1330. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், ‘எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.”.. அல்லது ‘இவருக்கு விருந்தளிப்பவர் யார்?.”.. என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘நான் (விருந்தளிக்கிறேன்)” என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து” என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, ‘நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை” என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், ‘உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு” என்று கூறினார். அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச் சரிசெய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், ‘தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்” என்றும் (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.
1331. நாங்கள் நூற்றி முப்பது பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள், ‘உங்களில் எவரிடமாவது உணவு இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் சுமார் ஒரு ஸாவு அளவு உணவு தான் இருந்தது. அது தண்ணீர் கலந்து குழைக்கப்பட்டது. பிறகு, மிக உயரமான (முரட்டு சுபாவம் கொண்ட) தலைவிரிகோலமான இணைவைக்கும் மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டி வந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘(இவை) விற்பதற்காகவா? அன்பளிப்பாகவா?’ என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை. விற்பதற்காகத் தான் (கொண்டு வந்துள்ளேன்)” என்று பதிலளித்தார். அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி (ஸல்) அவர்கள் வாங்கினார்கள்; அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொறிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ‘அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்றி முப்பது பேரில் ஒருவர் விடாமல் அனைவருக்குமே அதன் ஈரலில் இருந்து ஒரு துண்டை நபி (ஸல்) அவர்கள் துண்டித்துத் தந்திருந்தார்கள். அங்கிருந்தவருக்கு அதைக் கொடுத்தார்கள். அங்கில்லாதவருக்கு எடுத்து (பாதுகாத்து) வைத்தார்கள். இரண்டு (அகன்ற) தட்டுகளில் அவற்றை வைத்தார்கள். அனைவரும் உண்டார்கள். நாங்களும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரண்டு தட்டுகளும் அப்படியே மீதமாகிவிட்டன. அவற்றை நாங்கள் ஒட்டகத்தில் ஏற்றிச் சென்றோம்.
1332. திண்ணைத் தோழர்கள் ஏழ்மை வயப்பட்ட மனிதர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் ‘இருவருக்குரிய உணவு யாரிடம் உள்ளதோ அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை அழைத்துச் செல்லட்டும்! நான்கு பேருக்குரிய உணவு இருந்தால் ஐந்தாவது, ஆறாவது நபர்களாக திண்ணைத் தோழர்களை அழைத்துச் செல்லட்டும்!’ எனக் கூறினார்கள். அபூ பக்ர் (ரலி) மூன்று நபர்களை அழைத்துச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள் பத்து நபர்களை அழைத்துச் சென்றனர். (வீட்டில்) நானும் என் தந்தை (அபூ பக்ரும்) தாயும் என்னுடைய வீட்டிற்கும் (என் தந்தை) அபூ பக்ருடைய வீட்டிற்கும் கூட்டாகப் பணி செய்து வரும் வேலையாளும் இருந்தோம். என் மனைவியும் என்று அவர் குறிப்பிட்டாரா இல்லையா என்று அடுத்த அறிவிப்பாளர் சந்தேகம் தெரிவிக்கிறார். அபூபக்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு, இஷாத் தொழும் வரை அங்கேயே தங்கிவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய அளவு கழிந்த பின் (வீட்டிற்கு) வந்தனர். ‘உங்கள் விருந்தினரை விட்டுவிட்டு எங்கே தங்கி விட்டீர்?’ என்று அவர்களின் மனைவி கேட்டனர். அதற்கு அபூபக்ர் (ரலி), ‘அவர்களுக்கு இன்னும் நீ இரவு உணவு அளிக்கவில்லையா?’ என்று திருப்பிக் கேட்டார்கள். ‘உணவை முன் வைத்த பின்பும் நீங்கள் வருவது வரை அவர்கள் உண்ண மறுத்துவிட்டனர்’ என்று மனைவி கூறினார். (என் தந்தை கோபிப்பார் என்பதை அறிந்த) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.
‘அறிவிலியே!’ ‘மூக்கறுபடுவாய்!’ என என்னை ஏசினார்கள். பிறகு மகிழ்வற்ற நிலையில் ‘சாப்பிடுங்கள்! அல்லாஹ்வின் மேல் ஆணையாக ஒருபோதும் நான் சாப்பிட மாட்டோம்’ என்று (தம் குடும்பத்தினரை நோக்கிக்) கூறினார்கள். நாங்கள் உணவின் ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடும்போது அதன் அடிப்புறத்திலிருந்து அதை விட அதிகமாக வளர்ந்து கொண்டே இருந்தது. அனைவரும் வயிறு நிரம்ப உண்டார்கள். அதற்கு முன்னிருந்ததை விட உணவு அதிகமாக இருந்தது. முன்பிருந்த அளவு அல்லது அதை விட அதிகமாக உணவு இருப்பதைக் கண்ட அபூபக்ர் (ரலி) ‘பனூ ஃபிராஸ் சகோதரியே! இது என்ன?’ என்று (தம் மனைவியிடம்) வினவினார்கள். அதற்கவர் ‘என் கண் குளிர்ச்சியின் மேல் ஆணை! இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு இப்போது அதிகமாக உணவு உள்ளது என்றார். பிறகு அபூ பக்ரும் சாப்பிட்டார்கள். சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்தது ஷைத்தானிடமிருந்து ஏற்பட்டுவிட்டது ஒரு கவளத்தை எடுத்து உண்டார்கள். பின்பு நபி (ஸல்) அவர்களிடம் எஞ்சிய உணவை எடுத்துச் சென்றார்கள். காலை வரை அது அங்கேயே இருந்தது. எங்களுக்கும் ஒரு கூட்டத்தினருக்குமிடையே உடன் படிக்கை ஒன்று இருந்தது. அந்தக் கெடு முடிந்துவிட்டது. (அது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களிடம் வந்திருந்தவர்களை) பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைவரின் கீழ் அமைத்தோம். அவர்களில் ஒவ்வொருவருடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். அவர்கள் அனைவரும் அந்த உணவிலிருந்து சாப்பிட்டார்கள்.