நபித்தோழர்களை நேசிப்பது.
நபித்தோழர்களையும், நபியின் குடும்பத்தார்களையும் நேசிப்பது கடமை என்றும், அவர்கள் மற்ற முஃமின்கள், முஸ்லிம்களை விட சிறந்தவர்கள் என்றும் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். சிறப்பில் அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு உண்டு. இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்டதைப் பொருத்துத்தான் அவர்களுடைய உயர் அந்தஸ்து இருக்கும்.
அவர்களில் சிறந்தவர்கள் நேர்வழி பெற்ற கலீஃபாக்கள். அடுத்து சொர்க்கம் குறித்து நற்செய்தி கூறப்பட்ட பத்து பேர்கள். அவர்கள் நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்கள், தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), ஸுபைர் பின் அவாம் (ரலி), ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி), ஸயீத் பின் ஸைத் (ரலி), அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோர். அதற்கடுத்து பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள். அதற்கடுத்து மேற்கூறப்பட்ட பத்து பேர்கள் அல்லாமல் சொர்க்கம் குறித்து நற்செய்தி கூறப்பட்ட இன்னும் சிலர். உதாரணம்: பாத்திமா (ரலி), அவர்களின் மக்களான ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி), மேலும் ஸாபித் பின் கைஸ் (ரலி), பிலால் பின் ரிபாஹ் (ரலி) மற்றும் சிலர்.
இவ்வாறே இஸ்லாத்திற்காகப் பாடுபட்ட இமாம்களைக் கண்ணியப்படுத்துவதும், மதிப்பதும் கடமை என்றும் நம்ப வேண்டும்.
அவர்கள் யாரெனில், ஸஹாபாக்களை அடுத்தடுத்த காலங்களில் வாழ்ந்த, திருக்குர்ஆனை நன்கு அறிந்த, அதை மனனம் செய்து அதை அழகிய முறையில் ஓதக்கூடிய காரிகள், ஃபிக்ஹ் மற்றும் ஹதீஸ் கலை வல்லுநர்கள், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் போன்றவர்கள்.
நூல்: முஸ்லிமின் வழிமுறை