993. எங்களில் சிலருக்கு உபரி நிலங்கள் சில இருந்தன. அவர்கள், ‘நாங்கள் அவற்றை அவற்றின் விளைச்சலில் மூன்றிலொரு பங்குக்கோ, கால் பங்குக்கோ, அரைப் பங்குக்கோ குத்தகைக்கு விடுவோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘விளைச்சல் நிலம் வைத்திருப்பவர் அதில் தானே பயிரிடட்டும்; அல்லது தன் சகோதரருக்கு (மனீஹாவாகக்) கொடுத்து விடட்டும். அப்படிக் கொடுக்க மறுத்தால் அவர் தம் நிலத்தைத் தம்மிடமே வைத்துக் கொள்ளட்டும்” என்றார்கள்.
994. எவரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதனைத் தானே பயிரிடட்டும்; அல்லது அதனை தன் முஸ்லிம் சகோதரர் எவருக்காவது (பிரதிபலன் எதிர் பார்க்காமல் இலவசமாகப் பயிர் செய்யக் கொடுத்து விடட்டும். இவ்வாறு செய்ய அவர் மறுத்தால் தன் நிலத்தை அப்படியே (பயிரிடாமல்) வைத்திருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
995. ”நபி (ஸல்) அவர்கள் ‘முஸாபனா, முஹாகலா’ எனும் வியாபாரங்களைத் தடை செய்தார்கள். ‘முஸாபனா’ என்பது மரங்களின் உச்சிகளிலுள்ள பேரீச்சம் பழங்களை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு (பண்டமாற்று முறையில்) விற்பதாகும்!”
996. நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும், முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் தம் நிலங்களை இப்னு உமர் (ரலி) குத்தகைக்குவிட்டு வந்தார்கள். பின்னர் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி) அறிவித்த, ‘நபி (ஸல்) அவர்கள் நிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடுத்தார்கள்” என்னும் நபிமொழி எடுத்துரைக்கப்பட்டது. இப்னு உமர் (ரலி) இதைச் செவியுற்றவுடனே ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நானும் சென்றேன். இப்னு உமர் (ரலி) ராஃபிஉ (ரலி) அவர்களிடம் இது குறித்து விசாரித்தார்கள். ராஃபிஉ (ரலி), ‘நபி (ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள். இதனைச் செவியுற்ற இப்னு உமர் (ரலி) ராஃபிஉ (ரலி) அவர்களிடம், ‘நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நீரோடைகளின் கரையோரமாக உள்ள நிலங்களின் விளைச்சலையும் சிறிது வைக்கோலையும் எங்களுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் நிலங்களைக் குத்தகைக்கு கொடுத்து வந்ததைத் தாங்கள் அறிந்திருக்கிறீர்களே” என்று கூறினார்கள்.