936. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள். எனவே, (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) இதைப்பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், ‘உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும்வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவர் விரும்பினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளை) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலக்கட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (திருக்குர்ஆன் 02:228 வது வசனத்தில்) அனுமதித்துள்ள (‘இத்தாக்’ காலத்தைக் கணக்கிட்டுக் கொள்வதற்கு ஏற்ற) காலக் கட்டமாகும்” என்று கூறினார்கள்.
937. நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (மாதவிடாயிலிருக்கும் மனைவியை மணவிலக்குச் செய்வது குறித்துக்) கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்: நான் மாதவிடாயிலிருந்த என் மனைவிக்கு மணவிலக்கு அளித்தேன். எனவே, (என் தந்தை) உமர் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்து) வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளவேண்டும். பிறகு அவள் ‘இத்தா’வை எதிர்கொள்வதற்கேற்ற (வகையில் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்த) நேரத்தில் (விரும்பினால்) அவர் தலாக் சொல்லட்டும் என அவருக்கு உத்தரவிடுங்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் கூறுகிறார்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘அது ஒரு தலாக்காகக் கருதப்படுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்து கொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?’ என்று கேட்டார்கள்.