மனைவியை விவாக ரத்துச் செய்ய எச்சரிப்பது தலாக்கு ஆகாது.

941. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்திடுமாறு தன் தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். என்னிடம் தான் முதன் முதலாக விஷயத்தைக் கூறினார்கள்: ‘(ஆயிஷாவே)! நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும் வரை அவசரப்பட வேண்டாம்” என்று கூறினார்கள். என்னுடைய பெற்றோர் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிடப் போவதில்லை என்று நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், ‘நபியே! உங்களுடைய துணைவியரிடம் கூறுங்கள்” என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 33:28, 29) இரண்டு வசனங்களை முழுமையாகக் கூறினார்கள். அப்போது நான், ‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்” என்று நபியவர்களிடம் சொன்னேன்.

புஹாரி :4785 ஆயிஷா (ரலி).

942. ”(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை” எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனம் அருளப்பட்ட பிறகும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் ஒரு மனைவியின் நாளில் மற்றொரு மனைவியிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்கும்படி அனுமதி கேட்பார்கள்” என்று ஆயிஷா (ரலி) கூறினார். நான், ‘அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! (வேறொரு மனைவிக்காக என்னுடைய நாளை விட்டுக்கொடுக்கும்படி,) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காக வேண்டியும் தங்களைவிட்டுக் கொடுக்க விரும்பமாட்டேன்’ என்று சொல்வேன்” என்றார்கள்.

புஹாரி :4789 ஆயிஷா (ரலி).

943. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான) எங்களுக்கு (விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்தார்கள். அப்போது நாங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் தேர்ந்தெடுத்தோம். இ(வ்வாறு உரிமை அளித்த)தை அவர்கள் தலாக் எனக் கருதவில்லை.

புஹாரி :5262 ஆயிஷா (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.