அதிகாரம் வகிப்பவர்கள்.
ஒரு முஸ்லிம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை கடமை என்று கருத வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்) (அல்குர்ஆன்: 4:56)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அதிகாரம் உடையவர்களுக்கு) நீங்கள் செவிசாயுங்கள்; கட்டுப்படுங்கள். உலர்ந்த திராட்சையைப் போன்ற தலையுடைய ஒரு நீக்ரோ அடிமை உங்களுக்குத் தலைவரானாலும் சரியே. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி
ஆயினும் அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் அவர்களுக்குக் கட்டுப்படுதல் கூடாது. ஏனெனில் அவர்களுக்குக் கட்டுப்படுவதை விட அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். ‘படைத்தவனுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் எந்தப் படைப்பினங்களுக்கும் கட்டுப்படுதல் கூடாது’ என்பது நபிமொழி. (அஹ்மத்)
அவர்களுக்கு எதிராக செயல்படுவதும் பகிரங்கமாக அவர்களுக்கு மாறுசெய்வதும் ஹராம் என்று கருத வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன்னுடைய அமீரிடம் ஒருவர் தான் விரும்பாததைக் கண்டால் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிகாரம் வகிப்பவருக்கு கட்டுப்படுவதை விட்டும் ஒருவர் ஒரு ஜான் வெளியேறிவிட்டால் அவர் அறியாமைக் காலத்தவர் மரணித்ததைப் போல் மரணிப்பார். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.
இறைவா! அவர்களைச் சரியாகவும் நேர்மையாகவும் நடக்க வைப்பாயாக. அதற்கு நீ உதவி செய்வாயாக. தீமையை விட்டும் அவர்களைப் பாதுகாப்பாயாக என்று இறைவனிடம் அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் சீராக நடந்தால் தான் சமுதாயம் சீராக இருக்கும். அவர்கள் சீர்கெட்டுப் போய்விட்டால் சமுதாயமும் சீர்கெட்டுப் போய்விடும்.
அவர்கள் பாவமான, ஹராமான காரியங்களைச் செய்தாலும் – அவர்கள் இறைநிராகரிப்புக் காரியங்களைச் செய்யாதவரை அவர்களுக்குப் பின்னால் நின்று தொழ வேண்டும். அவர்களோடு சேர்ந்து ஜிஹாதும் செய்ய வேண்டும். ஏனெனில் ‘அதிகாரம் வகிப்பவர்களின் சொல்லைக் கேளுங்கள்; அவர்களுக்குக் கட்டுப்படுங்கள்; அவர்கள் மீது சுமத்தப்பட்ட கடமைக்கு அவர்களே பொறுப்பு. உங்கள் மீது சுமத்தப்பட்ட கடமைக்கு நீங்களே பொறுப்பு!’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல்கமா (ரலி) அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம்.
உப்பாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் பின்வருமாறு உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொண்டோம். அதாவது நாங்கள் உற்சாகமாக இருக்கும்போதும் சோம்பலுடம் இருக்கும்போதும் கஷ்டமான நேரத்திலும் இலேசான நேரத்திலும், எங்கள் உரிமை பறிக்கப்படும் போதும் அதிகாரம் வகிப்பவர்களுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்; அவர்களுடைய சொல்லைக் கேட்போம்; அதிகாரம் குறித்து அவர்களிடம் தர்க்கம் செய்ய மாட்டோம். தெளிவான இறைநிராகரிப்பை அவர்களிடம் நாங்கள் கண்டால் ஒழிய. நூல்: புகாரி, முஸ்லிம்
நூல்: முஸ்லிமின் வழிமுறை.