முலாமஸா முனாபதா முறை விற்பனைக்குத் தடை.

965. ”நபி (ஸல்) அவர்கள் ‘முனாபதா, முலாமஸா’ ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்!”

புஹாரி: 2146 அபூஹூரைரா (ரலி).

966. ”ஈதுல் ஃபித்ரிலும் (நோன்புப் பெருநாளிலும்) ஈதுல் அல்ஹாவிலும் (ஹஜ்ஜுப் பெருநாளிலும்) நோன்பு நோற்பதும் முலாமஸா, முனாபதா என்ற இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன!”என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1993 அபூஹூரைரா (ரலி).

967. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும், வியாபார முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள். வியாபாரத்தில் ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய முறைகளைத் தடை செய்தார்கள். ‘முலாமஸா’ என்றால், இரவிலோ பகலிலோ (ஒரு பொருளை வாங்கும்) ஒருவர் (விற்கும்) மற்றொருவரின் துணியைத் தம் கரத்தால் தொடுவதாகும். (அவ்வாறு தொட்டுவிட்டாலே வியாபாரம் உறுதியாகி விடும் என்ற நிபந்தனையின் பேரில்) அதைத் தொட்டதோடு முடித்துக்கொண்டு விரித்துப் பார்க்காமலேயே வாங்குவதாகும். ‘முனாபதா’ என்பது, ஒருவர் மற்றொரு வரை நோக்கித் தம் துணியை எறிய அந்த மற்றவர் இவரை நோக்கித் தம் துணியை எறிய (துணியைப் பிரித்துப்) பார்க்காமலும் பரஸ்பர திருப்தி இல்லாமலும் இருவருக்குமிடையிலான வியாபார (ஒப்பந்த)மாக அதுவே ஆகிவிடுவதாகும்.

ஆடை அணியும் முறைகள் இரண்டும் வருமாறு: 1. இஷ்திமாலுஸ் ஸம்மாஉ. அதாவது ஒருவர் ஒரே துணியைத் தம் தோள்களில் ஒன்றில் போட்டுக்கொள்ள அவரின் உடலின் இரண்டு பக்கங்களில் ஒன்று துணியின்றி வெளியே தெரிவதாகும். 2. இஹ்திபா அதாவது ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரிய (அதைத் துணியால் மறைக்காமல்) அமர்ந்திருப்பதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :5820 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.