ஓதிப் பார்க்க கூலி வாங்க அனுமதி.

1420. நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், ‘இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!” என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து ‘கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?’ என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், ‘ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!” என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..” என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். ‘இதைப் பங்கு வையுங்கள்!” என்று ஒருவர் கேட்டபோது, ‘நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!” என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டுவிட்டு, ‘நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

புஹாரி :2276 அபூஸயீத் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , . Bookmark the permalink.