கவனத்தில் கொள்ளுங்கள்!

‘நான் (உங்களுக்கு எதுவும் கூறாது) விட்டுவிடும் போது, நீங்களும் என்னை (கேள்விகள் கேட்காது) விட்டுவிடுங்கள்! ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களிடம் கேள்வி கேட்டதனாலும், அவர்களுக்கு முரண்பட்ட காரணத்தாலுமே அழிந்து போயினர். நான் ஏதேனும் உங்களுக்குக் கட்டளையிட்டால் உங்களால் இயன்ற அளவு அதை செயல்படுத்துங்கள்! எதையாவது நான் உங்களுக்குத் தடுத்தால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!’ என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி 7288, முஸ்லிம் 1337, இப்னு ஹுஸைமா 2508, இப்னு ஹிப்பான் 18,21, பைஹகீ குப்ரா 1693 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் விளக்கம்: இந்த ஹதீஸ், தேவையற்ற கேள்விகளை நபி (ஸல்) அவர்களிடம் கேட்கக் கூடாது என்பதைச் சொல்கிறது. ஏனெனில் அக்கேள்விகளுக்கு பதில் சொன்னால் அது உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுக்கும், அல்லது சில வணக்க வழிபாடுகள் கட்டாய கடமையாக்கப்படலாம். ஏனென்றால் முன்சென்ற சமுதாயத்தினர் கேள்விகளை அதிகம் கேட்டார்கள், கடமையாக்கப்பட்ட போது அதை மீறினார்கள் என்பது இந்த ஹதீஸிலிருந்தே விளங்குகிறது. இறைகட்டளைகளை மொத்த சமுதாயமும் மீறும் போது அவர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளை உங்களால் முடிந்தவரை எடுத்து நடவுங்கள். அதாவது இங்கே ‘உங்களால் முடிந்த அளவு’ என்பதன் பொருளை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்’ என்ற 3:102 வது வசனம் இறக்கப்பட்ட போது நபித்தோழர்கள், ‘அல்லாஹ் விரும்புவது போன்று எவ்வாறு நம்மால் அஞ்ச முடியும், அவ்வாறு அஞ்ச வில்லையானால் நாம் தண்டிக்கப்படுவோமே’ என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது, ‘ஆகவே, உங்களால் இயன்ற அளவு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்’ (63:07) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.

இந்த இடத்தில் இன்னொரு வசனத்தையும் நினைவுபடுத்திக் கொள்வது அவசியமாகும். ‘அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை’ (2:286)ஒரு மனிதனின் நியாயமான அதிகபட்ச முயற்சி என்னவென்பது அவரவர்களுக்கு நன்றாகவே தெரியும். மனிதனை வேண்டுமானால் அவன் எளிதாக ஏமாற்றிவிட முடியும். படைத்த இறைவனை ஏமாற்ற முடியாது. இதை அல்லாஹ்வை அஞ்சும் விஷயத்தில் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.