய அல்லாஹ்தான் இவ்வாறு கூறுகிறான். ஒவ்வொரு மனிதனின் இதயமும் கருணைமிக்க அந்த இறைவனின் இரண்டு கரங்களிடையேதான் உள்ளது! தன் விருப்பப்படி அதனை அவன் மாற்றிக் கொண்டிருக்கிறான்!
இந்த வசனத்தை ஓதிடக்கேட்டு உமர்(ரலி) அவர்கள் கடைப்பிடித்த உயர் பண்பாடு நமது வாழ்க்கையில் மலர வேண்டும். வெஞ்சினமோ கோபதாபமோ ஏற்படும்பொழுது இறைவேதத்தையும் இறைத்தூதரின் வழி முறையையும் நாம் நினைத்துப் பார்த்திட வேண்டும். அவர்களின் அறிவுரைக்கேற்ப நாமும் நடைபோட்டோமாயின் ‘யார் எனது வழிகாட்டலைப் பின்பற்றினாறோ அவர் வழிதவற மாட்டார். துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகவும் மாட்டார்!’ (20:123) குர்ஆன் குறிப்பிடுவது போன்று என்றைக்கும் நாம் வழிபிறழ்ந்திட மாட்டோம். துர்ப்பாக்கிய நிலை நமக்கு வராது
கேள்விகள்
1) உமர்(ரலி) அவர்களின் உயர் பண்பாடுச் சிறப்புகள் சிலவற்றை – வரலாற்றுச் சான்றுகளுடன் விவரிக்கவும்.
2) மென்மையையும் மன்னிக்கும் போக்கையும் மேற்கொள்வதென்ன?
3) நன்மை – அல் உர்ஃப் என்றால் என்ன?
4) அல் ஜஹ்ல் எனும் அரபிச் சொல்லின் பொருள் என்ன? அறிவீனர்களை விட்டும் விலகியிருத்தல் என்றால் என்ன?
5) அறிவிப்பாளர் குறித்து நீ அறிந்திருப்பதென்ன?