1594. நபி (ஸல்) அவர்களிடம் உம்மு ஸலமா (ரலி) அமர்ந்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) வந்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் பேசத் தொடங்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம், ‘இவர் யார்?’ என்று கேட்க, அவர்கள், ‘இது திஹ்யா (என்ற நபித்தோழர்)” என்று பதிலளித்தார்கள். (அப்போது அது ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம்” என்று உம்மு ஸலமா – ரலி – அவர்களுக்கு தெரியாது.) (பின்னர்) உம்மு ஸலமா (ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான், நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்னதாகத் தம் உரையில் குறிப்பிட்டதைச் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா கல்பீ அவர்கள் தாம் என்றே நான் நினைத்திருந்தேன் (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்று எனக்குத் தெரிய வந்தது)” என்று கூறினார்கள்.
நான் அறிவிப்பாளர் அபூ உஸ்மான் (ரஹ்) அவர்களிடம், ‘யாரிடமிருந்து இதை நீங்கள் செவியுற்றீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று பதிலளித்தார்கள்.