920. நான் (என் கணவர்) நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அபூ சுஃப்யானின் மகளை தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!” என்று கூறினேன். அதற்கவர்கள், ‘இதை நீயே விரும்புகிறாயா?’ என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், ‘ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றேன். அதற்கு அவர்கள், ‘எனக்கு அ(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்டதன்று” என்றார்கள். நான் ‘தாங்கள் அபூ ஸலமாவின் புதல்வியை மணக்க விரும்புவதாக எங்களுக்குச் சொல்லப்பட்டதே!” என்று கேட்டேன். ‘(அதாவது என் துணைவியார்) உம்மு ஸலமாவிற்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?’ என நபியவர்கள் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அவள் (-உம்மு ஸலமாவின் மகள்-) என்னுடைய மடியில் வளர்ப்பு மகளாக இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்) அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூ ஸலமாவுக்கும் ஸுவைபா பாலூட்டினார். எனவே, என்னிடம் உங்கள் பெண் மக்களையோ, உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளுமாறு) பரிந்துரைக்க வேண்டாம்” என்று கூறினார்கள்.
921. என்னிடம் ஒருவர் அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். ‘ஆயிஷாவே! இவர் யார்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘என் பால் குடிச் சகோதரர்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆயிஷாவே! உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில், பால் குடிப்பதென்பதே பசியினால் தான்” என்று கூறினார்கள்.