926. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?’ எனும் சொல்லிக் கொண்டேன். ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்கவைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை” எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளியபோது, நான் ‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.
927. (அன்னை) மைமூனா (ரலி) அவர்களின் ஜனாஸாவில் (இறுதிப் பிரார்த்தனையில்) நாங்கள் ‘சரிஃப்’ எனும் இடத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டோம். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்: இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் துணைவியாராவார். இவரின் (உடல் வைக்கப்பட்டுள்ள) கட்டிலைத் தூக்கும்போது குலுக்கவோ அசைக்கவோ செய்யாதீர்கள்; மென்மையுடன் (எடுத்துச்) செல்லுங்கள். நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். எட்டுப்பேருக்கு இரவைப் பங்கிட்டு வந்தார்கள். ஒரேயொருவருக்கு மட்டும் பங்கிட்டுத் தரவில்லை.