கேள்வி எண்: 4. பிரிட்டீஷ் விஞ்ஞானி டாக்டர் அப்துல்லா அலிசன்-ஐ பிரமிக்கச் செய்து அவர் சத்திய மார்க்கத்தைத் தேர்வு செய்ய காரணமான ‘ஒரு ஆணோ, பெண்ணோ உறங்கும்போது ஏதோ ஒன்று மனித உடலிலிருந்து வெளிச் செல்கிறது என்றும், எப்பொழுது திரும்புகிறதோ அது வந்தவுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது என்றும், ஆனால் மரணத்தின் நிலையிலோ அந்த ஏதோ ஒன்று திரும்ப வருவதில்லை’ என்ற அவரது ஆய்வு முடிவை மெய்ப்படுத்தும் திருமறை வசனம் எது? இது பற்றிய சிறு விளக்கம் தருக.
பதில்: இதன் வசனம் 39:42.
இதன் விளக்கம்: இங்கிலாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் தலைவராக பணியாற்றுபவர் தான் டாக்டர் அலிசன். தூக்கம், மரணம் இவற்றைப் பற்றி பல ஆய்வுகள் செய்த இவர், இறுதியில் தம்முடைய எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் உதவியுடன் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் முடிவில் ‘ஒரு ஆணோ, பெண்ணோ உறங்கும்போது ஏதோ ஒன்று மனித உடலிலிருந்து வெளிச் செல்கிறது என்றும், எப்பொழுது திரும்புகிறதோ வந்தவுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது என்றும், ஆனால் மரணத்தின் நிலையிலோ அந்த ஏதோ ஒன்று திரும்ப வருவதில்லை’ என்று கண்டறிந்தார்.
அதே நேரத்தில் திருக்குர்ஆனையும் ஆய்வு செய்த இவர், பல வசனங்கள் இன்றைய அறிவியலோடு ஒத்துப் போவதையும் பின்வரும் வசனம் அவரின் ஆய்வு முடிவை மெய்ப்பித்திருப்பதையும் அறிந்து பெரும் வியப்பிற்குள்ளானார். அந்த வசனம் இதுதான்.
“அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான். மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணைவரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் — சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன”. (அல்குர்ஆன்: 39:42)
இறைவனின் இவ்வசனத்தைக் கண்டு அதிசயித்த இவர், எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடந்த ‘குர்ஆன் ஒளியில் மருத்துவம்’ என்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில், தாம் சத்திய மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாக கூறினார். மேலும், அவர் கூறுகையில், இஸ்லாத்தில் இந்த அளவுக்கு அறிவியல் நுணுக்கங்களும், அத்தாட்சிகளும் இருப்பதை மேலை நாடுகளும், அறிவியல் உலகமும் (விஞ்ஞானிகளும்) அறியாமல் இருப்பதைக் கண்டு வருத்தமுறுவதாகவும், அதற்கு காரணம்; இத்தனை அறிவியல் நுணுக்கங்கள் நிறைந்த இஸ்லாமிய மார்க்கத்தை பிற மதத்தவர்களுக்கு முஸ்லிம்கள் எடுத்துக்கூற தவறிவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
அவருடைய இந்தக் குற்றச்சாட்டில் நிறைய உண்மைகள் இருப்பதை நாம் மறுக்க முடியாது. வெறும் சடங்கு சம்பிரதாயங்களுக்காக (பாத்திஹாக்கள்) ஓதப்படும் மந்திர புத்தகமாகவும், பட்டுத்துணியில் போர்த்தி அலமாரியில் வைக்கப்படும் புனித பொருளாகவும், பேய், பிசாசுகளிலிருந்து பாதுகாவல் பெற தலையணைக்குள் வைத்துப் படுக்கும் பாதுகாவல் புத்தகமாகவும் தான் நாம் குர்ஆனைப் பயன்படுத்துகிறோமே தவிர, அது கூறும் அறிவியல் அத்தாட்சிகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் நாம் கவனிப்பதில்லை.