இனிய சொற்கள் கூறுதல்.
1449. வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :4826 அபூ ஹுரைரா (ரலி).
1450. திராட்சையை (‘கண்ணியமானது’ எனும் பொருள் கொண்ட) ‘அல்கர்ம்’ என்று பெயரிட்டழைக்காதீர்கள். ‘மோசமான காலமே!’ என்று (காலத்தை ஏசிக்) கூறாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்தவன்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6182 அபூ ஹுரைரா (ரலி).
1451. உங்களில் எவரும் ‘உன் ரப்புக்கு (அதிபதிக்கு) உணவு கொண்டு, உன் ரப்புக்கு உளூச் செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு’ என்று கூற வேண்டாம். ‘என் எஜமான்; என் உரிமையாளர்’ என்று கூறட்டும்.”என் அடிமை; என் அடிமைப் பெண்” என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். ‘என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்” என்று கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :2552 அபூ ஹூரைரா (ரலி).