77. ஆடை அணிகலன்கள்

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5783

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5784

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்’ என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய கீழங்கியின் இரண்டு பக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விழுகிறது’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5785

அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தபோது சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் அவரசத்துடன் எழுந்து தம் ஆடையை இழுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். (பள்ளிவாசலில் இருந்து சென்றுவிட்ட) மக்கள் அனைவரும் திரும்பி வந்தனர். நபி(ஸல்) அவர்கள் சூரியகிரகணம் விலகும்வரை இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு நபி(ஸல்) எங்களை நோக்கி, ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். அவற்றில் (கிரகணங்களில்) ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது அதை அகற்றும் வரை அவனிடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5786

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். பிலால்(ரலி) (இரும்புப் பிடி போட்ட) ஒரு கைத்தடியைக் கொண்டு வந்து அதை (பூமியில் தடுப்பாக) நட்டு வைத்துப் பிறகு, தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்வதை கண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆடையை விரித்து கட்டிக் கொண்டு (தம் அறையிலிருந்து) வெளியே வந்ததை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் கைத்தடி நடப்பட்டிருந்த திசையை நோக்கி (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மக்களும் (வாகனப்) பிராணிகளும் கைத்தடிக்கு அப்பால் நபி(ஸல்) அவர்களுக்கு முன் நடந்து செல்வதை பார்த்தேன்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5787

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்). என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5788

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5789

நபி(ஸல்) அவர்கள்’ அல்லது ‘அபுல் காசிம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5790

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முற்காலத்தில்) ஒருவர் தம் கீழங்கியை (தற்பெருமையுடன் தரையில்) இழுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது அவரை பூமியில் புதைந்து போகும் படி செய்யப்பட்டது. அவர் அப்படியே (தம் உடல்) குலுங்கியபடி மறுமை நாள் வரை பூமியினுள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பார் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜரீர் இப்னு ஸைத்(ரஹ்) கூறினார். நான் சாலீம் இப்னு அப்தில்லாஹ் இப்னி உமர்(ரஹ்) அவர்களுடன் அவர்களின் வீட்டு வாசலருகே அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ‘அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் மேற்சொன்ன ஹதீஸைப் போன்று கேட்டதாகக் கூறியதை நான் செவியேற்றேன்’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5791

ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) அறிவித்தார். நான் முஹாரிப் இப்னு திஸார்(ரஹ்) அவர்களைக் குதிரையொன்றின் மீது சென்று கொண்டிருந்தபோது சந்தித்தேன். அவர்கள் (கூஃபாவில்) தாம் தீர்ப்பளிக்கும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் (மேற்கண்ட) இந்த ஹதீஸைக் குறித்துக் கேட்டேன். அவர்கள் எனக்கு(ப் பின்வருமாறு) அறிவித்தார்கள். ‘தற்பெருமையின் காரணத்தால் தம் ஆடையை(த் தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறவரை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்’ என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) சொல்லக் கேட்டேன். அப்போது நான் முஹாரிப்(ரஹ்) அவர்களிடம், ‘தம் கீழங்கியை’ என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) தம் அறிவிப்பில் கூறினார்களா?’ என்று வினவினே. அதற்க அவர்கள், ‘கீழங்கி’ என்றோ, ‘(முழு நீளச்) சட்டை’ என்றோ அன்னார் குறிப்பிட்டுச் சொல்லவில்லை’ என்று பதிலளித்தார்கள். இதே ஹதீஸ் வேறு பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5792

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி), இருக்க நான் (அங்கு) அமர்ந்திருந்தபோது ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்களின் துணைவியார் வந்தார். அவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் ரிஃபாஆ அவர்களின் மனைவியாக இருந்தேன். அவர் என்னை ஒட்டுமொத்தமாக மணவிலக்குச் செய்துவிட்டார். எனவே, நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அவர்களை மணமுடித்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடன் (இன உறுப்பு என்று) இருப்பது இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றது தான், இறைத்தூதர் அவர்களே!’ என்று சொல்லிவிட்டுத் தம் முகத்திரையின் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார்.

காலித் இப்னு ஸயீத் இப்னு ஆஸ்(ரலி) இச்சொல்லை வாசலில் நின்ற படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். காலித் இப்னு ஸயீத்(ரலி) உள்ளே வர அனுமதியளிக்கப்படவில்லை. அப்போது காலித் அவர்கள், ‘அபூ பக்ரே! இவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் பகிரங்கமாக இப்படிப் பேசக்கூடாது என்று நீங்கள் தடுக்கக்கூடாதா?’ என்று (வெளியிலிருந்தவாறே) கேட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்ததற்கு மேலாக வேறொன்றும் செய்யவில்லை. அப்பெண்ணிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீ (உன் பழைய கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பச் செல்ல விரும்புகிறாய் போலும். (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் அது முடியாது’ என்று கூறினார்கள். பிறகு (இவ்விஷயத்தில்) இதுவே (சட்ட) வழிமுறையாகி விட்டது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5793

அலீ(ரலி) அறிவித்தார்….பிறகு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேல் துண்டைக் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்தார்கள். பிறகு நானும் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும் பின்தொடர, நபி(ஸல்) அவர்கள் நடந்து சென்றார்கள். அவர்கள் ஹம்ஸா(ரலி) இருந்த வீட்டிற்குச் சென்று (உள்ளே செல்ல) அனுமதி கேட்டார்கள். அங்கு இருந்தவர்களுக்கு இவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5794

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?’ என்று ஒருவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ராம் கட்டியவர் (முழு நீளச்) சட்டை அணியமாட்டார்; முழுக்கால் சட்டை அணியமாட்டார்; முக்காடுள்ள மேலங்கியும் அணியமாட்டார். காலுறைகளும் (மோஸாக்களும்) அணியமாட்டார். அவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் அவர் காலுறை (மோஸாக்)களைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி அணிந்து கொள்ளட்டும்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5795

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபையின் பிரேதம் மண்ணறைக்குள் வைக்கப்பட்ட பிறகு நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவரை வெளியே எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் வெளியே எடுக்கப்பட்டு நபி(ஸல்) அவர்களின் முழங்கால்களின் மீது வைக்கப்பட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் உமிழ் நீரை அவரின் மீது உமிழ்ந்து தம் (முழுநீளச்) சட்டையை அவருக்கு அணிவித்தார்கள். (இதன் காரணத்தை) அல்லாஹ் அறிவான்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5796

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டபோது அவரின் புதல்வர் (அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரலி)) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே தங்களின் (முழு நீளச்) சட்டையை என்னிடம் கொடுங்கள். அதில் நான் அவருக்குக் ‘கஃபன்’ (பிரேத ஆடை) அணிவிப்பேன். மேலும், அவருக்காகத் தாங்கள் தொழவைத்து பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் தம் (முழுநீளச்) சட்டையை வழங்கி (அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிப்) பணிகளை நீங்கள் முடித்துவிட்டால் எனக்குத் தெரிவியுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர் (தம் தந்தையின் இறுதிப் பணிகளை முடித்தவுடன் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபைக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுதிட வந்தார்கள். அப்போது உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து ‘நயவஞ்சகர்களுக்குத் தொழவைக்கக் கூடாது என்று அல்லாஹ் தங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?’ என்று கேட்டுவிட்டு, ‘நீங்கள் (நயவஞ்சகர்களான) அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் ஒன்று தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி, அல்லாஹ் அவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான்’ என அல்லாஹ் கூறினான் என்று கூறினார்கள். உடனே ‘நயவஞ்சகர்களில் இறந்துவிட்டவர் எவருக்காகவும் ஒருபோதும் (நபியே!) தொழுகை நடத்தாதீர். அவர்களின் மண்ணறையருகே நிற்கவும் வேண்டாம்’ எனும் (திருக்குர்ஆன் 09:84 வது) இறைவசனம் அருளப் பெற்றது. இதையடுத்து நயவஞ்சகர்களுக்கு (ஜனாஸா) தொழுகை நடத்துவதை நபியவர்கள் கை விட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5797

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செலவே செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் (பின்வருமாறு) உதாரணம் கூறினார்கள்: அவர்களின் நிலையானது, இரும்பாலான நீளங்கிகள் அணிந்த இரண்டு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவர்களின் கைகள் அவர்களின் மார்புபகுதி கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்பவர், ஒன்றைத் தர்மம் செய்யும்போதெல்லாம் அவரின் நீளங்கி விரிந்து, விரல் நுனிகளையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரின் பாதத் சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ அவனுடைய நீளங்கி அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் மற்றதின் இடத்தைப் பிடித்துவிடுகிறது.

அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.(இதைக் கூறியபோது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் விரலால் தம் சட்டைக் கழுத்தை (நெருக்கி) இவ்வாறு சுட்டிக் காட்டினார்கள். மேலும், ‘அவன் தன்னுடைய நீளங்கியை விரிவுபடுத்த முயலும்போது நீ பார்த்தால் (வியப்படைவாய்; ஏனெனில்) அது விரியாது’ என்றும் கூறினார்கள்.  இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

மற்றுமோர் அறிவிப்பில் (‘இரண்டு நீளங்கிகள்’ என்பதற்கு பதிலாக) ‘இரண்டு கவசங்கள்’ என வந்துள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5798

முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தின் போது) தம் இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர்களை எதிர்கொண்டேன். பிறகு அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு நீளங்கி (ஜுப்பா) அணிந்திருந்தார்கள். அப்போது அவர்கள் வாய்கொப்பளித்து நாசிக்குத் தண்ணீர் செலுத்திவிட்டுத் தம் முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரண்டு கைகளையும் சட்டைக் கைகளிலிருந்து வெளியே எடுக்கப் போனார்கள். ஆனால், சட்டைக் கைகள் குறுகலாக இருந்தன. எனவே, தம் இருகைகளையும் அவர்கள் நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவிக் கொண்டார்கள். மேலும், தலையை (ஈரக் கையால் ‘மஸஹ்’ செய்து) தடவினார்கள். (‘மோஸா’ எனும்) காலுறையையும் (ஈரக் கையால்) தடவினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5799

முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். நான் ஒரு பயணத்தின் ஓரிரவு நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், ‘உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (இருக்கிறது)’ என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடந்தார்கள். (இயற்கைத் தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளை நீரை அவர்களின் மீது ஊற்றினேன். அவர்கள் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். அப்போது கம்பளி நீளங்கி அணிந்திருந்தார்கள். இதனால் அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை. எனவே, அவற்றை அங்கியின் கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தம் தலையை (ஈரக் கையால்) தடவி (மஸ்ஹ் செய்திடலா)னார்கள். பிறகு நான் அவர்களின் (மோஸா எனும்) காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அதற்கு அவர்கள், ‘அவற்றைவிட்டுவிடுவீராக. ஏனெனில், நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன்’ என்று சொல்லி, (ஈரக்கையால் அவற்றைத்) தடவி (மஸஹ் செய்து) கொண்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5800

மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (‘கபா’ எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர்களுக்கு)ப் பங்கிட்டார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா(ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. எனவே, மக்ரமா(ரலி) (என்னிடம்), ‘அன்பு மகனே! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் செல்’ என்று சொல்ல, நான் அவர்களை அழைத்துச் சென்றேன். (அங்கு சென்று சேர்ந்ததும்) ‘நீ உள்ளே போய் நபி(ஸல்) அவர்களை என்னிடம் அழைத்து வா’ என்று கூறினார்கள். நான் அவ்வாறே மக்ரமா(ரலி) அவர்களிடம் வரும்படி நபி(ஸல்) அவர்கள் மக்ரமா(ரலி) அவர்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அப்போது அவர்களிடம் அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. மேலும், நபியவர்கள் ‘உங்களுக்காக இதை எடுத்து வைத்தேன்’ என்று கூறினார்கள். மக்ரமா(ரலி) அந்த அங்கியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, ‘மக்ரமா திருப்தி அடைந்து விட்டான்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5801

உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். (ஆண்கள் பட்டு அணிவது தடை செய்யப்படுவதற்கு முன்பு) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (‘ஃபர்ரூஜ்’ எனும்) நீண்ட பட்டு உடுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்தார்கள். பிறகு அதை அணிந்தபடியே (மஃக்ரிப் தொழுகை) தொழுதார்கள். பிறகு (தொழுதுவிட்டுத்) திரும்பியதும் அதை வெறுப்பவர்கள் போன்று பலமாக (உருவிக்) கழற்றினார்கள். பிறகு, ‘இது இறையச்சமுடையவர்களுக்கு உகந்ததன்று’ எனக் கூறினார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5802

சுலைமான் இப்னு தர்கான் அத்தைமீ(ரஹ்) கூறினார். அனஸ்(ரலி) மீது முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்) ஒன்றை கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பளி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5803

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?’ என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(முழுநீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், முக்காடுள்ள மேலங்கிகள் (புர்னுஸ்), காலுறைகள் (மோஸாக்கள்) ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் (மோஸாக்கள்) அணிந்து கொள்ளட்டும். ஆனால், காலுறை இரண்டும் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து) கொள்ளட்டும். குங்குமப்பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ என்னும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5804

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இஹ்ராம் கட்டியவர்களில்) கீழங்கி கிடைக்காதவர் முழுக்கால் சட்டை அணிந்து கொள்ளட்டும்; காலணிகள் கிடைக்காதவர் காலுறைகளை (மோஸாக்களை) அணிந்து கொள்ளட்டும் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5805

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும்போது எந்த ஆடைய அணிய வேண்டும் என்று தாங்கள் உத்தரவிடுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(முழு நீளச்) சட்டை, முழுக்கால் சட்டை, தலைப்பாகைகள், முக்காடுள்ள மேலங்கிகள், (‘மோஸா’ எனும்) காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள். ஒருவரிடம் காலணிகள் இல்லையென்றால் அவர் மட்டும் காலுறைகளை (மோஸாக்களை) கணுக்கால்களுக்குக் கீழ் இருக்கும்படி அணிந்துகொள்ளட்டும். குங்குமப்பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5806

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இஹ்ராம் கட்டியவர் சட்டை அணிய மாட்டார்; தலைப்பாகையையும் முழுக்கால் சட்டையையும் முக்காடுள்ள மேலங்கியையும், அணியமாட்டார். குங்குமப்பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையையும் (மோஸாக்கள் எனும்) காலுறைகளையும் அணியமாட்டார்; காலணிகள் கிடைக்கவில்லையெனில் அவர் (மேலிருந்து) கணுக்கால்களுக்குக் கீழே காலுறை (மோஸா) இருக்கும் படி கத்தரித்து (அணிந்து) கொள்ளட்டும் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5807

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (மக்காவிலிருந்த) முஸ்லிம்களில் சிலர் அபிசீனியாவுக்கு நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்ய ஆயத்தமானார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘சற்று பொறுங்கள். ஏனெனில், மக்கள் (இறைவனிடமிருந்து) அனுமதி வழங்கப்படுவதை எதிர்பார்க்கிறேன்’ என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அனுமதியை(த் தான்) எதிர்பார்க்கிறீர்களா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். எனவே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஹிஜ்ரத் செய்ய வேண்டுமென்பதற்காகத் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். மேலும், (இந்தப் பயணத்திற்காகவே) தம்மிடம் இருந்த இரண்டு வாகன (ஒட்டக)ங்களுக்கு நான்கு மாதம் கருவேலந் தழையைத் தீனியாகப் போட்டு (வளர்த்து) வந்தார்கள்.

(தொடர்ந்து) ஆயிஷா(ரலி) கூறினார். நாங்கள் ஒருமுறை நண்பகல் நேரத்தின் மத்தியில் எங்கள் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், ‘இதோ! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தலையில் முக்காடிட்டபடி நம்மை நோக்கி – நம்மிடம் வருகை தந்திராத நேரத்தில் – வந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று ஒருவர் கூறினார். அப்போது அபூ பக்ர்(ரலி), ‘(இறைத்தூதர் அவர்களே!) தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களை ஏதோ ஒரு (முக்கியமான) விஷயம் தான் இந்த நேரத்தில் இங்கே வரச் செய்திருக்க வேண்டும்’ என்று கூறினார்கள். அதற்குள் நபி(ஸல்) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதி வழங்க அவர்களும் உள்ளே வந்தார்கள் உள்ளே நுழையும்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், ‘உங்களிடம் இருப்பவர்களை வெளியே அனுப்புங்கள்’ என்று சொல்ல, அபூ பக்ர்(ரலி), ‘இங்கிருப்பவர்கள் உங்கள் (துணைவி யாருடைய) குடும்பத்தினர் தாம் என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எனக்கு (ஹிஜ்ரத்) புறப்பட அனுமதியளிக்கப்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி), ‘அப்படியென்றால் தங்களுடன் நானும் வர விரும்புகிறேன். என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்; இறைத்தூதர் அவர்களே!’ என்று சொல்லி, நபி(ஸல்) அவர்கள், ‘சரி’ என்று கூறினார்கள். உடனே அபூ பக்ர்(ரலி), ‘என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த என் இரண்டு வாகன (ஒட்டக)ங்களில் ஒன்றைத் தாங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்’ என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) கூறினார். அவர்கள் இருவருக்காகவும் வேண்டிய பயண ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்து முடித்தோம். இருவருக்கும் ஒரு தோல் பையில் பயண உணவை வைத்தோம். (என் சகோதரி) அஸ்மா பின்த் அபீ பக்ர் தன் இடுப்புச் கச்சிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அந்தத் தோல் பையின் வாயில் வைத்துக் காட்டினார். இதனால் தான் ‘இரண்டு கச்சுடையாள்’ (‘தாத்துந் நிதாக்கைன்’) என்று அவர் பெயர் சூட்டப்பட்டார். பிறகு நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் ‘ஸவ்ர்’ எனும் மலையிலுள்ள ஒரு குகையை அடைந்தார்கள். அங்கு நபி(ஸல்) அவர்கள் மூன்று இரவுகள் தங்கினார்கள். அவர்களுடன் (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ரும் இரவில் தங்கியிருப்பார். அப்துல்லாஹ் சமயோசித அறிவு படைத்த, புத்திக் கூர்மையுள்ள இளைஞராக இருந்தார். அவர் அவ்விருவரிடமிருந்தும் (வைகறைக்கு முந்திய) ‘ஸஹ்ர்’ நேரத்தில் (விடை பெற்றுப்) புறப்பட்டு விடுவார். இரவு (மக்காவில்) தங்கியிருந்த வரைப் போன்று குறைஷிகளுடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவருக்கெதிரான (குறைஷியரின்) சூழ்ச்சிகள் எதுவாயினும் அதைக் கேட்டு நினைவில் இருத்திக்கொண்டு இருள் கலக்கும் நேரத்தில் அவர்களிடம் அதைக்கொண்டு செல்வார். அவர்கள் இருவருக்காகவும் பாலை அன்பளிப்பாகக் கறந்து கொள்ள இரவல் கொடுக்கப்பட்ட ஆடொன்றை அபூ பக்ர்(ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமையான ஆமிர் இப்னு ஃபுஹைரா அவர்கள் மேய்த்து வந்தார்கள். அவர் இரவின் சிறிது நேரம் கழிந்தவுடன் அதனை அவர்கள் இருவரிடமும் ஓட்டி வருவார். அந்தப் பாலிலேயே இருவரும் இரவைக் கழிப்பார்கள். அந்த ஆட்டை ஆமிர் இப்னு ஃபுஹைரா இரவின் இருள் இருக்கும் போதே விரட்டிச் சென்றுவிடுவார். இதை (அவ்விருவரும் அக்குகையில் தங்கியிருந்த) மூன்று இரவுகளில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்து வந்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5808

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் தம் தலையில் இரும்புத் தொப்பி அணிந்தபடி மக்காவினுள் நுழைந்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5809

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட ‘நஜ்ரான்’ நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களின் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, ‘முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்’ என்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5810

அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ‘ஒரு பெண்மணி ‘புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டு வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் இதை என் கையால் நெய்தேன். இதைத் தாங்கள் அணிவதற்காக வழங்குகிறேன்’ என்றார்’ என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்கள் கூறிவிட்டு, ‘புர்தா’ என்றால் என்ன என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். (அங்கிருந்தவர்கள் ‘தெரியும்’ என்று சொல்ல,) ‘ஆம் அது கரை வைத்து நெய்யப்பட்ட போர்வை’ என ஸஹ்ல்(ரலி) கூறினார். (பின்னர் தொடர்ந்து அவர்கள் சொன்னார்கள்:) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அது தமக்குத் தேவையென்று கருதி அதை வாங்கினார்கள். பிறகு, அதை கீழங்கியாக அணிந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது மக்களில் ஒருவர் அதைத்தொட்டுப் பார்த்து (அதன் அழகை ரசித்தவராக) ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இதை அணியக் கொடுங்கள்’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘சரி’ என்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் நாடிய (நேரம்)வரை அந்த அவையில் அமர்ந்திருந்துவிட்டு (தம் வீட்டுக்கு)த் திரும்பினார்கள். பிறகு அந்தச் சால்வையை மடித்து அந்த மனிதருக்குக் கொடுத்தனுப்பினார்கள். மக்கள், ‘நீ செய்தது சரியல்ல. நபி(ஸல்) அவர்கள் தம்மிடம் கேட்பவரை (வெறுங்கையோடுத்) திருப்பி அனுப்புவதில்லை என்று தெரிந்துகொண்டே அவர்களிடம் (ஏன்) இதைக் கேட்டாய்’ என்றார்கள். அதற்கு அந்த மனிதர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதைக் கேட்டதெல்லாம் நான் இறக்கும் நாளில் என் (உடலில் அணிவிக்கப்படும்) கஃபனாக இது இருக்கட்டும் என்பதற்காகத்தான்’ என்றார். அவ்வாறே அது அவருக்குக் கஃபனாக ஆயிற்று.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5811

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் சந்திரன் பிரகாசிப்பது போல் முகங்கள் பிராகாசித்தபடி சொர்க்கத்துக்குள் நுழைவார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே உக்காஷா இப்னு மிஹ்ஸன் அல்அசதீ(ரலி) அவர்கள் தம் மீதிருந்த கோடுபோட்ட வண்ணப் போர்வையை உயர்த்தியவாறு எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உக்காஷா உம்மை முந்திக் கொண்டுவிட்டார்’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5812

கத்தாதா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘எந்த ஆடை நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வை’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5813

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அணிவதற்கு (பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வையே நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான ஆடையாக இருந்தது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5814

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது’ என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5815

5816 ஆயிஷா(ரலி) அவர்களும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாகி) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தங்களின் கறுப்புக் கம்பளி ஆடையைத் தம் முகத்தின் மீது போட்டுக் கொள்ளலானார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தம் முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்துகொண்டே ‘யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். அவர்கள் தம் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கினார்கள்’ என்று அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடக் கூடாது என அதைக்) குறித்து எச்சரித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5817

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். பிறகு அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார்கள். (தொழுது முடித்து) சலாம் கொடுத்தவுடன், ‘என்னுடைய இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்மிடம் கொண்டு செல்லுங்கள். ஏனெனில், சற்று முன்பு அது தொழுகையிலிருந்து என் கவனத்தைத் திருப்பிவிட்டது. அபூ ஜஹ்மின் (மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறினார்கள். -அவர் அதீ இப்னு கஅப் குலத்தைச் சேர்ந்த அபூ ஜஹ்கி இப்னு ஹுதைஃபா இப்னி ஃகானிம் என்பவராவார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5818

அபூ புர்தா(ரலி) அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றையும் எடுத்துக்காட்டி, ‘இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி(ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5819

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரம் முறைகளுக்குத் தடை விதித்தார்கள். ஃபஜ்ருக்குப் பிறகு சூரியன் உயரும் வரை தொழுவது, அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரை தொழுவது ஆகிய இரண்டு (நஃபில்) தொழுகைக்கும் நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக்கொண்டு இரண்டு முழங்கால்களையும் நட்டு வைத்துக் கொண்டு (அவற்றைக் கைகளால் கட்டியபடி) உட்கார்வதற்கும் (இஹ்திபா) தடை விதித்தார்கள். ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில்விட்டு விடுவதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ) தடை விதித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5820

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும், வியாபார முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள். வியாபாரத்தில் ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபஃதா’ ஆகிய முறைகளைத் தடை செய்தார்கள். ‘முலாமஸா’ என்றால், இரவிலோ பகலிலோ (ஒரு பொருளை வாங்கும்) ஒருவர் (விற்கும்) மற்றொருவரின் துணியைத் தம் கரத்தால் தொடுவதாகும். (அவ்வாறு தொட்டுவிட்டாலே வியாபாரம் உறுதியாகி விடும் என்ற நிபந்தனையின் பேரில்) அதைத் தொட்டதோடு முடித்துக்கொண்டு விரித்துப் பார்க்காமலேயே வாங்குவதாகும்.

‘முனாபதா’ என்பது, ஒருவர் மற்றொரு வரை நோக்கித் தம் துணியை எறிய அந்த மற்றவர் இவரை நோக்கித் தம் துணியை எறிய (துணியைப் பிரித்துப்) பார்க்காமலும் பரஸ்பர திருப்தி இல்லாமலும் இருவருக்குமிடையிலான வியாபார (ஒப்பந்த)மாக அதுவே ஆகி விடுவதாகும்.

ஆடை அணியும் முறைகள் இரண்டும் வருமாறு: 1. இஷ்திமாலுஸ் ஸம்மாஉ. அதாவது ஒருவர் ஒரே துணியைத் தம் தோள்களில் ஒன்றில் போட்டுக்கொள்ள அவரின் உடலின் இரண்டு பக்கங்களில் ஒன்று துணியின்றி வெளியே தெரிவதாகும். 2. இஹ்திபா அதாவது ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரிய (அதைத் துணியால் மறைக்காமல்) அமர்ந்திருப்பதாகும்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5821

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இரண்டு விதமாக ஆடை அணிவதைத் தடை செய்தார்கள். மர்ம உறுப்பு வெளியே தெரியும்படி ஒருவர் ஒரே துணீயால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக் கொண்டு அமர்ந்திருப்பதையும் (இஹ்திபா), ஒரே துணியை (இரண்டு தோள்களில் ஒன்றில்) சுற்றிக்கொண்டு ஒரு பக்கம் துணியில்லாமல் இருப்பதையும் (இஷ்திமால்) தடை செய்தார்கள். (வியாபார முறைகளில்) முலாமஸாவையும், முனாபதாவையும் தடை செய்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5822

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்தவாறு விட்டுவிடுவதையும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு (குத்துக்காலிட்டு) அமர்வதையும் (இஹ்திபா) நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5823

உம்மு காலித் பின்த் காலித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டு வரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்பு நிறக் கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இதை நாம் யாருக்கு அணிவிக்கப் போகிறோம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். மக்கள் (பதில் வறாமல்) மெளனமாக இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று சொல்ல, அவ்வாறே (சிறுமியாக இருந்த) நான் தூக்கிக் கொண்டு வரப்பட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தால் அந்த ஆடையை எடுத்து எனக்கு அணிவித்தார்கள். மேலும், ‘(இந்த ஆடையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு’ என்று கூறிவிட்டு, ‘உம்மு காலிதே! இது ‘சனாஹ்’ (அழகாயிருக்கிறது)’ என்றார்கள். (நபி(ஸல்) அவர்கள் கூறிய) ‘சனாஹ்’ எனும் சொல், அபிசீனிய மொழிச் சொல்லாகும். அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5824

அனஸ்(ரலி) அறிவித்தார். (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது என்னிடம் அவர்கள் ‘அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள் நபி(ஸல்) அவர்கள் (இனிப்புப் பொருளை) மென்று இவனுடைய வாயிலிடுவதற்காக இவனை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்லும்வரை இவன் எதையும் சாப்பிட்டுவிட வேண்டாம்’ என்றார்கள். அவ்வாறே நான் அவனை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் ‘ஹுரைஸ்’ (அல்லது ‘ஜவ்ன்’) குலத்தார் தயாரித்த கறுப்பு நிறக் கம்பளி மேலங்கியை அணிந்துகொண்டு மக்கா வெற்றியின்போது தம்மிடம் வந்த தம் வாகன (ஒட்டக)த்திற்கு அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5825

இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.

(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி (நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, ‘இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறை நம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது’ என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார். அப்பெண்மணி, ‘(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை’ என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், ‘பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்து விடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்’ என்றார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்படி(ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்து கொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ ‘அனுமதிக்கப்பட்டவள்’ அல்லது ‘ஏற்றவள்’ நீ ‘அனுமதிக்கப்பட்டவள்’ அல்லது ‘ஏற்றவள்’ அல்லள்’ என்றார்கள். அப்துர் ரஹ்மான் அவர்களுடன் இருந்த அவர்களின் இரண்டு மகன்களையும் நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். ‘இவர்கள் உங்கள் புதல்வர்களா?’ என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதை விடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5826

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின்போது நான் நபி(ஸல்) அவர்களின் வலப் பக்கமும் இடப்பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இரண்டு மனிதர்களைப் பார்த்தேன். அதற்கு முன்பும் அவர்களை நான் பார்த்ததில்லை; அதற்குப் பின்பும் அவர்களை நான் பார்க்கவில்லை.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5827

அபூ தர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)’ என்றார்கள். நான் (மீண்டும்) ‘அவர் விபசார புரிந்தாலும் திருடினாலுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)’ என்றார்கள். நான் (மூன்றாவது முறையாக) ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் அபுல் அஸ்வத் அத்துஅலீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அபூ தர்(ரலி) அவர்கள் இதை அறிவிக்கும்போது ‘அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே’ என்று கூறிவந்தார்கள். அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன். (விபசாரம், திருடு போன்ற குற்றம் புரிந்த ஒருவர் இறக்கும்போதோ அதற்கு முன்போ மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரி ‘லாஇலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)’ என்று சொல்லியிருந்தால்தான் அவருக்கு இவ்வாறு மன்னிப்பு அளிக்கப்படும்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5828

அபூ உஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நாங்கள் உத்பா இப்னு ஃபர்கத்(ரலி) அவர்களுடன் (ஈரானிலுள்ள) ஆதர்பைஜானில் இருந்தபோது எங்களிடம் உமர்(ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டு விரல்களால் நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.

அறிவிப்பாளர் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் அறிந்த வரை (அவர்கள் குறிப்பிட்ட ‘இந்த அளவு’ என்பது, ஆடைகளின் கரைகளில் செய்யப்படும்) வேலைப்பாட்டைக் குறிக்கிறது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5829

அபூ உஸ்மான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நாங்கள் (ஈரானிலுள்ள) ஆதர்பைஜானில் இருந்தபோது உமர்(ரலி) அவர்கள் எங்களுக்கு, ‘நபி(ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. மேலும், (அந்த அளவை விவரிக்கும் வகையில்) தம் இரண்டு விரல்களை வரிசைப்படுத்திக் காட்டினார்கள்’ என்று கடிதம் எழுதினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைர்(ரஹ்) அவர்கள் (இதை அறிவிக்கையில்) நடுவிரலையும் சுட்டு விரலையும் உயர்த்திக் காட்டினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5830

அபூ உஸ்மான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நாங்கள் உத்பா இப்னு ஃபர்கத்(ரலி) அவர்களுடன் (ஆதர்பைஜானில்) இருந்தோம். அப்போது அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். (நபி(ஸல்) அவர்கள், ‘இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது’ என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘அபூ உஸ்மான்(ரஹ்) அவர்கள் தங்களின் சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் சைகை செய்தார்கள்’ என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5831

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ஹுதைஃபா(ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) மதாயின் (தைஃபூன்) நகரில் இருந்தார்கள். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (மஜூஸியான) ஊர்த் தலைவர் ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். ஹுதைஃபா(ரலி) அவர்கள் அதை அவரின் மீது வீசியெறிந்துவிட்டு, (அங்கிருந்தவர்களிடம்) ‘நான் இவரை(ப் பல முறை) தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்க்காத காரணத்தால் தான் நான் இதை அவரின் மீது வீசியெறிந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘தங்கம், வெள்ளி, சாதாரணப்பட்டு, அலங்காரப்பட்டு ஆகிய இவையெல்லாம் இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்’ என்றார்கள்’ எனக் கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5832

ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப்(ரஹ்) அவர்கள், ‘நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன்’ என்று (பின்வரும் ஹதீஸை) அறிவிக்கலானார்கள். உடனே நான், ‘நபி(ஸல்) அவர்களிடமிருந்தா?’ என்று கேட்க, அதற்கு அவர்கள் உறுதியான தொனியில், ‘(ஆம்) நபி(ஸல்) அவர்களிடமிருந்துதான்’ என்று கூறிவிட்டு, ‘(ஆண்களில்) இம்மையில் பட்(டா)டை அணிகிறவர் மறுமையில் ஒருபோதும் அதை அணியமாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எனறார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5833

ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் ‘முஹம்மத்(ஸல்) அவர்கள், ‘(ஆண்களில்) இம்மையில் பட்(டா)டை அணிகிறவர் மறுமையில் அதை அணியமாட்டார்’ என்றார்கள்’ எனக் கூறக் கேட்டேன்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5834

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆண்களில்) இம்மையில் பட்(டா)டை அணிகிறவர் மறுமையில் அதை அணியமாட்டார்’ என்று கூறினார்கள் என உமர்(ரலி) அவர்கள் சொல்ல கேட்டேன். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் வாயிலாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5835

இம்ரான் இப்னு ஹித்தான்(ரஹ்) அவர்கள் கூறினார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் பட்(டா)டை குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (சென்று) கேளுங்கள்’ என்றார்கள். நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (சென்று) கேட்டேன். அவர்கள், ‘இப்னு உமர்(ரலி) அவர்களைக் கேளுங்கள்’ என்று கூற நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அபூ ஹஃப்ஸ், அதாவது உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள், ‘மறுமையில் யாருக்கு எந்தப் பங்குமில்லையோ அவர்தாம் இம்மையில் பட்(டா)டை அணிவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என எனக்கு அறிவித்தார்கள். (இதைக் கேட்ட) நான், ‘உண்மையே சொன்னார்; அபூ ஹஃப்ஸ்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மீது பொய்யுரைக்கவில்லை’ என்று சொன்னேன்.

இதே ஹதீஸ், இம்ரான் இப்னு ஹித்தான்(ரஹ்) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5836

பராஉ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டாடையொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நாங்கள் அதைத் தொட்டு அதன் (மென்மை மற்றும் தரம்) காரணமாக வியக்கலானோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இதைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா?’ என்று கேட்க நாங்கள், ‘ஆம்’ என்றோம். நபி(ஸல்) அவர்கள் ‘சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆத் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை ஆகும்’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5837

ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும், அவற்றில் உண்ண வேண்டாமென்றும், (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்கார பட்டையும் அணிய வேண்டாமென்றும், பட்டின் மீது அமர வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5838

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சிவப்பு மென்பட்டு விரிப்புகளையு (‘மீஸரா), ‘கஸ்’ வகைப்பட்டுத் துணியையும் எங்களுக்குத் தடை செய்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5839

அனஸ்(ரலி) அறிவித்தார். ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்கும் ஏற்பட்டிருந்த சொறி சிரங்கின் காரணத்தால் பட்டாடை அணிந்துகொள் அவர்கள் இருவருக்கும் நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5840

அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கியொன்றை எனக்கு வழங்கினார்கள். நான் அதை அணிந்துகொண்டு வெளியே புறப்பட்டேன். அப்போது அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன். இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5841

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) உமர்(ரலி) அவர்கள் கோடு போட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, ‘இறைத்தூதர் அவர்களே! இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால், தங்களிடம் தூதுக் குழுக்கள் வரும்போதும் வெள்ளிக்கிழமையின் போதும் அணிந்து கொள்ளலாமே’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அதன் பிறகு உமர்(ரலி) அவர்களுக்கு, அவர்கள் அணிந்து கொள்வதற்கு ஏற்றாற் போன்று கோடு போட்ட பட்டு அங்கி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். எனவே உமர்(ரலி) அவர்கள், ‘(இறைத்தூதர் அவர்களே!) இது பற்றித் தாங்கள் சொன்னதை நான் கேட்டிருக்க (இப்போது) இதை எனக்கே அணியக் கொடுத்துள்ளீர்களே!’ என்று வினவ, நபி(ஸல்) அவர்கள், ‘அதை நான் உங்களுக்கு அனுப்பி வைத்து அதை நீங்கள் விற்றுக் கொள்ளவோ (பெண்களுக்கு) அணியத் தரவோதான்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5842

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புதல்வியார் உம்மு குல்ஸூம்(ரலி) அவர்கள்59 கோடுகள் போட்ட பட்டு சால்வையொன்றை அணிந்திருந்ததை கண்டேன்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5843

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்களுக்கெதிராக (அவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட அந்த இரண்டு துணைவியர் யார்?’ என உமர்(ரலி) அவர்களிடம் கேட்க வேண்டுமென ஒரு வருட காலமாக நான் (நினைத்துக்கொண்டு) இருந்தேன். ஆயினும், உமர்(ரலி) அவர்கள் மேல் (மரியாதை கலந்த) அச்சம் கொள்ளலானேன். இவ்வாறிருக்கையில் (ஹஜ்ஜுக்கு வந்த) உமர்(ரலி) அவர்கள் ஒரு நாள் (‘மர்ருழ் ழஹ்ரான்’ எனும்) ஓரிடத்தில் தங்கினார்கள். அப்போது (தம் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) அராக் (மிஸ்வாக்) மரத்தடிக்குச் சென்றார்கள். அவர்கள் (தம் தேவையை முடித்துக் கொண்டு) வந்தபோது அவர்களிடம் நான் அது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவுமே (அந்த இரண்டு துணைவியார்)’ என்று பதிலளித்துவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்.
அறியாமைக் காலத்தில் நாங்கள் பெண்களை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. இஸ்லாம் வந்து, அல்லாஹ் பெண்களைக் குறித்து (அவர்களின் உரிமைகளையும் கடமைகளையும் பேணுமாறு தன்னுடைய வேதத்தில்) குறிப்பிட்டபோது தான் பெண்களுக்கு எங்களின் மீதுள்ள உரிமையை அறிந்துகொண்டோம். ஆயினும், எங்கள் விவகாரங்கள் எதிலும் தலையிட பெண்களை நாங்கள் அனுமதிக்கவில்லை.

(இந்நிலையில் ஒருநாள்) எனக்கும் என் மனைவிக்குமிடையே (காரசாரமான) வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் என்னைக் கடுமையாகப் பேசிவிட்டார். உடனே நான் ‘நீ அங்கேயே (உன் இடத்திலேயே) இரு! (என் விஷயத்தில் தலையிடாதே)’ என அவரிடம் சொன்னேன். அவர் ‘என்னிடம் தான் நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள். (ஆனால்,) உங்கள் புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) நபி(ஸல்) அவர்களை (எதிர்த்துப் பேசி) மனவேதனைக்குள்ளாக்கியுள்ளார்’ என்றார். உடனே நான் (என் புதல்வி) ஹஃப்ஸாவிடம் சென்று, ‘அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்ய வேண்டாமென உன்னை எச்சரிக்கிறேன்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்களை மன வேதனைக்குள்ளாக்கிய விஷயத்தில் முதலில் நேராக ஹஃப்ஸாவிடமே சென்றேன். அடுத்து (நபி(ஸல்) அவர்களின் இன்னொரு துணைவியாரும் என் உறவினருமான) உம்மு ஸலமாவிடம் சென்று (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) நபி(ஸல்) அவர்களை (எதிர்த்துப் பேசி) மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளார்’ என்றார். உடனே நான் (என் புதல்வி) ஹஃப்ஸாவிடம் சென்று, ‘அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்ய வேண்டாமென உன்னை எச்சரிக்கிறேன். என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்களை மன வேதனைக்குள்ளாக்கிய விஷயத்தில் முதலில் நேராக ஹஃப்ஸாவிடமே சென்றேன். அடுத்து (நபி(ஸல்) அவர்களின் இன்னொரு துணைவியாரும் என் உறவினருமான) உம்மு ஸலமாவிடம் சென்று (ஹஃப்ஸாவிடம் சொன்னது போன்றே) கூறினேன். உடனே அவர், ‘உமரே! உம்மைக் கண்டு நான் வியப்புறுகிறேன். எங்கள் விவகாரங்கள் அனைத்திலும் நீங்கள் தலையிட்டுவிட்டு, இறுதியில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களின் துணைவியருக்கும் இடையிலான விவகாரத்தையும் கூட நீங்கள்விட்டுவைக்கவில்லை’ என்று கூறி (என்னை) மடக்கி விட்டார்.

மேலும், அன்சாரிகளில் (எனக்கு நண்பர்) ஒருவர் இருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அவையில் அவர் இல்லாமல் போய் நான் அங்கு இருந்தால் அங்கு நடப்பதை நான் அவருக்குத் தெரிவிப்பேன். (இதைப் போன்றே) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அவையில் நான் இல்லாமல் அவர் இருந்தால் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களை அவர் எனக்குத் தெரிவிப்பார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சுற்றியிருந்த (அரசர்கள் மற்றும் குலத்தலை)வர்கள் அனைவரும் அவர்களுடன் சுமூக உறவை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். (அன்றைய) ஷாம் நாட்டின் ‘ஃகஸ்ஸான்’ அரசன் ஒருவனைத் தவிர வேறு யாரும் (பகைமை கொண்டு) இருக்கவில்லை. அவன் (எங்களின் மீது போர் தொடுக்க) வரலாம் என நாங்கள் அச்சம் கொண்டிருந்தோம். (இந்நிலையில் ஒருநாள்) அந்த அன்சாரி (நண்பர்) திடீரென்று வந்து ‘ஒரு சம்பவம் நடந்துவிட்டது’ என்றார். நான் ‘என்ன அது? ஃகஸ்ஸானிய(மன்ன)ன் (படையெடுத்து) வந்துவிட்டானா?’ என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘அதைவிட மிகப்பெரிய சம்பவம் நடந்துவிட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்’ என்றார். உடனே நான் (புறப்பட்டு) வந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரின் அறைகளிலிருந்தும் அழுகைச் சத்தம் வந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களோ தம் மாடியறைக்கு ஏறி விட்டிருந்தார்கள். மாடியின் தலைவாசலில் பணியாளர் (ரபாஹ்) அமர்ந்துகொண்டிருந்தார்.

நான் அவரிடம் வந்து, ‘எனக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் செல்ல) அனுமதி கேள்’ என்றேன். (அவரும் உள்ளே சென்று அனுமதி கேட்க) நபி(ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். நான் (படியிலேறி அறைக்குள்) சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓர் (ஈச்சம்) பாயில் (படுத்து) இருந்தார்கள். அந்தப் பாய் அவர்களின் விலாவில் சுவடு பதித்திருந்தது. அவர்களின் தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அங்கு (அவர்களின் தலை மாட்டில்) பதனிடப்படாத தோல்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. (கால்மாட்டில்) கருவேல இலைகள் இருந்தன. அப்போது ஹஃப்ஸா, உம்மு ஸலமா ஆகியோரிடம் நான் கூறியதையும், நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அதைக் கேட்டு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள். (அந்த மாடியறையில்) நபி(ஸல்) அவர்கள் இருபத்தொன்பது நாள்கள் (தங்கி) இருந்தார்கள். பிறகு (அங்கிருந்து) இறங்கினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5844

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) இரவு (திடீரென) விழித்தெழுந்து ‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. இன்றிரவு இறக்கி வைக்கப்பட்ட சோதனைகள் தாம் என்ன? (இன்றிரவு) இறக்கி வைக்கப்பட்ட கருவூலங்கள்தாம் என்ன! (என் துணைவியரில்) இந்த அறைகளில் (உறங்கிக் கொண்டு) உள்ளோரை எழுப்பி உணர்வூட்டுகிறவர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருக்கும் எத்துணையோ பெண்கள், மறுமை நாளில் (துணியே கிடைக்காமல்) நிர்வாணமாய் இருப்பார்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5845

உம்மு காலித் பின்த் காலித்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டு வரப்பட்டன. அவற்றில் கறுப்பு நிறக் கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அவர்கள், ‘இந்த ஆடையை நாம் யாருக்கு அணிவிப்போம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?’ என்று கேட்க, மக்கள் (பதில் பேசாமல்) மெளனமாக இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். உடனே (சிறுமியாக இருந்த) நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன். உடனே அவர்கள் அந்த ஆடையைத் தம் கையால் எனக்கு அணிவித்து, ‘(இதை நீ உடுத்தி பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு’ என்று இருமுறை சொன்னார்கள். பிறகு அந்த ஆடையின் வேலைப்பாட்டைக் கவனித்துப் பார்க்கலானார்கள். பிறகு என் பக்கம் தம் கையால் சைகை காட்டி, ‘உம்மு காலிதே! இது ‘சனா’ (அழகாயிருக்கிறது)’ என்று சொல்லலானார்கள். நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ‘சனா’ எனும் அபிசீனியச் சொல்லுக்கு ‘அழகு’ என்று பொருள்.

அறிவிப்பாளர் இஸ்ஹாக் இப்னு ஸயீத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஆடையை உம்மு காலித்(ரலி) அவர்கள் அணிந்திருந்தைப் பார்த்ததாக எங்கள் குடும்பப் பெண் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5846

அனஸ்(ரலி) அறிவித்தார். ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5847

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘இஹ்ராம்’ கட்டியவர் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம், அல்லது குங்குமப்பூச் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5848

பராஉ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (அதிக உயரமாகவுமில்லாமல் குட்டையாகவும் இல்லாமல்) நடுத்தர உயரமுள்ளவர்களாய் இருந்தர்கள். நான் அவர்களைச் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். அதைவிட அழகான (அங்கி) எதையும் நான் பார்த்ததில்லை.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5849

பராஉ(ரலி) அறிவித்தார். நோயாளியை நலம் விசாரிப்பது, ‘ஜனாஸா’வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்முகல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் கூறுவது உள்ளிட்ட ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு, ‘கஸ்’ எனும் பட்டு கலந்த (எகிப்தியப்) பஞ்சாடை, தடித்த பட்டு, மென்பட்டுத் திண்டுகள் (மீஸரா) உள்ளிட்ட ஏழு பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5850

ஸயீத் அபூ மஸ்லமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம் (தொழுது வந்தார்கள்)’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5851

உபைத் இப்னு ஜுரைஜ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை பார்த்தேன். உங்கள் தோழர்களில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை’ என்று கூறினேன். அவர்கள் ‘அவை யாவை? இப்னு ஜுரைஜே!’ எனக் கேட்டார்கள். நான் ‘(கஅபாவைச் சுற்றி வரும்போது) அதன் மூலைகளில் ‘ஹஜருல் அஸ்வத்’ மற்றும் ‘ருக்னுல் யமானி’ ஆகிய) இரண்டு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடக் கண்டேன். மேலும், (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளை நீங்கள் அணிவதை கண்டேன். நீங்கள் (உங்கள் ஆடைக்கு) மஞ்சள் சாயமிடுவதைக் கண்டேன். மேலும், நீங்கள் சாயமிடுவதைக் கண்டேன். மேலும், நீங்கள் மக்காவில் இருக்கும்போது மக்கள் (துல்ஹஜ் மாத) பிறை பார்த்தவுடன் ‘இஹ்ராம்’ கட்டினாலும் நீங்கள் மட்டும் (துல்ஹஜ்) எட்டாவது நாள் வரும்வரை இஹ்ராம் கட்டாமலிருப்பதை கண்டேன் (இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?)’ என்று கேட்டேன்.

அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரண்டு மூலைகளை மட்டுமே தொட்டதை பார்த்தேன். (எனவேதான் நானும் அப்படிச் செய்கிறேன்.) (முடி அகற்றப்பட்ட) செருப்புகளைப் பொறுத்தவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முடியில்லாத காலணிகளை அணிவதை அதனுடன் அங்கசுத்தி (உளூ) செய்வதையும் பார்த்திருக்கிறேன். எனவே, நானும் அவற்றை அணிவதை விரும்புகிறேன். மஞ்சள் நிறமோ, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதனால் (தம் ஆடைக்குச்) சாயமிடுவதை பார்த்திருக்கிறேன். எனவே, நானும் அதனால் (என் ஆடைக்குச்) சாயமிடுவதை விரும்புகிறேன். (துல்ஹஜ் எட்டாம் நாள்) இஹ்ராம் கட்டுவதோ, இறைத்தூதர்(ஸல்) எட்டாம் நாள்) பயணத்திற்குத் தயாராகி நிற்கும் வரை இஹ்ராம் கட்டி நான் பார்த்ததில்லை.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5852

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இஹ்ராம் கட்டியவர் குங்குமப்பூச் சாயம் அல்லது ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், ‘(இஹ்ராம் கட்டியிருக்கும் போது) காலணிகள் கிடைக்காதவர், (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணியட்டும்; காலுறைகளைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து) கொள்ளட்டும்’ என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5853

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (இஹ்ராமின் போது) கீழங்கி இல்லாதவர் முழுக்கால் சட்டை அணிந்து கொள்ளட்டும். காலணிகள் இல்லாதவர் (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணிந்து கொள்ளட்டும் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5854

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தாம் அங்கசுத்தி (உளூ) செய்யும் போதும், தலைவாரிக் கொள்ளும் போதும், காலணி அணிந்துகொள்ளும் போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5855

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5856

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றி விடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5857

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலணிக்கு இரண்டு வார்கள் இருந்தன.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5858

ஈசா இப்னு தஹ்மான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் இரண்டு வார்கள் கொண்ட இரண்டு காலணிகளை எங்களுக்குக் காட்டினார்கள். (பின்னர் இது குறித்துக் கூறுகையில்) ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள், ‘இதுதான் நபி(ஸல்) அவர்களின் காலணியாகும்’ என்றார்கள்

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5860

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப்பட்ட தோல் கூடாரத்தில் ஒன்று திரட்டினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5861

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக்கொண்டு (அதில்) தொழுவார்கள். அதைப் பகல் நேரத்தில் (கீழே) விரித்துக் கொண்டு அதன் மீது அமர்வார்கள். மக்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்து அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள். இறுதியில் (இவ்வாறு இரவில் வந்து தொழும்) மக்கள் (எண்ணிக்கை) அதிகமாகி விடவே, நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, ‘மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்து வாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்) செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5862

மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார். (என் தந்தை) மக்ரமா(ரலி) அவர்கள் என்னிடம், ‘என் அன்பு மகனே! நபி(ஸல்) அவர்களிடம் மேலங்கிகள் சில வந்திருப்பதாகவும் அவற்றை அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக் கொண்டிருப்பதாகவும் எனக்குச் செய்தி எட்டியுள்ளது. எனவே, எம்மை அவர்களிடம் அழைத்துச் செல்’ என்றார்கள். அவ்வாறே நாங்கள் சென்று நபி(ஸல்) அவர்களை, அவர்களின் வீட்டில் கண்டோம். அப்போது என் தந்தை மக்ரமா(ரலி) அவர்கள் என்னிடம், ‘என் அருமை மகனே! எனக்காக நபி(ஸல்) அவர்களைக் கூப்பிடு’ என்றார்கள். அதை மரியாதைக் குறைவாகக் கருதிய நான், ‘உங்களுக்காக நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கூப்பிடுவதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என் அன்பு மகனே! (நபி-ஸல்) அவர்கள் சர்வாதிகாரி அல்லர்’ என்று சொல்ல, நான் நபி(ஸல்) அவர்களைக் கூப்பிட்டேன். அப்போது அவர்கள் தங்கப் பித்தான் பொருத்தப்பட்ட அலங்காரப்பட்டு மேலங்கியொன்றை எடுத்துக் கொண்டு வந்து, ‘மக்ரமாவே! இதை உங்களுக்காக நான் எடுத்து வைத்தேன்’ என்று சொல்லி மக்ரமாவிடம் அதைக் கொடுத்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5863

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். தங்க மோதிரம்’ அல்லது ‘தங்க வளையம்’, சாதாரணப் பட்டு, தடித்தப்பட்டு அலங்காரப்பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், நோயாளிகளை நலம் விசாரிப்பது, ‘ஜனாஸா’வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்வது, சலாமுக்கு பதிலுரைப்பது, விருந்து அழைப்பை ஏற்பது, சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவிடுவது மற்றும் அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவிபுரிவது ஆகிய ஏழு (நற்)செயல்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5864

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்க மோதிரத்தை அணியவேண்டாமென்று (ஆண்களுக்குத்) தடைவிதித்தார்கள். இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5865

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அதன் குமிழைத் தம் உள்ளங்கையை ஒட்டியவாறு (உள் பக்கமாக அமையும்படி) வைத்துக்கொண்டார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்று) மோதிரம் செய்து (அணிந்து) கொண்டார்கள். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் தங்களின் தங்க மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள்.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘தங்கமோதிரம்’ அல்லது ‘வெள்ளி மோதிரம்’ ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அதன் குமிழைத் தம் உள்ளங்கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும்படி) வைத்தார்கள். அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (இறைத்தூதர் முஹம்மது) என்று (இலச்சினை) பொறித்தார்கள். மக்களும் அதைத் தயாரித்து (அணிந்து) கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டபோது தம் மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு, ‘நான் இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன்’ என்றார்கள். பிறகு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். மக்களும் வெள்ளி மோதிரங்களை அணியலானார்கள். நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்கள் அந்த மோதிரத்தை அணிந்துகொண்டார்கள். பிறகு (அதை) உமர்(ரலி) அவர்களும், பிறகு உஸ்மான்(ரலி) அவர்களும் அணிந்தார்கள். இறுதியில் உஸ்மான்(ரலி) அவர்களிடமிருந்து அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5867

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்கமோதிரம் ஒன்றை அணிந்துகொண்டிருந்தார்கள். பிறகு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டு, ‘நான் இதை இனி ஒருபோதும் அணிய மாட்டேன்’ என்றார்கள். மக்களும் தங்களின் (தங்க) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5868

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஒருநாள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையில் வெள்ளிமோதிரம் ஒன்றை கண்டேன். பிறகு மக்கள், (அதைப்போன்று) வெள்ளி மோதிரங்களைச் செய்து (அணிந்து) கொண்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முதலில் அணிந்திருந்த) தம் (தங்க) மோதிரத்தை(க் கழற்றி) எறிந்தார்கள். பின்னர் மக்களும் தம் (தங்க) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்துவிட்டனர். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5869

ஹுமைத் இத்தவீல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அனஸ்(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் மோதிரம் எதையேனும் தயாரித்(து அணிந்)திருந்தார்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுகை நடத்தினார்கள்.) பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள். இப்போதும் நான் அவர்களின் (கல்) மோதிரம் மின்னுவதைப் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து தொழுதிருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள். (அது வரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5870

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதன் (கல் பதிக்கும்) குமிழும் வெள்ளியில் ஆனதாகவே இருந்தது. இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5871

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-)வே வந்துள்ளேன்’ என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் நின்றிருந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டுக் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். அவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதைக் கண்ட ஒருவர் ‘(இறைத்தூதர் அவர்களே!) இவர் தங்களுக்குத் தேவையில்லை என்றால் எனக்கு இவரை மணமுடித்துத் தாருங்கள் என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘இவருக்கு மஹ்ராக – மணக் கொடையாகக் கொடுக்க உம்மிடம் ஏதேனும் உள்ளதா?’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘(ஏதேனும் கிடைக்குமா என்று) பார்’ என்றார்கள். அந்த மனிதர் (எங்கோ) போய்விட்டுத் திரும்பிவந்து, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘போய்த் தேடுங்கள். இரும்பு மோதிரமாக இருந்தாலும் சரியே’ என்று சொல்ல, அந்த மனிதர் போய்விட்டுத் திரும்பி வந்து, ‘இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! ஓர் இரும்பு மோதிரம் கூடக் கிடைக்கவில்லை’ என்றார். அவர் கீழங்கி அணிந்திருந்தார். அவருக்கு மேல்துண்டு கூட இருக்கவில்லை. அந்த மனிதர், ‘என்னுடைய கீழங்கியை அவளுக்கு நான் மணக் கொடையாக வழங்குகிறேன்’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடைய கீழங்கியா? அதை இவள் அணிந்தால் அதிலிருந்து உம் மீது ஏதும் இருக்காது. அதை நீர் அணிந்துகொண்டால் அதிலிருந்து இவள் மீது ஏதும் இருக்காது’ என்றார்கள். உடனே அம்மனிதர் சற்று ஒதுங்கி அமர்ந்துகொண்டார். பிறகு அவர் திரும்பிச் செல்வதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரச்சொல்ல அவரும் அழைத்து வரப்பட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது?’ என்று கேட்க, அவர் இன்னின்ன அத்தியாயங்கள் என்று சில அத்தியாயங்களை எண்ணிக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் செய்து வைத்தேன்’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5872

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அரபியரல்லாதவர்களான (ரோம் நாட்டைச் சேர்ந்த) ‘ஒரு குழுவினருக்கு’ அல்லது ‘மக்களில் சிலருக்கு’க் கடிதம் எழுத விரும்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம், ‘அரபியரல்லாதோர் முத்திரையுள்ள கடிதத்தையோ ஏற்றுக் கொள்வார்கள்’ என்று சொல்லப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்து அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (இறைத்தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறித்தார்கள். இப்போதும் நான் ‘நபி(ஸல்) அவர்களின் விரலில்’ அல்லது ‘அவர்களின் கையில்’ அந்த மோதிரம் மின்னியதைப் பார்ப்பது போன்றுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5873

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, அபூ பக்ர்(ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர்(ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உஸ்மான்(ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்து விட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (இறைத்தூதர் முஹம்மது) என்றிருந்தது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5874

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, ‘நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் (‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். எனவே, அதைப் போன்று வேறெவரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்களின் சுண்டுவிரலில் அது மின்னியதை இப்போதும் நான் (என் மனத்திரையில்) பார்க்கிறேன்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5875

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்குக் கடிதம் எழுத விரும்பியபோது அவர்களிடம், ‘தங்கள் கடிதம் முத்திரையிடப்படாமலிருந்தால் அதை ரோமர்கள் ஒருபோதும் படிக்கமாட்டார்கள்’ என்று கூறப்பட்டது. எனவே, நபி(ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (இறைத்தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. நான் அவர்களின் கையில் (பிரகாசித்த) அதன் வெண்மையை (இப்போதும்) பார்ப்பது போன்று உள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5876

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைச் செய்து, அதன் குமிழைத் தம் உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்தார்கள். மக்களும் (அவ்வாறே) தங்க மோதிரங்களைச் செய்தனர். (இதற்கிடையில் ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) ஏறி, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘நான் அதைச் செய்திருந்தேன். ஆனால் அதை நான் இனி அணியமாட்டேன்’ என்று கூறிவிட்டு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள். மக்களும் எறிந்துவிட்டனர்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஜுவைரிய்யா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) அவர்கள் (நபி(ஸல்) அவர்கள் மோதிரத்தைத்) தம் வலக் கையில் அணிந்துகொண்டார்கள்’ என்று சொன்னதாகவே எண்ணுகிறேன்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5877

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (இறைத்தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறித்தார்கள். மேலும், ‘நான் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என இலச்சினை பொறித்துள்ளேன். எனவே, வேறு யாரும் அதைப் போன்று இலச்சினை பொறிக்க வேண்டாம்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5878

அனஸ்(ரலி) அறிவித்தார். அபூ பக்ர்(ரலி) அவர்கள் கலீஃபா (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது அவர்கள் (ஸகாத்தின் அளவை விளக்கி) எனக்குக் கடிதம் எழுதினார்கள். அப்போது (அதில் காணப்பட்ட) மோதிர (முத்திரையின்) இலச்சினை மூன்று வரிகள் கொண்டதாயிருந்தது. ‘முஹம்மது’ என்பது ஒரு வரியிலும், ‘ரசூல்’ என்பது ஒரு வரியிலும், ‘அல்லாஹ்’ என்பது ஒரு வரியிலும் இருந்தது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5879

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் மோதிரம் (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கரத்திலேயே இருந்தது. அவர்களுக்குப் பின் அபூ பக்ர்(ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் அபூ பக்ரின்) கரத்தில் இருந்தது. அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின் உமர்(ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் உமரின்) கரத்தில் இருந்தது. உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் வந்தபோது அவர்கள் (ஒருமுறை) அரீஸ் எனும் கிணற்றின் (விளிம்பின்) மீது அமர்ந்திருந்தபோது (ஏதோ சிந்தனையில் தம்மையறியாமல்) மோதிரத்தைக் கழற்றுவதும் அணிவதுமாக இருந்தார்கள். அப்போது அது (தவறி கிணற்றுக்குள்) விழுந்துவிட்டது. (அதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக) உஸ்மான்(ரலி) அவர்களுடன் நாங்கள் மூன்று நாள்கள் (அங்கு) போய்வந்து கொண்டிருந்தோம். பிறகு, கிணற்று நீரை இரைத்து(த் தூர்வாரி)ப் பார்த்தார்கள். அப்போதும் அது எங்களுக்குக் கிடைக்கவில்லை.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5880

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் (நோன்புப்) பெருநாளி(ன் தொழுகையி)ல் கலந்து கொண்டேன். அவர்கள் (அன்று) உரையாற்றுவதற்கு முன்பாகத் தொழுதார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன். ‘பிறகு பெண்கள் பகுதிக்கு வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் (தம்) மெட்டிகளையும் மோதிரங்களையும் (கழற்றி) பிலால்(ரலி) அவர்களின் துணியில் போடலானார்கள்’ என்று இப்னு வஹ்ப்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5881

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பெருநாளில் (தொழுகைத் திடலுக்குப்) புறப்பட்டுவந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் (தொழுகை எதுவும்) தொழவில்லை. பிறகு பெண்களிடம் வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் காதணிகளையும் நறுமண மாலைகளையும் (கழற்றி) தர்மமாகத் தந்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5882

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (என்னிடமிருந்து) அஸ்மா(ரலி) அவர்களின் மாலையொன்று (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தொலைந்து போய்விட்டது. நபி(ஸல்) அவர்கள் அதைத் தேடும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள். (தேடிச் சென்றபோது) தொழுகை நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் அங்கசுத்தி (உளூ) செய்யத் தண்ணீர் இல்லை. (அந்த இடத்தில்) அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவுமில்லை. அங்கசுத்தி (உளூ) செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். இந்த விஷயத்தை அவர்கள் (திரும்பி வந்து) நபி(ஸல்) அவர்களிடம் சொன்னார்கள். அப்போது அல்லாஹ் ‘தயம்மும்’ (செய்து கொள்ள அனுமதி வழங்கும்) வசனத்தை அருளினான். இப்னு நுமைர்(ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஓர் அறிவிப்பில், ‘அந்தக் கழுத்து மாலையை நான் (என் சகோதரி) அஸ்மாவிடமிருந்து இரவல் வாங்கியிருந்தேன்’ என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார் என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5883

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (நோன்புப்) பெருநாளில் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்பும் சரி அதற்குப் பின்பும் சரி அவர்கள் (கூடுதலாக) எதையும் தொழவில்லை. பிறகு பிலால்(ரலி) அவர்களுடன் பெண்களிடம் (மகளிர் பகுதிக்கு) வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே, ஒரு பெண் தன்னுடைய கம்மலை(க் கழற்றி)ப் போடலானார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5884

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் (‘பனூ கைனுகா’ கடைவீதியில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (ஃபாத்திமா(ரலி) அவர்களின் வீட்டுக்குச்) செல்லவே நானும் (அவர்களுடன்) சென்றேன். (வீட்டுக்கு வந்ததும்,) ‘பொடிப் பையன் எங்கே?’ என்று மும்முறை கேட்டார்கள். பிறகு ‘அலீயின் மகன் ஹசனைக் கூப்பிடுங்கள்’ என்றார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களின் புதல்வர் ஹஸன்(ரலி) அவர்கள் கழுத்தில் நறுமண மாலை ஒன்றை அணிந்தபடி நடந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் நபி(ஸல்) அவர்கள் இப்படித் தம் கையை விரித்தபடி அவரை நோக்கிச் சென்றார்கள். ஹஸன்(ரலி) அவர்களும் இவ்வாறு தம் கையை விரித்த படி (நபி(ஸல்) அவர்களை அணைத்திட) அவர்களை நோக்கி வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹஸன்(ரலி) அவர்களை அணைத்துக்கொண்டு, ‘இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நேசிப்பாயாக!’ என்று பிரார்த்தனை செய்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்படிப் பிரார்த்தனை செய்த பிறகு அலீயின் புதல்வர் ஹஸன்(ரலி) அவர்களை விட வேறெவரும் எனக்கு அதிகப் பிரியமானவராக இருக்கவில்லை.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5885

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5886

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், ‘அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்’ என்றார்கள். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர்(ரலி) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5887

(நபியவர்களுடைய துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். என் வீட்டில் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) ‘அலி’ ஒருவர் இருந்தபோது நபி(ஸல்) அவர்களும் அங்கு இருந்தார்கள். அப்போது அந்த அலி, என் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம் ‘அப்துல்லாஹ்வே! நாளை உங்களுக்கு தாயிஃப் நகரத்தின் மீது அல்லாஹ் வெற்றியளித்தால் ஃகைலானின் மகளை உனக்கு நான் காட்டுகிறேன். (அவளை மணந்துகொள்.) ஏனெனில், அவள் முன்பக்கம் நாலு (சதைமடிப்புகளுட)னும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்’ என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘(அலிகளான) இவர்கள் உங்களிடம் ஒருபோதும் வரவேண்டாம்’ என்றார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன். அவளுடைய வயிற்றுச் சதையின் நான்கு மடிப்புகளின் காரணத்தால் ‘முன்பக்கம் நான்கு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்’ என்று அந்த அலி சொன்னார். அந்த நான்கு மடிப்புகளின் ஓரங்கள் இரண்டு புறங்களிலும் சேர்ந்து பின்புறம் எட்டு ஓரங்களாக காட்சி தருவதால் ‘பின்பக்கம் எட்டு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்’ என்று கூறினார். ‘தரஃப்’ (ஓரம்) எனும் சொல் ஆண்பாலாயினும், அது வெளிப்படையாகக் குறிப்பிடாததால் ‘அர்பஉ’ (நான்கு), ‘ஸமான்’ (எட்டு) ஆகிய எண்கள் (இலக்கண விதிக்கு மாறாக) ஆண்பாலாகவே (மூலத்தில்) குறிப்பிடப்பட்டுள்ளன.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5888

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5889

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5890

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது ஆகியன இயற்கை மரபுகளில் அடங்கும். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5891

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5892

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தம் தாடியைப் பிடிப்பதுப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5893

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5894

முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் (தம் நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்களுக்குச் சிறிதளவே நரை ஏற்பட்டிருந்தது’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5895

ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அனஸ்(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் (தம் நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்களுக்குச் சாயம் பூசுகிற அளவிற்கு நரைக்கவில்லை. அவர்களின் தாடியிலிருந்த வெள்ளை முடிகளை நான் நினைத்திருந்தால் எண்ணிக் கணக்கெடுத்திருக்க முடியும்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5896

உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி மவ்ஹப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். (உம்மு ஸலமா ஒரு சிமிழைக் கொண்டு வந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி(ஸல்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டால், அவர் தம் நீர் பாத்திரத்தை உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபியவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன். அறிவிப்பாளர் இஸ்ராயீல் இப்னு யூனுஸ்(ரஹ்) அவர்கள், (சிமிழின் அளவைக் காட்டும் விதத்தில்) தம் மூன்று விரல்களை மடித்துக் காட்டினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5897

உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி மவ்ஹப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் நபி(ஸல்) அவர்களின் முடிகளிலிருந்து சாயமிடப்பட்ட ஒரு முடியை எங்களிடம் எடுத்துக் காட்டினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5898

உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி மவ்ஹப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். உம்மு ஸலமா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் முடியை சிவப்பானதாக எனக்குக் காட்டினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5899

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை; எனவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்தார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5900

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு அதிக உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறம் உடையவர்களாகவும் இல்லை; மாநிறயம் கொண்டவர்களாகவும் இல்லை; கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை; (தொங்கலான) படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. (மாறாக, இவற்றில் நடுநிலையாளராக இருந்தார்கள்.) நாற்பது வயதின் தொடக்கத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் தூதராக நியமித்தான். அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில் (வஹீ அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில் (வஹீ நின்றுபோன மூன்று ஆண்டுகள் நீங்கலாக) பத்து ஆண்டுகளும் மதீனா நகரில் பத்து ஆண்டுகளும் தங்கியிருந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையில் அல்லாஹ் அவர்களை இறக்கச் செய்தான்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5901

பராஉ(ரலி) அறிவித்தார். சிவப்பு நிற ஆடையில் நபி(ஸல்) அவர்களை விட அழகானவராக வேறெவரையும் நான் பார்க்கவில்லை.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன். மாலிக் இப்னு இஸ்மாயீல்(ரஹ்) அவர்களிடமிருந்து என் தோழர்களில் ஒருவர், ‘நபி(ஸல்) அவர்களின் தலைமுடி (நீண்டு வளர்ந்திருக்கும் சமயத்தில்) அவர்களின் தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தது’ என்று அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ இஸ்ஹாக் அம்ர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸபீஈ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸை பராஉ(ரலி) அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் அறிவிப்பதை கேட்டிருக்கிறேன். இதை அறிவிக்கும் போதெல்லாம் அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அவர்களிடமிருந்து ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸில், ‘நபி(ஸல்) அவர்களின் (தலை) முடி அவர்களின் காதின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது’ என்று இடம் பெற்றுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5902

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்றிரவு (இறையில்லம்) கஅபாவின் அருகே எனக்கு(க் கனவில்) என்னைக் காட்டப்பட்டது. அப்போது மனிதர்களில் மாநிறத்தில் நீ பார்த்ததிலேயே மிக அழகான மாநிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள்வரை நீண்ட முடிகளில் நீ பார்த்தவற்றிலேயே மிக அழகான முடி அவருக்கு இருந்தது. அதை அவர் வாரிவிட்டிருந்தார். அதிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அவர் ‘இரண்டு மனிதர்களின் மீது சாய்ந்தபடி’ அல்லது ‘இரண்டு மனிதர்களின் தோள்களின் மீது சாய்ந்தபடி’ இறையில்லத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். நான், ‘யார் இவர்?’ என்று கேட்டேன். மர்யமின் குமாரர் மஸீஹ்(ஈசா)’ என்று பதிலளிக்கப்பட்டது. அப்போது அங்கே கடும் சுருள் முடி கொண்ட, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கிருந்த கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், ‘யார் இவன்?’ என்று கேட்டேன். ‘மஸீஹுத் தஜ்ஜால்’ என்று பதிலளிக்கப்பட்டது. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5903, 5904

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் (தலை) முடி அவர்களின் தோள்களில் பட்டுக் கொண்டிருந்தது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5905

கத்தாதா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (தலை) முடி பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (தலை) முடி அலையலையானதாக இருந்தது. படிந்த முடியாகவும் இல்லை; சுருள் முடியாகவும் இல்லை; அவர்களின் காது மடல்களுக்கும் அவர்களின் தோளுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5906

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பருத்த கைகள் உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களைப் போன்று (வேறு யாரையும்) நான் பார்க்கவில்லை. நபி(ஸல்) அவர்களின் (தலை) முடி அலையலையானதாக இருந்தது. படிந்ததாகவும் இல்லை; சுருள் முடியாகவும் இல்லை.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5907

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பருத்த கைகளும் பருத்த பாதங்களும் உடையவர்களாகவும், முகம் அழகானவர்களாகவும் இருந்தார்கள். நான் அவர்களுக்கு முன்போ அவர்களுக்குப் பின்போ அவர்களைப் போன்று (வேறு யாரையும்) பார்க்கவில்லை. அவர்களின் உள்ளங்கைகள் விசாலமானவையாக இருந்தன.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5908,5909

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அல்லது அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பருத்த பாதங்களை உடையவர்களாகவும் அழகிய முகம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களைப் போல் (வேறெவரையும்) நான் பார்க்கவில்லை.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5910

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உறுதியான பாதங்களும் (உறுதியான) உள்ளங்கைகளும் உடையவர்களாக இருந்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5911,5912

அனஸ்(ரலி), அல்லது ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பருத்த உள்ளங்கைகளும் பருத்த பாதங்களும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களைப் போன்றவர் எவரையும் நான் பார்க்கவில்லை.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5913

முஜாஹித்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நாங்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது மக்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர், ‘அவனுடைய இரண்டு கண்களுக்குமிடையே ‘காஃபிர்’ (இறை மறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்’ என்றார். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், ‘நான் இவ்வாறு கேள்விப் பட்டதில்லை. ஆனால், நபி(ஸல்) அவர்கள், ‘(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் (எத்தகைய) உருவ அமைப்பில் இருந்தார் என்று அறிய வேண்டுமென்றால் உங்கள் தோழரை (என்னைப்) பாருங்கள். மூஸா(அலை) அவர்கள் எத்தகையவர் என்றால்) அவர்கள் பழுப்பு நிறமுடையவர்கள்; சுருள் முடி கொண்டவர்கள்; ஈச்ச மர நாரினால் மூக்கணாங்க கயிறு இடப்பட்ட சிவப்பு ஒட்டகம் ஒன்றின் மீது பயணம் செய்தபடி இருப்பார்கள். அவர்கள் (ஹஜ் செய்ய) ‘தல்பியா’ கூறியபடி (‘அல்அஸ்ரக்’ எனும்) பள்ளத்தாக்கில் இறங்கியபோது (அவர்களைக் கண்டேன். அந்தக் காட்சியை) நான் (இப்போதும்) பார்ப்பது போன்று உள்ளது’ என்றார்கள் எனத் தெரிவித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5914

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (என் தந்தை) உமர்(ரலி) அவர்கள், ‘(தலையில்) சடை வளர்த்திருப்பவர் (ஹஜ்ஜின் முடிவில் தலை முடியை) மழித்துக் கொள்ளட்டும். (சடை வளர்ப்பதன் மூலம்) களிம்பு தடவித் தலை முடியைப் படிய வைப்பர்களுக்கு ஒப்பாகி விட வேண்டாம்’ என்று சொல்ல கேட்டேன்.

(இதை அறிவிப்பாளரான சாலிம் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.) (என் தந்தை) இப்னு உமர்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தலை முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்துக் கொண்டதை பார்த்தேன்’ என்றுகூறுவார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5915

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோது) தலை முடியைக் களிம்பு தடவிப் படியவைத்தவர்களாக, ‘லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க, லா ஷரீ(க்)க, ல(க்)க லப்பைக்க, இன்னல் ஹம்த வந்நிஅமத்த ல(க்)க வல்முல்(க்)க, லா ஷரீ(க்)க லக்க’ என்று கூற கேட்டேன். இந்த வார்த்தைகளை விட அதிகமாக அவர்கள் எதையும் கூறவில்லை. (பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன். இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன். இணையில்லாதோனே! உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாணவர் எவருமில்லை).

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5916

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார். நான் (‘விடைபெறும்’) ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து இன்னும் விடுபடாமலிருக்க அவர்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்களே!’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியவைத்து விட்டேன். மேலும், என் தியாக (குர்பானி)ப் பிராணிக்கு (அடையாள) மாலை தொங்கவிட்டு விட்டேன் எனவே, நான் (ஹஜ் செய்து, அந்தப் பிராணியை) அறுக்கும் வரை இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5917

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) எந்த விஷயத்தில் தமக்கு (இறைக்) கட்டளை ஏதும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக் காரர்களுடன் ஒத்துப்போவதை விரும்பி வந்தார்கள். வேதக்காரர்கள் தங்களின் தலை முடியை (வகிடெடுத்து வாரிவிடாமல் நெற்றியில்) தொங்கவிட்டுவந்தார்கள். இணைவைப்பாளர்கள் தங்கள் தலை(முடி)களை வகிடு எடுத்துப் பிரித்துவந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் (முதலில்) முன் தலைமுடியை (நெற்றியில்) தொங்கவிட்டு வந்தார்கள். பிறகு அதை (வகிடெத்து)ப் பிரித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5918

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தபோது அவர்களின் தலை வகிடுகளில் (அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன் பூசியிருந்த) நறுமணப் பொருள் மின்னியதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்துல்லாஹ் இப்னு ரஜாஉ(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘நபி(ஸல்) அவர்களின் வகிட்டில்’ என்று (ஒருமையாக) வந்துள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5919

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களின் துணைவியானரான) என் சிறிய தாயார் மைமூனா பின்த் ஹாரிஸ்(ரலி) அவர்களின் இல்லத்தில் நான் ஓரிரவு தங்கினேன். அந்த இரவில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மைமூனா(ரலி) அவர்களிடம் தங்கியிருந்தார்கள். இரவில் (‘தஹஜ்ஜுத்’ தொழுகை) தொழுவதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நான் (எழுந்து) அவர்களுக்கு இடப் பக்கமாக(ப் போய்) நின்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என் தொங்கும் முடியைப் பிடித்துத் தம் வலப் பக்கத்தில் என்னை நிறுத்திக் கொண்டார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அபூ பிஷ்ர்(ரஹ்) அவர்களின் இந்த அறிவிப்பில், ‘என் தொங்கும் முடியைப் பிடித்து’ அல்லது ‘என் தலையைப் பிடித்து’ என்று (ஐயப்பாட்டுடன்) இடம் பெற்றுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5920

நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார் இப்னு உமர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடுமி (‘கஸஉ’) வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியேற்றேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் இப்னு ஹஃப்ஸ்(ரஹ்) கூறினார். நான், உமர் இப்னு நாஃபிஉ(ரஹ்) அவர்களிடம் ‘ ‘கஸஉ’ (குடுமி) என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஒருவர் சிறுவனின் தலை முடியை மழிக்கும்போது (சிறிது மழித்துவிட்டு), இங்கு அங்குமாக (சிற்சில இடங்களில் மட்டும்) முடியை (மழிக்காமல்) அப்படியேவிட்டுவிடுவதாகும்’ என்று கூறி, தம் நெற்றி முடி மற்றும் தலையின் இரண்டு பக்கங்களையும் எங்களிடம் கட்டிக் காட்டினார்கள். உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களிடம், ‘சிறுமி, சிறுவன் இருவருக்கும் இதே சட்டம் தானா?’ என்று கேட்கப்பட்டது? அவர்கள் ‘எனக்குத் தெரியாது. ஆனால், உமர் இப்னு நாஃபிஉ(ரஹ்) ‘சிறுவன்’ என்று (மட்டும்) தான் கூறினார்கள்’ என பதிலளித்துவிட்டு, ‘இது தொடர்பாக உமர் இப்னு நாஃபிஉ(ரஹ்) அவர்களிடம் திரும்பத் திரும்ப நான் கேட்டதற்கு அவர்கள், ‘சிறுவனுக்கு நெற்றியின் இருபக்க முடிகளையும் பிடறி முடிகளையும் அப்படியே விட்டுவிடுவதால் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ‘கஸஉ’ என்பது அவனுடைய தலையில் முடி எதுவும் இல்லாதிருக்க அவனுடைய நெற்றியில் மட்டும் முடியை அப்படியே விட்டுவிடுவதாகும். (இதுதான் கூடாது). இவ்வாறே தலையின் ஒரு பக்கம் மட்டும் முடியை மழித்து மறுபக்கம் அப்படியே விட்டு விடுவதும் கூடாது’ என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5921

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல்விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5922

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியபோது நான்அவர்களுக்கு என் கையால் நறுமணம் பூசிவிட்டேன். மேலும், (இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்டபோதும்) ‘மினா’வில் வைத்து (அங்கிருந்து) அவர்கள் (தவாஃபுஸ் ஸியாரத் செய்ய) புறப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு நறுமணம் பூசினேன்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5923

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு, அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசிவந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களின் தலையிலும் அவர்களின் தாடியிலும் என்னால் காணமுடிந்தது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5924

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். ஒருவர் ஒரு துவாரத்தின் வழியாக நபி(ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தம் தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்தையறிந்த) நபி(ஸல்) அவர்கள், ‘நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள், நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலிருப்பவர்களின் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5925

ஆயிஷா(ரலி)அறிவித்தார். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தலையை நான் வாரிவிட்டிருக்கிறேன். இதே ஹதீஸ் ஆயிஷா(ரலி)அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5926

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தலைவாரிக் கொள்ளும்போதும் சரி, அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்யும்போதும் சரி இயன்ற வரை வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதே அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5927

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல்லாஹ் கூறினான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பிய அளவிற்கு) நானே பிரதிபலன் அளிக்கிறேன். (மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:) நோன்பாளியின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையை விட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5928

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியபோது நான் அவர்களுக்கு என்னிடமிருந்ததிலேயே மிக நல்ல வாசனைப் பொருளைப் பூசிவந்தேன்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5929

ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் இப்னி அனஸ்(ரஹ்) அறிவித்தார். அனஸ்(ரலி) (தமக்கு அன்பளிப்பாகத் தரப்படும்) நறுமணப் பொருளை மறக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். மேலும், அவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட) நறுமணப் பொருளை மறுத்ததில்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5930

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜத்துல் வதா) ‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் என் இரண்டு கைகளால் அவர்களுக்கு (‘தரீரா’ எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5931

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். பச்சை குத்திவிடும், பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? அல்லாஹ்வின் வேதத்திலும் அது உள்ளதே! ‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கி விலகியிருங்கள்’ (என்பதே அந்த (திருக்குர்ஆன் 59:7 வது) வசனம்).

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5932

ஹுமைத் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அறிவித்தார். முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) ஹஜ் செய்த ஆண்டில் சொற்பொழிவு மேடையின் மீது நின்றுகொண்டு (மெய்க்) காவலர் ஒருவராது கையிலிருந்த முடிக்கற்றை (சவுரி முடி) ஒன்றை எடுத்துக் காட்டி, ‘(மதீனாவாசிகளே!) உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இது போன்றதைத் தடை செய்து, ‘பனூஇஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் அவர்களின் பெண்கள் இதைப் பயன்படுத்தியபோது தான்’ என்று சொல்ல கேட்டேன்’ எனக் கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5933

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள், ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5934

ஆயிஷா(ரலி) அறிவித்தார். அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவரின் தலைமுடி கொட்டிவிட்டது. எனவே, அவரின் உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஒட்டு முடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்’) என்று கூறினார்கள்.
இதே ஹதீஸ் ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5935

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார். ஒரு பெண் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் என் மகளுக்கு மணமுடித்துவைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளுடைய தலை முடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ (அவளை அழகுபடுத்தும்படி) என்னைத் தூண்டுகிறார். எனவே, அவளுடைய தலையில் நான் ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா?’ என்று கேட்டார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் சபித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5936

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் (‘அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும்’ என்று) சபித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5937

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.)
இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்), ‘பல் ஈறுகளிலும் பச்சை குத்தப்படுவதுண்டு’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5938

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார். முஆவியா(ரலி) மதீனாவுக்கு இறுதியாக வந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றினார்கள். மேலும், முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, ‘இந்த ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் செயலை யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் இதை போலி (‘ஸூர்’) என அழைத்தார்கள்’ என்று ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்)’ என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5939

அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) பச்சைகுத்திவிடும் பெண்களையும் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்கிக் கொள்ளும் பெண்களையும் அழகிற்காக பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்களையும் (மொத்தத்தில்) அல்லாஹ் படைத்த உருவ அமைப்பை மாற்றும் பெண்களை சபித்தார்கள். (இதைக் கேள்விப்பட்ட) உம்மு யஅகூப் என்ற பெண், ‘என்ன இது (இவ்வாறெல்லாம் சபித்தீர்களாமே)?’ என்று கேட்டதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும், நான் ஏன் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். (நீங்கள் குறிப்பிட்ட) அதை நான் அதில் காணவில்லையே!’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய்: ‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகி இருங்கள்’ (எனும் 59:7 வது வசனமே அது) என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5940

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் பச்சை குத்தி விடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் சபித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5941

அஸ்மா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, ‘இறைத்தூதர் அவர்களே! என் மகளுக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டு அதன் காரணத்தால் அவளுடைய தலைமுடி கொட்டிவிட்டது. அவளை நான் மணமுடித்துக் கொடுத்திருக்கிறேன். அவளுடைய தலை முடியுடன் ஒட்டுமுடி வைக்கலாமா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்)’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5942

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பச்சை குத்துபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டு முடி வைத்துக் கொள்பவளையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5943

அல்கமா(ரஹ்) அறிவித்தார். ‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்திலுள்ள முடிகளை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) அல்லாஹ்வின் (இயற்கையான) படைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறிவிட்டு, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டதே’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5944

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘கண்ணேறு (திருஷ்டிபடுவது) உண்மைதான்’ என்று கூறினார்கள். மேலும், பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5945

அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அறிவித்தார். என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி) குருதி உறிஞ்சி எடுக்கும் அடிமை ஒருவரை விலைக்கு வாங்கி, அவரின் குருதி உறிஞ்சி கருவிகளை உடைத்தபோது) அவர்களை நான் கண்டடேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் இரத்தத்தின் விலையையும், நாய் விற்ற காசையும் (பெறக் கூடாதெனத்) தடை செய்தார்கள். மேலும், வட்டி உண்பவனையும் அதை உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் (சபித்தார்கள்.)

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5946

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பச்சை குத்தும் பெண்ணொருத்தி உமர்(ரலி) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உமர்(ரலி), ‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: பச்சை குத்துவதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடமிருந்து (ஏதேனும்) செவியுற்றவர் (எவரேனும் உங்களில்) இருக்கிறாரா?’ என்று (எங்களிடம்) கேட்டார்கள். நான் எழுந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! நான் செவியுற்றிருக்கிறேன்’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘என்ன செவியுற்றீர்கள்?’ என்று கேட்க, ‘(பெண்களே! பிறருக்குப்) பச்சை குத்தி விடாதீர்கள்; நீங்களும் பச்சை குத்திக்கொள்ளாதீர்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல செவியுற்றேன் எனக் கூறினேன்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5947

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும், பச்சை குத்தி விடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் சபித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5948

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தின் முடியை அகற்றிக் கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) அல்லாஹ்வின் (இயல்பான) படைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக்கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5949

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாயும் (சிலைகள் முதலான) உருவப் படங்களும் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள். என அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5950

முஸ்லிம் இப்னு ஸுபைஹ்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அவர்களுடன் யஸார் இப்னு நுமைர்(ரஹ்) அவர்களின் இல்லத்தில் இருந்தோம். அப்போது யஸார்(ரஹ்) அவர்களின் வீட்டுத் திண்ணையில் சில சிலைகள் இருப்பதை மஸ்ரூக்(ரஹ்) கண்டார்கள். உடனே ‘அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் செவியேற்றதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூற கேட்டேன்’ என்று மஸ்ரூக்(ரஹ்) கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5951

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என (இடித்து)க் கூறப்படும். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5952

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டு வைத்ததில்லை.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5953

அபூ ஸுர்ஆ இப்னு அம்ர் இப்னி ஜரீர்(ரஹ்) கூறினார். நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைவபவர் ஒருவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), ‘என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்’ என்றார்கள். பிறகு (அங்கசுத்தி செய்வதற்காகத்) தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி தம் இருகைகளையும் அக்குள் வரை கழுவினார்கள். நான், ‘அபூ ஹுரைரா அவர்களே! இது (அக்குள் வரை கையைக் கழுவுவது), அல்லாஹ்வின் தூதரிடமிருந்து நீங்கள் செவியுற்ற விஷயமா?’ எனக் கேட்க, அவர்கள், ‘(அங்கசுத்தி செய்யப்படும் உடலுறுப்புகள் மறுமையில் வெண்மையாகும்போது அக்குள்வரை) வெண்மை பரவும்’ (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்) என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5954

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்னுடைய திரைச் சீலையொன்றால் நான் என்னுடைய அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, ‘மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்’ என்று கூறினார்கள். பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரண்டு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5955

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தார்கள். நான் குஞ்சம் வைத்த கெட்டித் திரைச் சீலையொன்றை (வீட்டில்) தொங்க விட்டிருந்தேன். அதில் உருவச் சித்திரங்கள் இருந்தன. நபி(ஸல்) அவர்கள் அதைக் கழற்றி விடும்படி என்னைப் பணித்தார்கள். எனவே, நான் அதைக் கழற்றி விட்டேன்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5956

(மேலும், ஆயிஷா(ரலி) கூறினார்) நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (அள்ளி, ஒன்றாகக்) குளித்து வந்தோம்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5957

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் (உயிரினங்களின்) உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை வாங்கினேன். நபி(ஸல்) அவர்கள் (வீட்டின்) கதவருகே வந்து நின்றார்கள். ஆனால், உள்ளே வரவில்லை. (இதைக் கண்டு திடுக்குற்ற) நான், ‘நான் செய்த பாவத்திற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுகிறேன்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘இந்தத் திண்டு என்ன?’ என்று கேட்டார்கள். நான், ‘இதன் மீது நீங்கள் அமர்வதற்காகவும் இதைத் தலையணையாக நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் நான் வாங்கினேன்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும். மேலும், (உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5958

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்.இதை இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர் அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) புஸ்ர் இப்னு ஸயீத்(ரஹ்) கூறினார்.(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் இப்னு காலித்(ரலி), பின்னர் நோய்வாய்ப்பட்டபோது நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்களின் வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. நான் (உடனிருந்த) நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான மைமூனா(ரலி) அவர்களின் வளர்ப்பு மகன் உபைதுல்லாஹ் இப்னு அஸ்வத் அல்கவ்லானீ(ரஹ்) அவர்களிடம், ‘உருவப் படங்களைப் பற்றி முன்பு ஒரு நாள் ஸைத்(ரலி) நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா?’ என்று கேட்டேன். உடனே உபைதுல்லாஹ்(ரஹ்), ‘துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் படத்)தைத் தவிர’ என்று அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று கேட்டார்கள். இந்த ஹதீஸ் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5959

அனஸ்(ரலி) அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருங்கள். (அதை நோக்கித் தொழுத) நபி(ஸல்) அவர்கள், ‘இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றன’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5960

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் (ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவதாக) வாக்களித்திருந்தார்கள். ஆனால், அவரின் வருகை தாமதப்பட்டது. இதையடுத்து நபி(ஸல்) அவர்களுக்குத் கவலை உண்டானது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் வெளியே புறப்பட ஜிப்ரீல்(அலை) அவர்களைச் சந்தித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தாம் அடைந்த கவலையை ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் (தெரிவித்து) முறையிட்டார்கள். அதற்கு அவர்கள், ‘(வானவர்களாகிய) நாங்கள் உருவப் படமும் நாயும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5961

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது வீட்டுக்குள் நுழையாமல் வாசலிலேயே நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் வெறுப்புத் தெரிந்தது. நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்விடமும் அல்லாஹ்வின் தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன்?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என்ன திண்டு அது?’ என்று கேட்டார்கள். நான், ‘நீங்கள் அமர்ந்துகொள்வதற்காகவும் தலையணையாகப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் தான் இதை வாங்கினேன்’ என்று சொன்னேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும்’ எனக் கூறினார்கள். மேலும், உருவப் படங்கள் இருக்கும் வீட்டினுள் (இறைக் கருணையை கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்’ என்றும் கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5962

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். நான் குருதி உறிஞ்சியெடுக்கும் அடிமை ஒருவரை (விலைக்கு) வாங்கினேன். (அவரின் குருதி உறிஞ்சி கருவிகளை உடைத்து விட்டேன். ஏனெனில்,) நபி(ஸல்) அவர்கள், இரத்தத்தின் விலையையும் நாய்விற்ற காசையும் விபசாரியின் சம்பாத்தியத்தையும் (ஏற்கக் கூடாதென்று) தடை செய்தார்கள். மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் பச்சை குத்தி விடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் உருவப் படங்களை வரைகிறவனையும் சபித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5963

நள்ர் இப்னு அனஸ் இப்னி மாலிக்(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் இருந்தேன். அவர்களிடம் மக்கள் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். (பொதுவாக) தம்மிடம் (விளக்க) கேட்கப்படாத வரை நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ்(ரலி) (எதையும்) கூற மாட்டார்கள். அப்போது (ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில்) இப்னு அப்பாஸ்(ரலி), ‘உலகில் ஓர் உருவப் படத்தை வரைகிறவர் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப்படுவார். ஆனால், அவரால் ஊத முடியாது’ என்று முஹம்மத்(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்’ எனக் கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5964

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , கழுதை வாகனத்தில் சேணம் விரித்து, அதன் மீது ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரித்து அதன் மீது அமர்ந்து பயணம் செய்தார்கள். தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக் கொண்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5965

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (மக்கா வெற்றியின்போது) நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்த சமயம் அவர்களை அப்துல் முத்தலிபின் குடும்பத்துச் சிறுவர்கள் வரவேற்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (அந்தச் சிறுவர்களில்) ஒருவரைத் தமக்கு முன்னாலும் மற்றொருவரைத் தமக்குப் பின்னாலும் (தம் ஒட்டகத்தில்) அமர்த்திக் கொண்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5966

அய்யூப்(ரஹ்) அறிவித்தார். இக்ரிமா(ரஹ்) முன்னிலையில், ‘(வாகனப் பிராணியின் மீது மூவர் அமர்ந்து செல்லக்கூடாது; அவ்வாறு அமர்ந்து செல்லும்) அந்த மூவரில் தீயவர் யார்?’ என்பது குறித்துப் பேசப்பட்டது. அப்போது இக்ரிமா(ரஹ்), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின்போது மக்காவுக்கு) வந்தார்கள். (அவர்களை வரவேற்ற சிறுவர்களில் அப்பாஸ்(ரலி) அவர்களின் புதல்வர்களான) ‘குஸம்(ரலி) அவர்களைத் தமக்கு முன்னாலும், ஃபள்ல்(ரலி) அவர்களைத் தமக்குப் பின்னாலும்’ அல்லது ‘ஃபள்ல்(ரலி) அவர்களைத் தமக்கு முன்னாலும், குஸம்(ரலி) அவர்களைத் தமக்குப் பின்னாலும்’ நபி(ஸல்) அவர்கள் (வாகனத்தில்) ஏற்றினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். இந்த மூவரில் (நபி, குஸம், ஃபள்ல்) ‘யார் தீயவர்?’ அல்லது ‘யார் நல்லவர்?’ என்று கூறமுடியுமா?’ என்று கேட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5967

முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்துகொண்டிருந்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே (ஒட்டகச்) சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டை தான் இருந்தது. (அவ்வளவு நெருக்கத்தில் வந்து கொண்டிருந்தேன்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘முஆதே!’ என்று அழைத்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)’ என்றேன். பிறகு சிறிது தூரம் சென்றபின், ‘முஆதே’ என்று (மீண்டும்) அழைத்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியச் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)’ என்றேன். சிறிது தூரம் சென்றபின் (மீண்டும்) ‘முஆதே!’ என்றார்கள். (அப்போதும்) நான் ‘இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)’ என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வணங்கிட வேண்டும். அவனுக்கு எதனையும் (எவரையும்) இணைகற்பிக்கக் கூடாது என்பதாகும்’ என்றார்கள். இன்னும் சிறிது தூரம் சென்ற பின் ‘முஆத் இப்னு ஜபலே’ என்று அழைத்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (சொல்லுங்கள்)’ என்று பதில் கூறினேன். அவர்கள், ‘அவ்வாறு (அல்லாஹ்வையே வணங்கி அவனுக்கு இணை வைக்காமல்) செயல்பட்டுவரும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘(இத்தகைய) மக்களை அவன் (மறுமையில்) வேதனைப்படுத்தாமல் இருப்பது தான் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமையாகும்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5968

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் கைபரிலிருந்து (மதீனாவை) நோக்கிப் புறப்பட்டோம். அபூ தல்ஹா(ரலி) சென்று கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நான் (வாகனத்தில்) அமர்ந்து கொண்டிருந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களின் வாகனத்தில்) அவர்களின் துணைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா) அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது (நபியவர்களின்) ஒட்டகம் இடறி விழுந்தது. நான் ‘(அந்த ஒட்டகத்தில்) பெண் இருக்கிறாரே!’ என்று சொன்னேன். பிறகு நான் (என் வாகனத்திலிருந்து) இறங்கியதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இவர் உங்கள் அன்னை’ என்று கூறினார்கள். பிறகு, நான் சேணத்தைக் கட்டினேன். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஏறிக் கொண்டு) பயணம் செய்யலானார்கள்.

மதீனாவை ‘நெருங்கியபோது’ அல்லது ‘பார்த்தபோது’ நபி(ஸல்) அவர்கள் ‘பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாக, எங்கள் இறைவனை வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக (நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறோம்)’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5969

அப்துல்லாஹ் இப்னு ஸைத் அல் அன்சாரி(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம்மிரு கால்களில் ஒன்றை மற்றொன்றின் மீது தூக்கி வைத்தவர்களாகப் பள்ளிவாசலில் (மல்லாந்து) படுத்திருப்பதை பார்த்தேன்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.