சூனியம், ஜோதிடம், குறி பார்த்தல்

பரவலாகக் காணப்படக்கூடிய ஷிர்க்கின் வகைகளில் சூனியம், ஜோதிடம், குறிபார்த்தல் ஆகியவையும் அடங்கும்.

சூனியம் செய்வது குஃப்ர் எனும் இறை நிராகரிப்பாகும். நாசத்தைத் தரக்கூடிய ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். அதில் தீமை இருக்கிறதே தவிர நன்மையில்லை. சூனியத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்: “(உண்மையில்) தங்களுக்கு தீங்கிழைப்பதையும் எவ்வித நன்மையையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள்” (2:102)
மேலும் கூறுகிறான்: “சூனியக்காரன் எங்கு சென்றாலும் (ஒரு போதும்) வெற்றி பெறமாட்டான்” (20:69) சூனியம் பார்க்கச் செல்பவன் காஃபிராவான். அல்லாஹ் கூறுகிறான்: “அவர்கள் சுலைமானுடைய ஆட்சியின் போது ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால் சுலைமான் ஒருபோதும் நிராகரிப்பவர் – காஃபிர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். மேலும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் இறக்கி வைக்கப்பட்டதையும் அவர்கள் பின்பற்றினார்கள். ஆனால் அவ்விருவரும் நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்று) நீங்கள் காஃபிர்களாகி விடாதீர்கள் என்று கூறி எச்சரிக்காத வரையில் எவருக்கும் அந்த சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை” (2:102)

சூனியக்காரன் பற்றிய சட்ட நிலை, அவனைக் கொலை செய்ய வேண்டும். அவனுடைய சம்பாத்தியம் விலக்கப்பட்டது, மோசமானது என்பதாகும். அறிவீனர்களும் அக்கிரமக்காரர்களும் பலவீனமான ஈமான் உடையவர்களும் சிலரின் மீது வரம்பு மீறுவதற்காக அல்லது அவர்களைப் பழிவாங்குவதற்காக சூனியம் செய்ய சூனியக்காரர்களிடம் செல்கிறார்கள்.

மேலும் மக்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சூனியத்தை எடுப்பதற்காக சூனியக்காரர்களிடம் செல்வதன் மூலம் ஹராமான செயலைச் செய்கிறார்கள். இத்தகையவர்கள் மீது கடமை என்னவெனில் அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி ஸூரத்துல் இக்லாஸ், ஸூரத்துல் ஃபலக், ஸூரத்துந் நாஸ் போன்ற அவனுடைய வார்த்தைகள் மூலம் நிவாரணம் தேட வேண்டும்.

மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். இப்படியிருக்க ஜோதிடம் பார்ப்பவன், குறி பார்ப்பவன் ஆகிய இருவரும் மறைவான விஷயங்களைத் தாம் அறிவதாக வாதிட்டால் அவ்விருவரும் மகத்துவமிக்க அல்லாஹ்வை நிராகரிப்பவர்களாவர். இவர்களில் பெரும்பாலோர் பணம் பறிப்பதற்காக அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். இதற்காக அவர்கள் மணலில் கோடு கிழித்துப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, பீங்கானில் நீர் உற்றி பார்ப்பது, கண்ணாடியில் பார்ப்பது போன்ற பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றனர்.

இவர்கள் ஒரு உண்மை கூறினால் 99 முறை பொய் கூறுவார்கள். கற்பனைகளை அள்ளி வீசக்கூடிய இவர்கள் கூறுவது எந்த ஒரு தடவை உண்மையாகிறதோ அதை மட்டும் இந்த அப்பாவி மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்காகவும், திருமணம், வியாபாரம் போன்ற காரியங்களில் நன்மை, தீமையை அறிந்து கொள்வதற்காகவும், காணாமல் போன பொருட்களை கண்டு பிடிப்பதற்காகவும் அவர்களிடம் செல்கின்றனர்.

இப்படி எதிர்காலத்தைக் கணித்துச் சொல்பவர்களிடம் சென்று அவர்கள் கூறுவதை ஒருவன் நம்பினால் அவன் காஃபிராவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனாவான். ஆதாரம்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ‘எவன் ஜோதிடம் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முஹம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட(வேதத்)தை நிராகரித்தவன் ஆவான். (அஹ்மத்)

ஆனால் அவர்களிடம் செல்பவன் மறைவானவற்றை அவர்கள் அறிவார்கள் என நம்பாமல் என்ன சொல்கிறார்கள் என்று பரிசோதிப்பதற்காகச் செல்வானாயின் அவன் காஃபிராக மாட்டான். மாறாக அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் ஜோசியக்காரனிடம் சென்று எதையேனும் கேட்டால் அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது’ (முஸ்லிம்).

ஆயினும் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படா விட்டாலும் நாற்பது நாட்கள் அவன் தொழுவதும் இப்பாவத்திற்காக தவ்பா செய்வதும் அவன் மீது கடமையாகும்.

இன்ஷா அல்லாஹ் எச்சரிக்கை தொடரும்.
This entry was posted in எச்சரிக்கை. Bookmark the permalink.