குர்ஆன் வசனங்கள் மஹ்ராக….

898. ஒரு பெண்மணி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்” என்று கூறினார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தம் தலையைத் தொங்கவிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப்பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்து வைய்யுங்கள்!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, இறைத்தூதர் அவர்களே!” ஏதுமில்லை, இறைத்தூதர் அவர்களே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!” என்றார்கள். அவரும் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார். ‘இரும்பாலான ஒரு மோதிராவது கிடைக்குமா என்று பார்!” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லியனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பிவந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால், இதோ இந்த என்னுடைய வேட்டி உள்ளது” என்று கூறினார். -அறிவிப்பாளர் ஸஹ்ல் (ரலி) கூறினார்: அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை. எனவேதான் தன்னுடைய வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகக் கூறினார். -அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இந்த வேட்டியை நீர் அணிந்தால், அவளின் மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்தால், உம்மீது ஏதும் இருக்காது. (ஒரு வேட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்?)” என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்துகொண்டார். பிறகு, அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் வரவழைக்கப்பட்டபோது, ‘உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது” என்று கேட்டார்கள். அவர், ‘இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் உள்ளன” என்று எண்ணி எண்ணிக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (ஓதுவேன்)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்!” என்று கூறினார்கள்.

புஹாரி :5029 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).

899. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் (ஆடையின்) மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘இது என்ன?’ என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ‘ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து, ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘பாரக்கல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவானாக!” என்று பிரார்த்தித்துவிட்டு, ‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா – மணவிருந்து அளியுங்கள்” என்று கூறினார்கள்.

This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.