மனிதன் இயல்பாகவே அவசரப்படக் கூடியவனாக இருக்கிறான். “மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கிறான்” என்று அல்லாஹ் கூறுகிறான். (17:11) நிதானம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுகின்றது. அவசரம் ஷைத்தானின் புறத்திலிருந்து ஏற்படுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: பைஹகீ
ஒருவன் ஜமாஅத்துடன் தொழும் போது தனது வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ தொழுகின்ற பெரும்பாலோர் ருகூவிலும், சுஜூதிலும், பொதுவாக ஒவ்வொரு தக்பீரிலும் ஏன் ஸலாம் கொடுப்பது உட்பட எல்லா நிலைகளிலும் பெரும்பாலும் இமாமை முந்துவதைக் கவனிக்கலாம். ஏன் சில சமயம் அவன் கூட இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. பெரும்பாலோரிடம் சாதாரணமாகத் தோன்றக்கூடிய இத்தகைய செயல் குறித்து நபி (ஸல்) அவர்கள் மூலமாக கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது. அவர்கள் கூறினார்கள்: ‘இமாமுக்கு முன் தலையை உயர்த்துபவர், தமது தலையை கழுதையின் தலையாக அல்லாஹ் மாற்றி விடுவான் என்பதை அஞ்ச வேண்டாமா?’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம். தொழுகையாளி தொழுகைக்கு வரும்போதே அமைதியாகவும் கம்பீரமாகவும் வர வேண்டும் என்ற கட்டளை இருக்கும் போது தொழுகையில் எவ்வாறு இப்படி நடந்து கொள்ள முடியும்?
சிலர், இமாமை பிந்துவது ஒரு வகையில் இமாமை முந்துவதைப் போல எண்ணிக் கொள்கின்றனர். எனவே ஒரு விஷயத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பிக்ஹ் கலை அறிஞர்கள் இது விஷயத்தில் அழகான ஒரு அடிப்படையைக் கூறி இருக்கிறார்கள். என்னவெனில் இமாம் அல்லாஹ் அக்பர் என்று கூறி முடித்தவுடன் மஃமூம்கள் பின் தொடர ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முந்தவும் கூடாது. பிந்தவும் கூடாது. இதுவே சிறந்ததாகும். நபித்தோழர்கள் தம் தொழுகையில் நபி (ஸல்) அவர்களை முந்தாமலிருப்பதற்கு மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.
பர்ராஉ பின் ஆஸிப் (ரலி) கூறுகிறார்கள்: ‘நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் பின்னால் நின்று தொழுவார்கள். அவர்கள் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தி பிறகு தமது நெற்றியை நிலத்தில் வைக்காத வரை யாரும் (ஸஜ்தாவுக்காக) தமது முதுகை வளைப்பதை நான் பார்த்ததில்லை. அதன் பிறகே பின்னால் உள்ள அனைவரும் ஸஜ்தாவில் வீழ்வார்கள்’ (முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் முதுமையை அடைந்த போது, தமது அசைவுகளில் ஒரு விதத் தாமதம் ஏற்பட்ட போது தம் பின்னால் தொழக் கூடியவர்களுக்கு இப்படி உணர்த்துவார்கள்: ‘மக்களே! எனக்கு வயதாகி விட்டது. ருகூவிலும் சுஜூதிலும் என்னை முந்தாதீர்கள்’ முஆவியா பின் அபீ சுஃப்யான் அறிவிக்கக்கூடிய இச்செய்தி பைஹகீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்து அபூதாவூதிலும் உள்ளது.
இமாம் தொழுகை நடத்தும் போது தக்பீர் கூறுவதில் நபி வழிப்படி நடக்க வேண்டும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழியில் இவ்வாறு வந்துள்ளது: ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூவு செய்யும் போது தக்பீர் கூறுவார்கள்… பிறகு (ஸஜ்தாவுக்காக) குனியும் போது தக்பீர் சொல்வார்கள். பிறகு (ஸஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தும் போது தக்பீர் சொல்வார்கள். பிறகு (மீண்டும்) ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (ஸஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தும் போது தக்பீர் சொல்வார்கள். பிறகு இவ்வாறே தொழுது முடிக்கும் வரை அனைத்து ரக்அத்துகளிலும் நடந்து கொள்வார்கள். அதுபோல இரண்டாம் ரக்அத்தில் (அத்தஹிய்யாத்தில்) அமர்ந்த பிறகு (மூன்றாம் ரக்அத்துக்காக) எழும்போதும் தக்பீர் கூறுவார்கள்’ (புகாரி)
இமாம் தமது அசைவுகளுடன் தக்பீரையும் அமைத்துக் கொண்டால் மஃமூம்களும் முன்பு கூறப்பட்ட முறை பிரகாரம் இமாமை அக்கறையோடு பின்பற்றினால் ஜமாஅத்துடைய ஒழுங்கு அனைவருக்கும் நிறைவேறிவிடும்.