731. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்தவர் எதையெதை அணியலாம்?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, தொப்பி, காலுறை ஆகியவற்றை அணியக்கூடாது. செருப்பு கிடைக்காதவர், தம் காலுறையின் (மேலிருந்து) கரண்டைக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்து கொள்ளலாம் குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்!” என்றார்கள்.
732. நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்தும்போது, ‘யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்; யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ அவர் கால்சட்டைகளை அணியட்டும்!” என்று இஹ்ராம் அணிந்தவர்களுக்குக் கூறியதை செவியுற்றுள்ளேன்.
733. நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வரும்பொழுது எனக்குக் காட்டுங்கள் என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ஜிஇர்ரானா எனுமிடத்தில் இருந்தபோது ஒருவர் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! நறுமணம் பூசிய நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வந்தது. உமர் (ரலி) என்னை சைகை செய்து அழைத்ததும் நான் சென்றேன். நபி (ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காக ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. அத் துணிக்குள் நான் தலையை நுழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை மாறியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?’ என்றார்கள். கேட்ட மனிதர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் ‘உம் மீதுள்ள நறுமணத்தை மூன்று முறை கழுவுவீராக! தைக்கப்பட்ட உடைகளைக் களைவீராக! உம்முடைய ஹஜ்ஜில் செய்வது போன்றே உம்முடைய உம்ராவிலும் செய்வீராக!” என்று கூறினார்கள்.