கடனில் சிறிது தள்ளுபடி செய்தல்.

1003. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக் கொள்ளும் சத்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும்படியும், மென்மையாக நடந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவ்வாறு செய்ய மாட்டேன்” என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) புறப்பட்டு வந்து, ‘நன்மை(யான செயலைச்) செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே?’ என்று கேட்டார்கள். அந்த மனிதர், ‘நானே இறைத்தூதர் அவர்களே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றக் கொள்கிறேன்;) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்” என்று கூறினார்.

புஹாரி : 2705 ஆயிஷா (ரலி).

1004. இப்னு அபீ ஹத்ரத் (ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளிவாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி (ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து ‘கஹ்பே!” என்று கூப்பிட்டார்கள். ‘இதோ வந்தேன் இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். ‘பாதி’ என்பதைக் காட்டும் விதமாகச் சைகை மூலம் காட்டி ‘உம்முடைய கடனில் இவ்வளவைத் தள்ளுபடி செய்வீராக!” என்று கூறினார்கள். ‘அவ்வாறே செய்கிறேன்; அல்லாஹ்வின் தூதரே!’ என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத் (ரலி) அவர்களிடம் ‘எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக!” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

புஹாரி :457 கஹ்ப் பின் மாலிக் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.