1568. நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. ‘பனூ கைனுகா’ கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் விட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். ‘இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா?’ என்று கேட்டார்கள். ஃபாத்திமா (ரலி) தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். ‘அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக் கொண்டிருக்கிறார்’ என்றோ அல்லது ‘மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்’ என்றோ நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹஸன் (ரலி)) ஓடிவந்தார். உடனே, நபி (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். ‘இறைவா! இவனை நீ நேசி! இவனை நேசிப்பவர்களையும் நீ நேசி!” என்று கூறினார்கள்.
1569. அலீ (ரலி) அவர்களின் மகன் ஹஸன் (ரலி), நபி (ஸல்) அவர்களின் தோள் மீது அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக!” என்று பிரார்த்திக்கக் கண்டேன்.